இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கட்டுரைகள் நீதியைத்தேடி குடியரசுக் கொண்டாட்டம்!

குடியரசுக் கொண்டாட்டம்!

குடியரசு கொண்டாட்டம்குடியரசுக் கொண்டாட்டம்!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

ப்படிப்பட்ட தலைப்பு கொண்ட கட்டுரையைக் கிட்டத்தட்ட குடியரசுக் கொண்டாட்டம் முடியும் தருவாயில் எழுதியுள்ளேனே என எண்ண வேண்டாம். இதற்கான காரணம் கட்டுரையின் இறுதிப்பகுதியில் நன்றாகவே விளங்கும்.

உலகில் பல குடியரசு நாடுகள் உள்ளன. அவைகளில் பல தாங்களுக்குத் தாங்களே மிகப்பெரிய குடியரசு நாடு என சொல்லிக் கொள்கின்றன. இந்த வகையில் நாமும் உலகின் மிகப்பெரிய குடியரசு என சொல்லிக் கொள்ள தவறுவதில்லை.

எனது சட்ட ஆராய்ச்சியை 2000 ஆம் ஆண்டில் துவக்கிய போது, நமது நாடு எப்படி உலகிலேயே மிகப்பெரிய குடியரசாக இருக்க முடியும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், அதற்கான விடை கிடைக்க சுமார் ஆறு வருடங்களானது. ஏனெனில், எனக்கு தெரிய குடியரசு என்பதற்கான விளக்கம் என்ன என்பது எந்த சட்டத்திலும், பள்ளிக்கல்வி பாட திட்டத்திலும் கூட இல்லை. குடியரசு நாட்டில் இதைவிட கொடுமை என்ன இருக்க முடியும்?

குடியரசு என்பதற்கு மக்களால், மக்களை ஆள்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் அரசு என்ற கருத்தே பரவலாக இருக்கிறது. எல்லா நாட்டிலும் குடிமக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். மாறாக, ஆடு, மாடுகள் அரசைத் தேர்ந்தெடுப்பது இல்லை.

தனி மனிதரான நாம், நமக்காக நாமே சில கொள்கைகளை, கட்டுப்பாடுகளை, நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகிறோம் அல்லவா? அதுபோல, வெள்ளையர்களின் அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும், “இந்திய குடி மக்களாகிய நாம், நமது, அடிப்படை உரிமை, சம உரிமை, சமய உரிமை, வழிபாட்டு உரிமை மற்றும் ஒவ்வொருவரும் ஆற்ற வேண்டிய கடமை உட்பட, பலவற்றை உள்ளடக்கி வரையறை செய்து கொண்ட, உறுதிமொழி கடப்பாட்டு ஆவணமே இந்திய அரசமைப்பு!’’.

இதனை ஆங்கிலத்தில் Indian Constitution என்கிறோம்.

இதனைத்தான் நாம் வழக்கத்தில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரித்தான சட்டம் என்பது போல, ‘‘இந்திய அரசியல் சட்டம்’’ என தவறாக சொல்கிறோம். சினிமா உட்பட பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

உண்மையில் இதில் நாட்டில் இயங்கக்கூடிய அனைத்து விடயங்களும் இடம் பெற்றுள்ளதால், இதனை இந்திய சாசனம் என்று சொல்வதே மிகச்சரியானதாக இருக்கும்.

இதில் வரையறை செய்யப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு, சாதாரண குடிமக்கள் முதல் குடியரசுத் தலைவர் வரை கட்டுப்பட்டே ஆக வேண்டும். அதாவது, இதற்கு உட்பட்டுதான், நமது இந்தியத் தாய்த்திருநாட்டை இயக்க வேண்டும். ஆனால், பல விடயங்களில் இயக்கிக் கொண்டிருப்பது இதற்கு புறம்பாகத்தான். இதற்கான காரணம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதும், நாம் இதுபற்றிய விழிப்பறிவுணர்வு இல்லாமல் இருப்பதுமே ஆகும்.

இந்த அரசமைப்பு செயலுக்கு வந்த நாளைத்தாம், ‘‘நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்’’. அந்த வகையில், 26.01.2012 ஆன இன்று, நமது 63-வது மூத்தக் குடியரசைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வரிய தருணத்திலாவது, இந்திய அரசமைப்பைப் பற்றி தெள்ளத்தெளிவாக தெளி(ரி)ந்து கொள்வோம்.

இந்த அரசமைப்பில், குறிப்பிட்ட காலம் நாட்டை ஆட்சி செய்யத் தேவையான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் என்ற கட்டமைப்பை உருவாக்கி, அதன் மூலம் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றவர்களைக் குடியரசாக ஆள பொறுப்பேற்கச் செய்வது, முதல் கடமை!

இப்படி, குடிமக்களால், மக்களால், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதையே முறையே குடியரசு, மக்களாட்சி, ஜனநாயகம் என பல்வேறு பெயர்களில் சொல்கிறோம்!

இந்த அரசின் மூலம் மக்களின் உரிமைகளை, தேவைகளை பூர்த்தி செய்யும் சட்ட திட்டங்களை வகுத்து, அதனைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஊழியர்களை நியமிப்பது, சட்ட திட்டங்களைக் குடிமக்கள் மீறும் போது அல்லது ஊழியர்கள் செயல்படுத்தாத போது ஏற்படும் உரிமை மீறல் அல்லது கடமை தவறுதல் ஆகிய குற்றங்கள் மேன்மேலும், நடை பெறாத வண்ணம் தடுத்து நிறுத்தி, நியாயத்தை நிலைநாட்ட தேவையான நீதித்துறை என்ற கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவைகள் அரசின் பிரதான கடமைகள்.

சகோதரத்துவம், சமத்துவம், சமநீதி ஆகியவற்றைக் காக்க, உண்மையைக் காக்க வைக்க வேண்டியதும், கண்டறிய வேண்டியதும் நீதித்துறையின் பிரதான கடமையாகும்.

இவைகள் எல்லாம் சரியாக நடக்க தேவையான சட்டங்களை அமல்படுத்தி,  கண்காணித்து, கலந்து ஆலோசித்து, சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான முடிவை எடுக்க வேண்டிய பிரதான கடமை குடியரசுத் தலைவருடையது. தேவைப்பட்டால் நெருக்கடி நிலையைக் கூட அமல்படுத்தும் அதிகாரமும் இவருக்கு இருக்கிறது.

எனவேதான், அவர் குடியரசின் முதல் குடிமகன்(ள்) என்று அழைக்கப்பட்டாலும், அவரது அதிகாரம் ‘‘ஓர் ரப்பர் ஸ்டாம்பைப் போன்றதே’’ என்ற நம்பிக்கையே பரவலாகவும், பலவாறாகவும் இருக்கிறது. குடியரசுத் தலைவரும் கூட இப்படித்தான் தனது அதிகாரம் குறித்து கருதுகிறார் என்பதை உணர்ந்து, அவருக்கான சட்ட அதிகாரங்கள் என்னென்ன என்பதை விளக்கி விரிவான ஆங்கில கடிதம் ஒன்றைக் கடந்த 18-01-2012 அன்று அனுப்பியுள்ளோம்.

இக்கடிதம் குறித்து நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து எங்களை உலாப்பேசியில் தொடர்பு கொண்டார்கள். இப்படி தொடர்பு கொள்கிறார்கள் என்றால், அக்கடிதத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியிருக்காது. இக்கடிதத்தை 22 தேசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து நூலாகவே வெளியிட உள்ளோம். ஏனெனில், அக்கடிதத்தின் நகலை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் குறியீடு செய்து உள்ளோம்.

எனவே, அதன் தமிழாக்கத்துடனான கட்டுரையைக் கூடிய விரைவில் ‘‘குடியரசுத் தலைவர் ரப்பர் ஸ்டாம்பா?!’’ என்ற தலைப்பிலேயே வெளியிடுவேன் என நீங்கள் உறுதியாக நம்பலாம். இவரைத்தவிர மற்றவர்கள் எவருக்குமே தாங்கள் எத்தனையாவது குடிமகன்கள் அல்லது குடிமகள்கள் என யாருக்கும் எதுவும் தெரியாது. இனியும் தெரிய வாய்ப்பில்லை.

மொத்தத்தில், எவரும் தனது அதிகாரத்தை, துஷ்பிரயோகம் செய்ய முடியாத வகையிலும், அப்படியே செய்தாலும் அதனை மற்றவர்கள் சரி செய்து விடும் நிலையிலேயே பின்னிப் பிணைத்து இந்திய அரசமைப்பில் அதிகாரங்கள் பகரப்பட்டுள்ளன.

இதனை ரத்தினச்சுருக்கமாக “பரவலாக்கப்பட்ட அதிகாரம்” எனலாம். ஆனால், அண்ணா ஹசாரே இன்று கூட அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என சட்டக் கட்டமைப்பு குறித்த விழிப்பறிவுணர்வு இன்மையால் பேசியுள்ளார். இப்படிப்பட்ட நமது நாட்டின் சட்டக் கட்டமைப்பை நாம் புரிந்து கொள்வதென்பது மிக மிக எளிது.

நாட்டில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு அம்மா என்ற பெயரை வழங்குவது அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையே! அம்மாதான் அக்குழந்தைக்குத் தந்தை யார் என்பதை அடையாளம் காட்டுகிறாள். இதுதான் குடும்பத்தின் கட்டமைப்பு. இதுபோலவேதான், நாட்டின் கட்டமைப்பும்.

மக்கள் அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். அரசு தேர்தல் ஆணையம், நீதித்துறை போன்ற பல்வேறு அதிகார பீடங்களை ஏற்படுத்துகிறது. அரசிடம் வேலைபார்ப்பவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர். அதிகார பீடங்களில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் பொது ஊழியர்கள் ஆவர். கடைநிலை ஊழியர்களான தோட்டிகள் முதல் குடியரசுத் தலைவர் வரை அனைவருமே மக்களுக்கான நிரந்தர ஊழியர்கள்தாம். இடையிடையே வந்து செல்லும் அரசியல்வாதிகள் தற்காலிக ஊழியர்கள்தாம்.

அரசு ஊழியர்களும், பொது ஊழியர்களும், அரசியல் ஊழியர்களும் நமக்கான ஊழியர்கள் என்றால், நாமும் நிச்சயமாக எவருக்காவது ஊழியர்களே! ஊழியர்கள் என்றால் கேவலமானவர்கள் அல்ல. மாறாக, மரியாதைக்கு உரியவர்களே!!

ஆனால், அரசு ஊழியர்களும், பொது ஊழியர்களும் தங்களுக்குத் தாங்களே பெருமை தேடிக் கொள்ளும் விதமாக ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து வந்த அதிகாரி, அலுவலர், நீதிபதி, நீதியரசர், குடியரசுத் தலைவர் போன்ற பல்வேறு பெயர்களைக் கௌரவமாக சூட்டிக் கொண்டுள்ளனர். இதனாலேயே அவர்களை அகங்காரம் குடிகொள்கிறது.

ஆங்கிலேயர் அடிமை ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்த இவ்வங்கார பழக்க வழக்கம் குடியரசு நாட்டிலும் நீடித்துக் கொண்டுதான் இருப்பது கொடுமையிலும் கொடுமை. இதனைத் தகர்க்கும் முயற்சியாக நான் இவர்களில் எவருக்காவது கடிதம் எழுத வேண்டியிருந்தால், மரியாதைக்குரிய பொது ஊழியரே என்றுதான் எழுதுகிறேன்.

சமீபத்தில் நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் எழுதிய கடிதத்தில் கூட இப்படித்தான் எழுதினேன். இப்படி எழுதுவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை என்பதை நீங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டால், நமக்கான ஊழியர்களைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் உங்களின் சட்ட அறிவைக் கண்டு கடமையைச் செவ்வனே செய்வார்கள்.

இந்திய சாசனத்தைக் குறிப்பிட்டதொரு தனி நபரோ அல்லது ஒரு குழுவோ எழுதியதாக பரவலானதொரு கருத்து இருக்கிறது. இது உண்மையல்ல. சொந்தமாக சட்டத்தை வரைவு செய்யும் அளவிற்கு நம்மில் யாருக்கும் திறமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. சட்டத்தை எழுதுபவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இதுவும் முற்றிலும் தவறு.

சட்டப்படிப்பு படித்தவர்களே எழுதுகிறார்கள். இப்படி எழுதுவதில் கூலிக்கு மாரடிக்கும் வக்கீல்களும், இடைதரகர்களும் ஆன வக்கீல்களும், சட்டப்படிப்பு படித்து வக்கீல் தொழில் செய்யாதவர்களுமே எழுதுகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவே கிடையாது என்பது குறித்து இதற்கு முன்பாக எழுதிய கட்டுரைகளைப் படித்து தெளிந்து இருப்பீர்கள்.

நாம் மற்றவர்களைப் பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் ஆகியற்றில் நமக்கு எது சரியானது, பொருத்தமானது, பிடித்தமானது என தேர்ந்தெடுத்துக் கொள்கிறோமோ அது போலவேதான், நமது இந்திய சாசனமும் நமக்காக நாமே உருவாக்கி கொண்டதுதான் என்றாலும், சுயமாக, சொந்த அறிவால் உருவாக்கியது அன்று. மாறாக, ‘சுற்றத்து நாடுகளிடம் இருந்த நல்ல நல்ல விடயங்களை எல்லாம் சுத்திகரிப்பு செய்ததேயாகும்’.

இப்படி காப்பியடித்தும், அது எந்த அளவிற்குச் சரியானது என்றும் விவாதித்து ஏற்றுக் கொண்ட வகையில்,

1.     அடிப்படை உரிமைகள் - அமெரிக்கா
2.     அடிப்படை கடமைகள் - அயர்லாந்து
3.     அரசமைப்புத் திருத்தம் - தென்னாப்பிரிக்கா
4.     மத்திய, மாநில அரசுகளின் அதிகாரபாகுபாடு - கனடா
5.    அவசர நிலை பிரகடனம் - ஜெர்மன்
6.     குடியரசுத் தலைவரின் அதிகாரம், பாராளுமன்ற அமைப்பு, பிரதமர் அதிகாரம் - இங்கிலாந்து

ஆகிய நாடுகளை முன்மாதிரியாக கொண்டவைகளாகும்.

நான் இந்தியன் என்பதற்காக நமது சட்டங்களைப் புகழ்ந்து பேசுபவன் அல்ல. மாறாக, நியாயத்துக்கு புறம்பான சட்டங்களைச் சாடுவதும் உண்டு என்பதையும் முந்தைய கட்டுரைகளில் படித்து உணர்ந்திருப்பீர்கள்.

எனது பதினோரு வருட சட்ட ஆராய்ச்சி மற்றும் உலக நாடுகளின் சட்டங்களை ஆராய்ச்சி செய்யாமலே பார்த்த வகையில், உலகில் நாமே மிகப்பெரிய குடியரசு என்கிற முடிவுக்குக் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டேன். எனது இம்முடிவு எதிர்காலத்தில் அயல்நாட்டு சட்டங்களை ஆராய்ச்சி செய்ய நேர்ந்தாலும் கூட மாறாது என்றே உறுதியாக நம்புகிறேன்.

ஏனெனில், உரிமையைப் பொறுத்த வரையில், ஒருவர் எந்த நாட்டை, மதத்தை, இனத்தை, மொழிக்ச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு அவர்களின் தாய்த்திரு நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ, அவைகளை, உலகில் உள்ள பல குடியரசு நாடுகளில், அப்படியே வழங்கும் ஒரேநாடு, நமது இந்தியா மட்டுமேதாம்!

சரி! உரிமையில் அவரவர்களது அதே உரிமை என்றால், தண்டனையில் அவரவர்களது தண்டனையா என்றால் அதுதான் இல்லை. அப்படி இருந்திருந்தால் நாமே மிகப்பெரிய குடியரசு என மார்தட்டிக் கொள்ள முடியாது. யாவருக்கும் பொதுவான தண்டனையே என்பது மிகப்பெரிய குடியரசுக்கு மேலும் கூடுதல் வலு சேர்க்கிறது.

இது குறித்த அடிப்படையான சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாத ஒரே காரணத்தினாலேயே, நாம் நமது மாபெரும் குடியரசின் மகிமையை உணராமல் இருக்கிறோம். குடியரசை இன்றொரு நாள் மட்டும் சம்பிரதாயமாக கொண்டாடுவது கொண்டாட்டமல்ல.

மாறாக, சட்டப்படியான சமூக கடமை உணர்வோடும், சுமூக உரிமை உறவோடும் உறவாடுவதே உண்மையான குடியரசில் என்றென்றும் உங்களுக்கான கொண்டாட்டம்.

(இந்நேரம்.காம் ஆர்கைவ் தளத்திலுள்ள 'நீதியைத்தேடி..' பதிவுகள் முழுவதையும் இங்கு காணலாம்)

Comments  

 
0 # கோபாலகிருஷ்ணன் 2012-02-02 09:01
////// உரிமையைப் பொறுத்த வரையில், ஒருவர் எந்த நாட்டை, மதத்தை, இனத்தை, மொழிக்ச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு அவர்களின் தாய்த்திரு நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ, அவைகளை, உலகில் உள்ள பல குடியரசு நாடுகளில், அப்படியே வழங்கும் ஒரேநாடு, நமது இந்தியா மட்டுமேதாம்!

சரி! உரிமையில் அவரவர்களது அதே உரிமை என்றால், தண்டனையில் அவரவர்களது தண்டனையா என்றால் அதுதான் இல்லை. அப்படி இருந்திருந்தால் நாமே மிகப்பெரிய குடியரசு என மார்தட்டிக் கொள்ள முடியாது. யாவருக்கும் பொதுவான தண்டனையே என்பது மிகப்பெரிய குடியரசுக்கு மேலும் கூடுதல் வலு சேர்க்கிறது .////

...ஆசிரியர் பாலா அவர்களுக்கு,

இந்திய குடியரசு பற்றி மிக அருமையான ஆய்வு.

‘குடியரசுத்தலைவர் ரப்பர் ஸ்டாம்ப்பா?’ ----இக்கட்டுரையை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

நன்றி வாழ்த்துகள்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Siraj 2012-02-27 21:03
Great, Thanks much, Mr. Bala. I just came to know about your articles on Indian Law. I'm going thorugh the archives now :-)

Regards,
Siraj
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: