இதற்கு நிகரான மருந்து உண்டோ! Featured

Friday, 28 April 2017 12:06 Published in நலவாழ்வு

திரிகடுகம்

(சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சனைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்.

இனப்பெருக்க உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும், கரு முட்டை வெடித்தல் குறைபாடுள்ள பெண்களுக்கு நல்லது. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள், அதிகக் கொழுப்பு சத்துள்ள நோயாளிகள், உடல் வீக்கம், வளர்சிதை மாற்றமுள்ள நோயாளிகளுக்கு இது தக்க துணைமருந்துகளோடு நன்றாக வேலை செய்யும். பல பற்ப, செந்தூரங்களைக் கொடுக்கும்போது, திரிகடுகம் மூல மருந்தாகி சூரணமாகப் பயன்படுத்தலாம்.
சுக்கின் மகிமை

கார்ப்பு சுவை உடைய இது உஷ்ண வீர்யம் உடையது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும். சௌபாக்ய சுண்டி என்ற மருந்து இதனால் செய்யப்படுகிறது. இது ருசியை அதிகரிக்கும், இலகு குணம் உடையது, மலத்தைப் பிரிப்பது. இதனால் செய்யப்பட்ட நெய், கிரஹணி ரோகத்தை மாற்றும். சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும். சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.

வில்வத்துடன் சேர்த்துக் காய்ச்சினால் வாந்தியைப் போக்கும். சுக்கும், வெல்லமும், எள்ளும் இடித்துச் சாப்பிட மாதவிடாய் வலி மாறும். சுக்கை ஆயுர்வேதம் ‘மஹெளஷதம்‘ என்று குறிப்பிடுகிறது. மருந்துகளில் உத்தமமானது சுக்கு என்று இதற்கு அர்த்தம். இஞ்சியை நன்கு காய வைத்தால், கிடைப்பதே சுக்கு. குழந்தைகளுக்குச் சுக்கு நல்ல மருந்து. கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய் ஆகிய வற்றில் ஒன்றிரண்டுடன் சுக்கை அரைத்து மருந்தாகப் புகட்டுவார்கள். பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.

சுக்குக்குப் புறமே நஞ்சு, கடுக்காய்க்கு அகத்தே நஞ்சு’ என்பது பழமொழி. அதனால் சுக்கை மேல் தோல் நீக்கியே, மருந்து தயாரிக்கப்பயன்படுத்த வேண்டும். பல் வலிக்கு - சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும். ஒவ்வொரு நாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது, இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் காக்கும். இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுத்தும், புதிய அடைப்பு உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இஞ்சியைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் தோலை நன்றாக நீக்க வேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கைச் சுத்தம் செய் யும்போது, அதன் மேல் சுண்ணாம்பைத் தடவிக் காயவைத்து நெருப்பில் சுட்டு, பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது; சுத்தம் செய்யாமல் பயன்படுத்த வேண்டாம்.

இஞ்சியைச் சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டுச் சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவுக்குச் சேர்த்து நான்கு நாள் கழித்துத் தினசரி ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்துக்குச் சாப்பிட்டுவரலாம். அப்போது உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.