இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கட்டுரைகள் வாசகர் கட்டுரைகள் மூடப்படும் சிறந்த தபால் நிலையங்கள்!

மூடப்படும் சிறந்த தபால் நிலையங்கள்!

மூடப்படும் சிறந்த தபால் நிலையங்கள்!மதுரை தபால் மண்டலத்தில் தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் அடங்கும். மதுரை நகரில் ஸ்காட் ரோடு, அரசரடி, தல்லாகுளம் ஆகியவை தலைமை தபால் அலுவலகங்கள் ஆகும். இது தவிர, மதுரை நகரில் பின்கோடுடன் கூடிய 22 தபால் நிலையங்களும், சுமார் 20 சிறிய தபால் நிலையங்களும் உள்ளன.


இந்த நிலையில், 6 வது ஊதிய குழு பரிந்துரையில் ஒரு தபால் நிலையத்துக்கும் மற்றொரு தபால் நிலையத்துக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும். அப்படியில்லாத சிறிய தபால் நிலையங்களின் எண்ணிக்கையைக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டது.

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல முறையில் செயல்பட்டு வந்த சிறிய தபால் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த தபால் நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள்(டிசம்பர் 31 ஆம் தேதி)  பெரியார் பேருந்து நிலைய தபால்நிலையம், ராஜாஜி மருத்துவமனை தபால்நிலையம், மேலூர் கிழக்கு, திருமங்கலம் புதுநகர் தபால் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில் பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள தபால் நிலையத்தை வருகிற ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் டவுன்ஹால் ரோடு தபால் நிலையத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் பேருந்து நிலைய தபால் நிலையம் நகரின் மையப்பகுதியில் மாநகராட்சி கட்டிடத்தில் அமைந்துள்ளது.

இந்தத் தபால் நிலையம் 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு சுமார் 600 வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது தவிர, எம்.சி., யூ.சி., பள்ளிக்கூடங்கள், ஸ்டேட் வங்கி, டி.வி.எஸ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் இங்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

இந்தத் தபால் நிலையத்தில் பொதுமக்களின் வைப்பீட்டு தொகையாக சுமார் ரூ.25 லட்சம் உள்ளது. நகரில் உள்ள பெரும்பாலான தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மயமாகி விட்டதால் இந்தத் தபால் நிலையம் மட்டும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் தபால் நிலையமாக உள்ளது.

குறிப்பாக மணியார்டர் அனுப்பும் போது தகவல் பக்கத்தில் விவரங்கள் எழுதுவதற்காக பெரும்பாலானோர் இந்தத் தபால் நிலையத்தை நாடி வருகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு 800 மணியார்டர்கள் வரை அனுப்பப்படுகின்றன.

பள்ளிக்கூடங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்டாம்பு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.500 மட்டுமே வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது.

மிகவும் லாபகரமாக இயங்கி வரும் இந்தத் தபால் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் தெரிவிக்க மறுத்து விட்டனர். பொதுமக்களின் விருப்பத்துக்கு இணங்கி நல்லமுறையில் செயல்பட்டு வரும் இந்தத் தபால் நிலையத்தை இடமாற்றம் செய்யும் முடிவினைக் கைவிடவேண்டும்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: