மனிதனுக்கு கிடைக்கப்பெற்ற வரங்களுள் விஞ்ஞான அறிவு மிகவும் சிறப்பானது. அந்த விஞ்ஞான அறிவு கொண்டு, தான் இறந்தபின்னும் தனது சந்ததிகளைப் பெருக்கும் வழிமுறைகளை மனித இனம் கண்டறிந்துள்ளது.
மருத்துவ அதிசயமாக, கணவன் இறந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் கணவனின் உயிரணுக்களைக் கொண்டு செயற்கை முறையில் கருத்தரித்த அனுரிதாவைப் பற்றி முன்னர் 'இந்நேரத்தில்' குறிப்பிட்டிருந்தோம்.
அனுரிதாவின் வெற்றிகரமான கருத்தரிப்பைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் தங்களது ஆண்துணை இறந்து போகும் நிலையில் அவர்தம் உயிரணுக்களைச் சேகரித்துவைத்து எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பெண்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.
1990 ஆம் ஆண்டு டயானா ப்ளட் என்னும் பெண், கோமாவில் இருந்த தன் கணவனின் விந்தணுவைக்கொண்டு கர்ப்பந்தரித்த செய்தியே இதில் முதலாவது. எனினும், இச்செய்தி அதிக கவனம் பெறவில்லை. டயானாவின் இருமகன்கள் லியாம் (13), ஜோயல்(9) இவ்விதம் பிறந்தவர்களே.
இங்கிலாந்தின் சுமார் 176 மருத்துவ மையங்களில், இறந்த அல்லது இறக்கும் தருவாயில் உள்ள ஆண்நோயாளிகளின் விந்தணுக்களைச் சேகரித்துப் பதப்படுத்த கோரிக்கைகள் வந்தனவா என்று கேட்கப்பட்டதற்கு, நான்கு மையங்கள் தலா ஒரு கோரிக்கையினையும், மூன்று மையங்கள் தலா இரண்டு கோரிக்கைகளையும் அவ்வாறு பெற்றுள்ளதாகத் தெரிவித்தன.
NHF அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் நியூகாசில் மருத்துவமையம் அவ்வாறு ஒரு வேண்டுகோளைப் பெற்று, ஒருவரின் விந்தணுக்களைச் சேகரித்துள்ளது. எனினும், செயற்கை கருத்தரித்தல் முறையில் அது இன்னமும் பயன்படுத்தப்படவில்லை.
நீதிமன்ற அறிவுறுத்தலுக்கிணங்கி கிங்ஸ்ட்டன் மருத்துவமையமும் அப்படியொரு விந்தணு சேகரிப்பை மேற்கொண்டது. செயற்கைக் கருத்தரித்தலுக்கு அச்சேகரிப்பு பயன்பட்டது பற்றி இதுவரை தெரியவரவில்லை.
லீசெஸ்டர் பல்கலைக்கழக மருத்துவமனையும் விந்தணுவைச் சேகரித்துவைக்கக் கோரும் இரு விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், ஆயினும் அதற்கு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட விந்தணுக்களைக் கொண்டு செயற்கையாகக் கருத்தரித்து காலந்தாழ்ந்து பிள்ளைகள பெறுவதை சமூக அறிஞர்கள் எதிர்த்துள்ளனர். "பெற்றோராகும் ஆசையை விட, அந்தக் குழந்தைகளின் மனநலமும், உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை" என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed