×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 29

Thursday, 17 March 2016 23:17

அவ்வப்போது 19: போராளி! Featured

Written by
Rate this item
(1 Vote)

“அந்த நாயை வெட்டிக் கொன்னுடு” என்று ஐம்பதாயிரம் ரூபாயை டேபிளில் போட்டார் மேனகாவின் தந்தை.

தன் முதலாளியை நிமிர்ந்து பார்த்தான் இளங்கோவன். ஆத்திரமும் வெறியும் அவரது கண்களில் கலந்திருந்தது. தலையை ஆட்டியபடி கவனமாகப் பணத்தை எடுத்து தனது பேண்ட் பேக்கட்டிற்குள் பத்திரப்படுத்திக் கொண்டான்.

“நாளைக்கே முடிஞ்சிடும்யா! நீங்க கவலைப்படாதீங்க.”

“சாகனும். அந்த நாய் சாகனும். நீ செய். கோர்ட் கேஸு எல்லாம் என் பொறுப்பு.”

படிப்பில் சுட்டியாக இருக்கிறாளே என்று தம் மகளைச் சென்னையில் உள்ள கல்லூரியில் பட்ட மேல்படிப்பு படிக்கச் சேர்த்தார் அவர். அவரது சாதியிலும் சரி, குடும்பத்திலும் சரி பெண்களுக்கு அத்தனை வயது வரை திருமணத்தைத் தள்ளிப்போடுவது அசாதாரணம்.

“நீங்க கைகாட்டுபவரை நிச்சயம் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனால் இந்த இரண்டு வருஷம் மட்டும் எனக்கு அவகாசம் கொடுங்கப்பா. மாஸ்டர்ஸ் முடித்து விடுவேன்” என்று கெஞ்சிய மகள் மேனகாவிடம் அவருக்கு வெகு செல்லம். இளகினார். என்ன பெரிய விஷயம். படித்த மகளுக்கு இன்னும் மெத்தப் படித்த மாப்பிள்ளையைத் தேடினால் போச்சு என்ற கெத்து மனத்திற்குள் ஏறி புன்னகையுடன் சம்மதித்தார்.

ஆனால் விதி, படிக்கச் சென்ற இடத்தில் அவளுக்குக் காதல் பிறந்தது. நாள், நட்சத்திரம், ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் வாடகைக் கார் நிறுவனத்தின் ஓட்டுனராகப் பணிபுரியும் ஆனந்தன்மீது கண்மண் தெரியாமல் காதல் தோன்றிவிட்டது. அவனுடன் கை கோர்த்து, சென்னையெல்லாம் சுற்றித் திரிந்து ஆசவாசமடைந்து யோசிக்கும்போதுதான் அவளுக்குப் பகீரென்றது. சாதிப் பாச அப்பா, கீழ் சாதியைச் சேர்ந்த தன்னுடைய காதலனை வீட்டுக் கூடம் வரை கூட அனுமதிக்கமாட்டார். இதில் காதல், கல்யாணம் என்று போய் நின்றால்?

“டேய்! நாம் அடுத்த வாரம் பதிவுத் திருமணம் செஞ்சுப்போம்” என்று சத்யம் தியேட்டரில் பாப்கார்ன் கொறித்துக் கொண்டே சொல்லிவிட்டாள்.

நண்பர்களின் உதவியுடன் காதலர் தம்பதியர் ஆனார்கள். மாலையும் கழுத்துமாய் மேனகா வீட்டில் போய் நின்றவர்களின்மீது செருப்பு பறந்து வந்து விழுந்தது. திட்டு தொடர்ந்தது. காதைப் பொத்திக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிவந்து தனிக்குடித்தனம் தொடங்கி விட்டார்கள்.

இவர்கள் இங்கு காதல் கிறக்கத்தில் கிடக்க அங்கு அவள் அப்பாவினுடைய தூக்கத்தைக் கெடுத்துச் சாகடித்துக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள். அவரது சாதியைச் சேர்ந்த ஒவ்வொருவனும் ஆறுதல் சொல்கிறேன் என்ற பெயரில் அவரது ஆக்ரோஷத்தைத் தூண்டித் தூண்டி ஒப்பாரி வைக்க, அவரது ஆணவம் முடிவெடுத்தது.

“அந்த நாயை வெட்டிக் கொல்லுடா.”

0-0-0

தற்கு முந்தைய நாள்.

சான்ஃபிராஸ்கோ நகரில் எக்ஸ்ஃபோன் கம்பெனியின் சி.ஈ.ஓ. மெக் ஆடமைச் சந்தித்தான் ஐஸிக். எக்ஸ்ஃபோனின் ஆராய்ச்சிப் பிரிவில் முதல் நிலை டிஸைனராக எழுபது பேர் குழுவை நிர்வாகம் செய்வது அவனது பணி. பெரும் பிரயத்தனத்திற்குப் பிறகு மெக் ஆடமைச் சந்திக்க அனுமதி கிடைத்திருந்தது.

“சொல்லு ஐஸிக். நமக்கு அறுபது நிமிடம் அவகாசம் இருக்கிறது. மூன்று மணி நேரத்தில் எனக்கு ப்ளைட். இந்தியா செல்கிறேன்.”

அவரைச் சந்திக்கும்போது ஒவ்வொரு நொடியும் முக்கியம், வீணாக்க முடியாது என்பதால் ஐஸிக் தனக்குள் பலமுறை பேசி ஒத்திகை பார்த்திருந்தான்.

“நமது ஃபோனின் அடுத்த டிஸைனில் ஸோனோஜெனிடிக்ஸ் திறமையை உள்ளடக்க வேண்டும். ஐஃபோனை நாம் சாப்பிட்டு விடலாம்.”

அவன் நினைத்தபடி அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதி அவரைக் கவர்ந்து, கவனத்தை ஒருமுகப்படுத்தினார்.

“விவரி” என்றார்.

“TRP-4 என்றொரு புரொட்டீன். மாலிக்யூலர் நியூரோ பயாலஜி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அல்ட்ரா சவுண்டின் தனித்துவம் வாய்ந்த கீழ்மட்ட அலைவரிசைக்கு அது வசியப்படுகிறது. அதன் வாயிலாக மின்னணுக்களைக் கடத்தி மனிதனின் மூளை செல்களை விருப்பத்திற்கேற்பத் தூண்ட முடிகிறது. இக்கண்டுபிடிப்பு பார்க்கின்ஸன் வியாதிக்கு அருமருந்தாக அமையும் என்று நம்புகிறார்கள்.”

“தொடரவும்” என்று டேபிளில் முழங்கைகளை ஊன்றி விரல்களைக் கோர்த்து முகவாயைத் தாங்கிக்கொண்டார்.

“மனித மூளையில் 86 பில்லியன் நியூரான்கள் உள்ளன. அதில் நமக்குத் தேவையான நியூரானைச் சரியான முறையில் தட்டினால் அது செய்ய வேண்டிய பணியை உந்தலாம். எனது தலைமையில் சிறு டீம் நமது ஃபோனுக்கு மென்பொருள் ஒன்றைத் தயாரித்துள்ளோம். TRP-4 இன் உதவியுடன் மனித மூளையின் நியூரானை அது தட்டி எழுப்பும். அவனை நமது மென்பொருள் செயல்படுத்தும்.”

“சிறு உதாரணம் கொடு ஐஸிக்.”

“நம் ஃபோனில் வாடிக்கையாளர் படம் பிடிக்கிறார். அப்பொழுது ஒரு குற்றம் நடக்கிறது. உதாரணத்திற்கு வங்கிக் கொள்ளை. நாம் நமது ஃபோனில் உள்ளடக்கப் போகும் இந்த புது மென்பொருள் குற்றப்பட்டியலின் தரத்திற்கு ஏற்ப பயனாளரின் மூளையைத் தூண்டி, செயல்படுத்தி, குற்றவாளியைப் பிடிக்க, அவனைத் தாக்கத் தூண்டும். உலகில் குற்றங்களைத் தடுக்கும் செயலியாக நமது ஃபோனின் டிஸைன் அமையப்போகிறது. நாம் பேட்டண்ட் உரிமை பெற்றுவிட்டால் பின்னர் ஆராய்ச்சியாளர்களின் மருத்துவத் துறை அவர்களது பயன்பாட்டிற்கும் நமது ஃபோனைத்தான் நாட வேண்டும்.”

அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்களும் அவனது பேச்சையும் அவன் தயாரித்து வைத்திருந்த பவர்பாயிண்ட் காட்சிகளையும் கவனம் பிசகாமல் உள்வாங்கினார் மெக் ஆடம். இறுதியில்,

“மார்வெலஸ் ஐஸிக். ஆப்பிளையும் சாம்சங்கையும் நாம் அசைத்துவிடலாம் என்று உள்மனசு சொல்கிறது. உனது மென்பொருளில் ஒரு சில திருத்தங்கள் மட்டும் செய்ய வேண்டும்.”

“சொல்லுங்கள் மெக்.”

“இந்தச் செயல்பாடு உலகச் சந்தைக்கு வேண்டாம். நமக்கு, வேண்டுமானால் ஐரோப்பாவுக்கு உரிய மாடல்களில் மட்டும் கொண்டுவந்தால் போதுமானது.”

புரியாமல் விழித்தான் ஐஸிக்.

“மூன்றாம் உலக வாடிக்கையாளர்களிடம் புத்திசாலித்தனம் பெருகக்கூடாது ஐஸிக். அவர்கள் பொன் முட்டையிடும் வாத்து. அதற்கு அவர்களது மடைமையும் நாம் சந்தைப்படுத்தும் பொருள்களின்மீது நமது விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் அடிமையாவதும் நமக்கு முக்கியம். நம் ஆட்சியாளர்கள் காலனி ஆதிக்கத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்து பற்பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நமது எந்தக் கண்டுபிடிப்பும் அதற்கு உலை வைக்கக் கூடாது. படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பரப்பி போராடுவதுடன் அந் நாட்டு மக்களின் வீரம் திருப்தி அடைகிறது. அந்தப் போராளிகளுக்கு அது போதும். அது அப்படியே தொடர்வதுதான் நமக்கு உத்தமம்.”

அதிர்ச்சியுடன் விழி விரித்தான் ஐஸிக்.

“நான் சொன்ன மாற்றங்களைத் துரிதப்படுத்தி விரைவில் இதை முடிக்கவும். நான் அடுத்த வாரம் இந்தியாவிலிருந்து திரும்பி விடுவேன். மீண்டும் சந்திப்போம்.”

0-0-0

சென்னை. இரண்டாம் நாள்.

அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த கணவனிடம், “ஏங்க, கேமரா ஃபோனாமே, நம்ம சேது கேட்டுக்கிட்டே இருக்கானே” என்றாள் மனைவி.

தனது அறையில் அமர்ந்தபடி அந்த உரையாடலை ஆர்வமுடன் செவிமடுக்க ஆரம்பித்தான் சேது.

“ஏண்டி, நம்ம வருமானத்துக்கு அடங்குற விலையாவா அது இருக்கு. போன மாச வாடகை பாக்கியைத் திட்டாத குறையா வீட்டுக்காரர் ஞாபகப்படுத்திட்டுப் போறார். இன்னும் ஒரு வருஷம் காலேஜ் படிப்பு இருக்கு. முடிச்சுட்டு அவன் வேலைக்குப் போனதும் ஸ்மார்ட் ஃபோனு, ஸ்மார்ட் டிவின்னு என்ன வேணுமானாலும் வாங்கிக்கச் சொல்லு. இப்ப அவருக்கு இருக்குற ஃபோனே போதும். பேசினா கேக்குதுல்ல. அது போதாது?”

“யப்பாவ்! ஸ்மார்ட் ஃபோன்னா அதுல உங்க ரெண்டு பேரு படத்தையும் ஸ்கிரீன்ல போட்டு பார்த்துட்டே இருப்பேன்பா” என்று உள்ளே இருந்தபடியே குரல் கொடுத்தான்.

“அடங்குடா மகனே. அம்மாகிட்டே எங்க ஃபோட்டோ சின்ன சைஸ் இருக்கு. உன் பர்ஸ்ல எதிர் வீட்டு வாத்தியார் பொண்ணு படத்தோட சேர்த்து வெச்சுக்க” என்று சொன்னபடியே வெளியே இறங்கிவிட்டார் அப்பா.

தலையில் அடித்துக் கொண்டான். அந்த ஃபோட்டோவை எப்பப் பார்த்துத் தொலைச்சார் அவர். இப்போ அம்மாவின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று நினைக்கும்போது அம்மா வந்தே விட்டாள்.

“தடிமாடு. இது எப்போலேருந்துடா” என்றவளிடம், “அம்மா! கராத்தே க்ளாஸுக்கு நேரமாச்சு” என்று வெளியில் பாய்ந்து நண்பனின் இரவல் பைக்கில் பறந்தான்.

0-0-0

ந்தனம் சிக்னலைத் தாண்டி சற்று தொலைவில் இருந்த நடைபாதை தேநீர் கடையில் இளங்கோவனும் அவனுடைய சகாவும் பைக்கில் அமர்ந்தபடி சாவகாசமாக தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

“நல்லா விசாரிச்சுட்டியா?” என்றான் இளங்கோவன்.

“உள்ளே நம்மாளு இளோ. ஏர்போர்ட் பிக்அப் போயிருக்காப்ல. இதைத் தாண்டிதான் பார்ட்டிய ஹோட்டல் டிராப்பு. இந்தப் பக்கம்தான் வந்தாகனும்.”

“மிஸ்ஸாகக் கூடாதுடா. சாமான கவனமா வை. பைக்கை குறுக்க வுடு. ஆன்லேயே வை. வெளில இழுக்கிறோம். போட்டுட்டு போய்ட்டே இருக்கிறோம்.”

மேலும் சில சிகரெட்டுகள், மீண்டும் டீ, என்று காலம் கடந்தபின் சிக்னலை நோக்கி வந்தது அந்த பென்ஸ் கார்.

“அந்தா வருது, கிளப்புறா” என்றதும் இருவரையும் சுமந்துகொண்டு விர்ரென்று கிளம்பியது பைக். அரை வட்டம் அடித்துத் திரும்பி, அண்ணா சாலை போக்குவரத்தில் கலந்து, பென்ஸ் காரைத் தாண்டிச் சென்று அதன்முன் புகுந்து சடாரென்று திரும்பி நிறுத்தினார்கள். அவர்களை அசிங்கமாகத் திட்டியபடி ப்ரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான் ஆனந்தன்.

வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு மறைத்து வைத்திருந்து முழங்கை நீளமுள்ள பட்டாக் கத்திகள் பெரும் சுத்தியலுடன் இருவரும் காரை நோக்கி திபுதிபுவென ஓடி வர, தேங்கி நின்ற அண்ணாசாலை போக்குவரத்தும் பாதசாரிகளும் அசட்டை கலைந்து, விபரீதம் உணர்ந்து அக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

“வாட் த ஹெல் இஸ் திஸ்” என்று விஷயம் புரியாமல் ஆங்கிலத்தில் திகைத்தார் காரில் இருந்த பயணி மெக் ஆடம்.

சுத்தியலைக் காட்டுத்தனமாக வீசியதில் கார் கண்ணாடிகள் நொறுங்கின. இளங்கோவன் டிரைவரின் கதவைத் திறந்து ஆனந்தனை இழுக்க, வெளிறிப் போயிருந்த மெக் ஆடமை வெளியில் இழுத்தான் அவன் சகா.

“அவனை விட்டுர்ரா” என்று கத்தினான் இளங்கோவன்.

“இல்லே இளோ. என்னவோ போலீஸ், கீலிஸ்னு கூவறாப்புல. எனக்கும் ஃபாரின் ஆளுங்க ரேஞ்சுக்கு என்னமாச்சும் மெர்ஸல் செய்ய ஆசையா இருக்கு” என்றான்.

“டேய் வுட்றா. இவனைப் புடி. போட்டுட்டு போய்ட்டே இருப்போம்” என்று திமிறி ஓட முயலும் ஆனந்தனின் தலையையும் அவன் சட்டைக் காலரையும் ஒரு கையால் இழுக்க மறுகையில் இருந்த அவனது ஆயுதம் சாலையில் உரசி பொறி பறந்து கொண்டிருந்தது.

மெக் ஆடமை வெளியில் இழுத்த வேகத்தில் சகாவின் ஆயுதம் அவரது கையில் பட்டு இழுத்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. “இளோ. இதோ பாரு. வெள்ளைக்காரன் இரத்தமும் சிவப்பு” என்றான் சிரிப்புடன்.

“ப்ளீஸ் லீவ் மீ” என்று கத்தினார் மெக் ஆடம்.

“நோ டாக். மர்டர்” என்று கத்தியைக் காட்டினான் சகா.

அவ்வளவு களேபரத்தையும் அத்தனைக் கூட்டமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பஸ்ஸில் அமர்ந்திருந்த பயணிகளும் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி காலூன்றியபடி அதன் மீதிருந்தவர்களும் தங்களது ஃபோன்களில் படமும் வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

பாதசாரியில் ஒருவன் காட்சியின் பக்கம் முதுகைத் திருப்பி தன் முகமும் காட்சியும் பதிவாகும் வகையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தான்.

தேங்க ஆரம்பித்த கூட்டத்தில் அவ்வழியே வந்த சேதுவின் பைக் சிக்கியது. என்ன விஷயம் என்று எட்டிப் பார்த்தவன், சடுதியில் நிகழப் போகும் கொடூரத்தை உணர்ந்து, அவனது மூளையின் அத்தனை செல்களிலும் அபாய விளக்கு எரிய பாக்கெட்டில் இருந்த பேனா கத்தியை எடுத்து விரலிடுக்கில் பிடித்து நீட்டிக்கொண்டு, சர்ரென்று அந்த இருவரை நோக்கிப் பேய்த்தனமாகத் தன் பைக்கைச் செலுத்தினான்.

நெருங்கி வண்டியைச் சாய்த்து தரையுடன் தேய்த்து கீழே சறுக்கி விழுந்தவாறு அதே வேகத்தில் சகாவின் குதிகால் நரம்பை அறுத்துவிட்டு, உருண்டு சென்று இளங்கோவின் கால் நரம்பையும் அறுத்தான் சேது. கூர்மையான அந்தக் கத்தி சரியாகவே வேலை செய்தது.

இளங்கோவனும் சகாவும் அடியுடன் வெட்டப்பட்ட வாழை மரத்தைப்போல் கத்தியவாறு அப்படியே சரிந்து விழுந்தார்கள். கிடா வெட்டியதைப் போல் அவர்கள் இருவரது கால்களிலிருந்தும் குபுகுபுவென்று இரத்தம் வழிய ஆரம்பித்தது.

அத்தனைக் கூட்டமும் அந்தக் காட்சியையும் தத்தமது கைப்பேசியில் விடியோ எடுத்துக் கொண்டிருந்தது.

அதிர்ச்சி விலகாமல் நடுங்கியபடி நின்றிருந்தான் ஆனந்தன். தம் கையில் வழியும் இரத்தத்தைக் கூட உணராமல் திகைத்துப் போய், காயங்களுடன் எழுந்து வரும் சேதுவைப் பார்த்துக் கொண்டிருந்தார் மெக் ஆடம்.

-நூருத்தீன்

Read 3088 times Last modified on Thursday, 17 March 2016 23:46

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.