இந்தியாவின் சுற்றுலா பகுதிகளை வெளிநாட்டினர் 4 பிரிவாக பிரிக்கின்றனர். இதில் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மூன்று பிரிவுகளுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்தத் தடையுமின்றி சென்றுவரலாம். ஆனால், நான்காவது பகுதியான கிழக்கு பகுதிக்குச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
தெற்கு என்ற பிரிவில் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்கள் உள்ளன. இதில் கேரளாவிற்குத்தான் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பிரான்சு நாட்டினர் அதிக அளவிலும், அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன் நாட்டினரும் கேரளாவிற்கு அதிகமாக வருகின்றனர். வருடத்திற்குக் கிட்டத்தட்ட 300 ஜெர்மன் குழுக்கள் கேரளாவுக்கு வருகின்றன. ஒரு குழுவில் 24 முதல் 36 பேர் இடம் பெறுகின்றனர்.
இதுமட்டுமின்றி, தனிநபர்களாக கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் வருகின்றனர். சுற்றுலா தவிர கிறிஸ்துவ மிஷனரிகள் சார்பாக வருபவர்களும் அதிகம். இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 11.81 சதவீதம் பேர் கேரளத்திற்குச் சுற்றுலா செல்கின்றனர்.
தற்போது ஜெர்மன் அரசு மற்றும் ஜெர்மன் டிராவல் ஏஜண்டுகள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதில், "கேரளாவில் அந்த மாநில அரசே அங்குள்ள ஒரு அணை உடைந்துவிடும் அபாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், அங்குச் சுற்றுலா செல்பவர்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே இந்தியாவின் தெற்கு பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்கள் கேரள பகுதியைத் தவிர்க்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையால் கேரளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 265 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கேரளத்திற்குச் சுற்றுலா வந்தனர். 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 18.31 சதவீதம் கூடுதல்.
கேரளத்தின் வருவாயில் சுற்றுலா பயணிகளின் மூலம் கிடைக்கும் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓட்டல்கள், உணவு, கைவினை பொருட்கள் வாங்குவது, டிராவல்ஸ் நிறுவனங்கள், துணிமணிகள் என பல வகையிலும் கேரளத்தைச் சுற்றுலா பயணிகளின் பணம் வாழ வைத்து வருகிறது.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் ஓட்டல் அறையை இணையம் மூலம் முன்பதிவு செய்து விடுகிறார்கள். ஓட்டல் அறை வாடகை இல்லாமல், கேரளத்திற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணியும் சராசரியாக ஒருநாளைக்கு 3600 ரூபாய் செலவழிக்கின்றனர். குறைந்த பட்சம் 16 நாட்கள் கேரளாவில் தங்குகின்றனர். இதன் மூலம் சுற்றுலா பயணிகளால் பல ஆயிரம் ரூபாய் பல வழிகளில் கேரளத்திற்குக் கிடைத்து வந்தது.
தற்போது ஜெர்மன் சுற்றுலா ஏஜன்சிகள் அறிவிப்பு காரணமாக சுற்றுலா வருவாயில் கணிசமான இழப்பு ஏற்படும் என்று கேரள சுற்றுலா ஏஜன்சிகள் கவலையடைந்துள்ளன. ஏற்கெனவே, கேரளத்தின் உணவு தேவையில் பெரும்பகுதி தமிழகத்தைச் சார்ந்து இருந்த நிலையில், முல்லை பெரியாறு பிரச்சனையால் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு உணவு பொருட்கள் செல்வது கணிசமான அளவு குறைந்ததால் அங்குக் காய்கறி மற்றும் இறைச்சி வகைகளின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது.
இதுவே கேரளத்திற்குப் பலத்த அடியாக இருந்த நிலையில், தமிழகத்தில் வியாபாரம் முதலானவற்றில் ஈடுபட்டுள்ள கேரளத்தைச் சேர்ந்தவருகள்மீதான தாக்குதல், தற்பொது சுற்றுலா மூலமாக வரும் வருமானத்தில் குறைவு என, ஏதோ ஒரு காரணத்தை மனதில் வைத்து அரசியல்வாதிகள் உருவாக்கிய முல்லை பெரியாறு அணை பிரச்சினை பல்வேறு ரூபத்தில் கேரளத்தை பாதிக்கத் தொடங்கியுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|