நமது காலண்டரின் மற்றொரு தாள் கிழிக்கப்படுவதற்கு ஏன் இத்தனை கொண்டாட்டம்? வர்த்தக மயமாக்கப்பட்ட தினங்களில் உலகலாவிய அளவில் முதலாளிகளின் வயிற்றை நிரப்புவதில் புத்தாண்டு கொண்டாட்டம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
வாழ்த்து அட்டைகளில் தொடங்கிய வணிகமயம் இன்று நாடு, மதம் இனங்களைக் கடந்து அனைத்து தரப்பிலும் தொற்றிக்கொண்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரால் சமூகத்தீமைகளான மது, விபசாரம் ஆகியவற்றுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
கடந்த வருட இறுதியில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன தலைவர்கள், வழக்கம்போல் இந்தவருடமும் தூசி படிந்த தங்கள் அறிக்கைகளை மீண்டுமொருமுறை வாசித்து வாழ்த்து சொல்லி வருவார்கள். அடுத்த வருடமும் இதே வாழ்த்துக்களைச் சொல்வர். எனினும், ஏழைகள் பரம ஏழைகளாவும்,பரம ஏழைகள் பஞ்சப்பரதேசிகளாவும் மாறும் அவலத்தை எந்த புத்தாண்டும் மாற்றவில்லை.
மேற்கத்திய நாடுகளில் மட்டும் இருந்த ஆண்டுக்கொருமுறை வாழ்த்து சொல்லும் கலாச்சாரம் இன்று நம்மையும் தொற்றிக்கொண்டுள்ளது. "தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் பாரதி. தங்கள் மேடைப்பேச்சுக்கு அழகூட்ட மட்டும் பாரதியின் கவிதைகளை பயன்படுத்திக்கொள்ளும் நம் தலைவர்கள் எப்போது தனிமனிதன் ஒருவன் பசித்திருக்கும் நிலையை அகற்றுவர்? என்று எதிர்பார்த்து வானம்பார்த்த கூரை வீட்டு ஏழைகள் ஏங்கிக் கிடக்கிறார்கள்.
ஈழத்திலும் கேரளத்திலும் தாக்கப்பட்டு வீடிழந்து, வாழ்விழந்த தமிழர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. ஆப்கன், ஈராக், சிரியா, எகிப்து, லிபியா,துனீசியா என்று அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு பலியாகிக்கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டதுபோதாதென ஈரானிலும் இரத்தம் குடிக்கக் காத்திருப்பவர்கள்தான் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கொத்துக்குண்டுகளுடன் காத்திருக்கிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரால் அரசு மற்றும் காவல்துறை அனுமதியுடன் நடக்கும் அநாகரிக கூத்துகளைப் பார்க்கும்போது 2020 இல் இந்தியா ஒழுக்க சீர்கேட்டிலும் எயிட்ஸிலும் அசைக்க முடியாத வல்லரசாகி விடுமோ என்று கவலை கொள்ளும்படியாக இளைய தலைமுறையினரின் போக்கு உள்ளது.
சென்னை நகர நட்சத்திர விடுதிகளில் சிறப்பு நடனங்கள், மது விருந்துகள் மற்றும் இன்னபிற கேளிக்கைகளுக்குத் தயாராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளஞ்ஜோடிகள், காதலர்கள் கும்மாளமிட அரங்குகளும், பெண்கள் மதுஅருந்துவதற்காக புதிதாக பிரத்யேக மினிபார்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்களை நிகழ்த்த ஜோடியாகக் கொண்டாட ரூ.1500 முதல் ரூ.18,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு விருந்து முடிந்ததும் ஓட்டலிலேயே தங்கவைத்து மறுநாள் காலை சிற்றுண்டி கொடுத்து அனுப்பி வைக்க சில விடுதிகள் ஏற்பாடு செய்துள்ளன. இரவு 7 மணிமுதலே இதற்கான நிகழ்ச்சிகள் தொடங்கிவிடுகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரால் மதுவிருந்து, காதைக்கிழிக்கும் ஆபாச இசை நடனங்கள், அரசு அங்கீகாரத்துடன் ஒருநாள் விபச்சாரம் ஆகியவையே ஊடகங்களால் பிரபலப் படுத்தப்பட்டுள்ளன.
ஏழைகளின் துயர்துடைப்பதே தலையாயபணி என்று ஆட்சிபீடம் ஏறும் எந்தக்கட்சியும் மதுவிலக்கை அமல்செய்து குடிகாரர்களிடமிருந்து ஏழைகளைக் காக்கவில்லை. ஊழலை ஒழிக்க வலுவான சட்டமசோதாகோரி ஒரு முதியவர் அந்த ஊழல்வாதிகளிடமே போராடுகிறார். பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க எந்தச் சட்டத்தினாலும் இயலவில்லை.மதவாதம்,தீவிரவாதம் போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க எந்த ஆட்சியாளருக்கும் திராணியில்லை. இந்த லட்சணத்தில் ஆண்டுக்கொருமுறை சம்பிரதாய சடங்காக புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ன வேண்டிக்கிடக்கிறது?
பிற நாட்டின் உடமைகளைச் சுருட்டி தம் சுகபோக வாழ்வைச் சிறப்பாக அமைத்துக்கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு வேண்டுமெனில் இத்தகைய இனிய(!) புத்தாண்டு கொண்டாட்டங்கள் இனிப்பாக இருக்கலாம். பஞ்சம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், சமூகக் கொடுமைகள், தீண்டாமை, ஜாதிக்கொடுமைகள் என எண்ணற்ற பிரச்னைகளைச் சுமந்திருந்தாலும் சொந்தமாக உழைத்துச் சாப்பிடும் தன்மானமிக்கத் தமிழர்களான நமக்கு, இத்தகைய பிரச்னைகளிலிருந்து வெளிவருவதற்கான முயற்சிகளைவிட்டு இதுபோன்ற இனிய(!) புத்தாண்டு வாழ்த்துக்கள் எதற்கு என்பதே என் பிரதான கேள்வி!
- ஜமால், துபாய்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed