இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கட்டுரைகள் சிறப்பு பரிதாபமான படுதோல்விக்கு யார் காரணம்?

பரிதாபமான படுதோல்விக்கு யார் காரணம்?

பரிதாபமான படுதோல்விக்கு யார் காரணம்?ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து  விளையாடி வரும் இந்திய அணி, நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வி உட்பட தாம் விளையாடிய 4 போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பின்னர் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும், ஆஸ்திரேலியா தொடரிலும் 0-4 என படு கேவலமானத் தோல்வியைத் தழுவியதன் மூலம் உலகக் கோப்பையைப் பெற தகுதியான அணிதானா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் கிளார்க் முச்சதமும், பாண்டிங் இரட்டைச் சதமும், ஹுசே மற்றும் வார்னர் தலா ஒரு சதமும் அடித்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில்  விளையாடிய இந்திய அணி வீரர்களில்  சதம் அடித்தவர் விராட் கோஹ்லி மட்டுமே. இவர் அடித்ததும் ஒரே ஒரு சதம். இந்திய பேட்ஸ் மேன்களின் சராசரி 30 க்கும் மேல் உள்ளவர் மூவர். அதில் ஒருவர் பந்து வீச்சாளரான அஷ்வின். 3 போட்டிகளில் விளையாடிய அஷ்வின் ஒரு அரை சதம் அடித்து 163 ரன்கள் குவித்துள்ளார்.

அஷ்வினின் பேட்டிங் சராசரி 32.60; முன்னணி பேட்ஸ்மேன்களான சேவாக், டிராவிட், டோனி, லக்ஷ்மன் ஆகியோரின் சராசரியோ 24.75 க்கும் கீழே தான். அஷ்வின் பந்து வீச்சு எடுபடா விட்டாலும் பேட்டிங்கில் அதை சரிகட்டி விட்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை ஒப்பிடுகையில் இந்திய அணி பந்து வீச்சு மோசம் என்றாலும் ஜாகிர்கான் 15 விக்கெட்களையும், உமேஷ் யாதவ்  14 விக்கெட்களையும் கைப் பற்றியுள்ளது குறிப்பிட தக்கது. எனினும் இந்திய பந்து வீச்சாளர்களின் சராசரி 30 க்குக் கீழே இல்லை. ஆஸ்திரேலிய அணியில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய சிடில் மற்றும் ஹில்பென்ஹாஸ் ஆகியோரின் சராசரி 18.65 மற்றும் 17.22 தான்.

இந்திய அணி தேர்வு செய்யப் படும் முறையில் கோளாறு உள்ளதோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்குக் கேவலமான தோல்வி. முன்னாள் கேப்டன் கவாஸ்கர் "இளம் வீரர்களைத் தேர்வு செய்ய  தேர்வுக் குழுவினர் நிறைய ரஞ்சிப் போட்டிகளைப் பார்க்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார். முன்னாள் கேப்டனும் இந்தியாவுக்கு உலகக்கோப்பையை முதலில் பெற்றுத்தந்தவருமான கபில்தேவ், "இந்திய அணியின் மோசமான டெஸ்ட் ஆட்டம் குறித்து வெட்கப்படுகிறேன்" என்று வேதனைபட்டார். இது போன்று ரவி சாஸ்திரி, கங்குலி என முன்னாள் வீரர்கள் பலரும் தமது கண்டனக் குரல்களை உயர்த்தியுள்ளனர்.

5 நாள் நடத்தப் படும் டெஸ்ட் போட்டிகளே  வீரர்களின் தகுதி, திறமை போன்றவற்றை வெளிக் கொண்டு வரும். பணம் குவிக்கும் நோக்கில் நடத்தப் படும் 4 மணி நேரத்தில் முடிந்து விடும் 20-20 ஓவர் போட்டிகளால் வீரர்களின் நிலைத்து நின்று ஆடும் திறன் அழிந்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது. அண்மைய காலங்களில் இந்திய அணி பங்கு பெற்ற இரு வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணி பெற்ற கேவலமான தோல்வி இதற்குச் சான்று.

காலத்திற்கேற்ற மாற்றம் இங்கும் தேவை. டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டி என இரு அணிகளுக்கும் தனித் தனி அணிகளும் தனித் தனி கேப்டன்களும் தேர்வு செய்யப் பட வேண்டும். திறமையான வீரர்களை டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்ய தேர்வு வாரியம் தவறும் நிலையில் குட்டிப் புலிகளுடன் கூட இந்திய அணி கேவலமானத்  தோல்வியைச் சந்திக்க நேரிடும்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: