உத்திரபிரதேசத்தை உலுக்கும் தாதாக்கள்: ஸ்பெஷல் ஸ்டோரி!

Share this News:

இரு வாரங்களுக்கு முன்னர் கான்பூர் . தேசிய நெடுஞ்சாலையில் சவ்பேபூரை சார்ந்த தாதாவும் அரசியல்வாதியுமான விகாஸ் துபே உத்திரபிரதேச காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டது தலைப்பு செய்தியனாது.

எல்லா என்கவுண்டர்களை போலவே இங்கும் குற்றவாளி காவலர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து காவலர்களை சுட முயன்ற போது ‘வேறு வழியின்றி’ சுட்டு கொல்லப்பட்டார். விகாஸ் துபேவுக்கு உதவியதாக சொல்லப்படும் துணை இன்ஸ்பெக்டர் கே.கே.ஷர்மா தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்று பயந்து உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டி இருக்கிறார்.

என்கவுண்டர் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் டிஐஜி ரவீந்தர் கவுண்ட் 13 வருடங்களுக்கு முன் அப்பாவியை சுட்டு கொன்றதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்ரு கிராமத்தில் எட்டு காவலர்களை சுட்டு கொன்றதற்காக ஐந்து மாநில காவல்துறையால் தேடப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட விகாஸ் துபேவின் மரணம் வட இந்தியாவில் குறிப்பாக உத்திரபிரதேசத்தில் அரசியல்வாதிகள் – கிரிமினல்கள் – காவலர்கள் இடையேயான கூட்டணியின் அழுக்கான பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த கூட்டணியால் வளர்க்கப்பட்ட விகாஸ் துபே அதிகார வர்க்கத்தின் பல உண்மைகளை தன்னோடு மயானத்திற்கு எடுத்து சென்று விட்டதால் இனி அது குறித்த உண்மைகள் வருவது என்பது எட்டாக்கனியே. விகாஸ் துபே அந்த சிஸ்டத்தின் ஒரு பொருள் தான். இந்த கட்டுரையில் அந்த சிஸ்டம், அது செயல்படும் விதம், அதன் தாக்கம் குறித்தே பேச உள்ளோம்.

தாதாக்களின் எழுச்சி.

80களின் தொடக்கத்தில் உத்திரபிரதேசத்தில் பொதுப்பணி நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டதிலிருந்தே தொடங்கியது என்பது உண்மையிலே நகைமுரணான ஒன்றாகும். நிறைய தாதாக்கள் தொடக்கத்தில் அரசின் டெண்டர்களை கைப்பற்றும் மாபியாக்களாகவே தங்கள் வாழ்வை தொடங்கினர். மத்திய அரசின் ரயில்வே காண்ட்ராக்டுகள், மாநில அரசின் கட்டுமான பணிகளை கையிலெடுத்து நிறைய பணம் சேர்த்தனர். அந்த பணத்தை கொண்டு மக்கள் பிரதிநிதிகள், காவல் துறையினர், உள்ளூர் அரசு அதிகாரிகளிடம் நெருங்கினர். அது இன்று வரை எல்லோருக்கும் பயனுள்ள கூட்டணியாக தொடர்கிறது. தேர்தல்களை எதிர் கொள்ள அரசியல்வாதிகளுக்கு ஆள் பலமும் பொருளாதாரமும் தேவைப்படுகிறது. அதை கொடுக்கும் தாதாக்களுக்கு அரசியல்வாதிகளின் தயவு தேவைப்படுகிறது. இருவருக்கும் பாலமாக அரசு அதிகாரிகள் என 80களின் தொடக்கத்தில் தொடங்கிய கூட்டணி அரசுகள் மாறினாலும் சித்தாந்தங்கள் மாறினாலும் இன்று வரை வெற்றி கூட்டணியாகவே உள்ளது. எனவே ஆள் கடத்தல், கொலை, நில ஆக்கிரமிப்பு என எல்லாமும் எல்லோருக்கும் தெரிந்தே செழிப்பாக நடந்து வருகிறது.

கிழக்கு உபி முழுவதும் அபய் சிங், பிரிஜேஷ் சிங், தனஞ்சய் சிங் கட்டுப்பாட்டிலும் , ரே பேரேலி அகிலேஷ் சிங் கட்டுப்பாட்டிலும் அலஹாபாத் அதீக் அஹ்மத் கட்டுப்பாடிலும் என உத்திரபிரதேசம் மறைமுகமாக கிரிமினல்கள் கட்டுப்பாட்டிலேயே பல தசாப்தங்களாக இருந்து வருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜு பாலை கொலை செய்த குற்றச்சாட்டில் 2004ல் அஹ்மத் சிறையில் அடைக்கப்பட்டாலும் மற்றவர்கள் சுதந்திராமாக உபியை ஆண்டு வ்ருகின்றனர். அவர்கள் ஒப்பந்தத்தை மீறி எல்லை மீறும் போது அல்லது சில உத்திகளுக்காக விகாஸ் துபே கொல்லப்பட்டதை போன்று கொல்லவும் படுவார்கள். 90களில் தாதாவாக இருந்து பீஹார் மாநில அமைச்சரான விரேந்திர பிரதாப் சாஹியை சுட்டு கொன்ற மிகப் பெரிய தாதாவான சுக்லா 1998ல் உத்திரபிரதேச சிறப்பு படையால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். பணத்திற்காக லக்னோவின் மிகப் பெரிய பிஸினஸ்மேன் குனால் ரஸ்தோகியின் மகன் உள்ளிட்ட பலரை கொன்ற சுக்லா சுட்டு கொல்லப்பட்டதை அடிப்படையாக வைத்து சேஹர் எனும் படம் பாலிவுட்டில் 2005ல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அரசியலில் சுக்லாவுக்கு காட் பாதர் இல்லாததால் தான் சுட்டு கொல்லப்பட்டார் என்று பேசப்பட்டதும் அப்போதைய உத்திரபிரதேச முதல்வர் கல்யாண் சிங்கை சுட்டு கொல்ல 6 கோடி காண்டிராக்ட் எடுத்தவர் சுக்லா என்றும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாதாக்களும் பாலிவுட்டும்,

சுக்லாவின் கதை படமாக்கப்பட்டது போல் பாலிவுட்டுக்கும் தாதாக்களுக்கும் நெருங்கிய உறவு இருந்து வந்துள்ளது. பாலிவுட் படங்களை போலவே தாதாக்களின் உண்மையான முடிவுகளும் அமைந்து விடுகிறது என்பது விநோதமான ஒற்றுமை எனலாம்.

தாதாக்கள் பற்றி பேசும் போது பப்லு ஸ்ரீவத்ஸவாவையும் அவரின் பெண் நண்பி அர்ச்சனா பால்முகுந்த சர்மாவையும் ஒதுக்கி வைத்து விட்டு பேச முடியாது. தாதாக்கள் என்றாலே காட்டான்கள் போல் இருப்பார்கள் என்ற பொது நியதிக்கு எதிராக படித்த , சினிமா நடிகைக்குரிய இலட்சணத்தோடு இருந்த அர்ச்சனா பல்வேறு ஆள் கடத்தல்கள், கொலைகளில் ஈடுபட்டு தனி இடத்தை பெற்றார். சிறையில் இருந்து பெயிலில் வந்த அர்ச்சனா தற்பொழுது எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. நேபாளத்தில் சுட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்படும் அர்ச்சனா, தேவ் ஆனந்த நடித்த கேங்க்ஸ்டர் எனும் படத்தில் நடித்தவர் என்பது ஆச்சர்யமானது.

ஷூட் அவுட் அட் வதாலா எனும் வெற்றிகரமான திரைப்படத்தில் ஜான் ஆப்ரஹாம் மும்பை தாதா மன்யா சர்வேவாக நடித்தார். படித்த கிரிமினலான மன்யா காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டது தான் மும்பையில் அதிகாரபூர்வமாக செய்யப்பட்ட முதல் என்கவுண்டர் ஆகும். நமது தமிழ் நாட்டில் கூட கமல்ஹாசன் வரதராஜ முதலியாராக நடித்த நாயகன் பல்வேறு விருதுகளை பெற்றது. அது பாலிவுட்டிலும் வினோத் கன்னா கதா நாயகனாக தயாவன் எனும் பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

தாதா டூ அரசியல்வாதி – உருவாக்கம்

80களில் உபியில் ஹரி சங்கர் திவாரி மற்றும் ஷாஹி கும்பலுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் நடந்தன. தன்னை பிரமாணர்களின் அறிவிக்கப்படாத தலைவராக சொல்லி கொள்ளும் திவாரி தான் அரசியலில் முதலில் நுழைந்த தொழில்முறை தாதா என சொல்லலாம். 1982ல் காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிட்ட திவாரி மாநில கேபினட் அமைச்சராகவும் கோலோச்சினார். பின்பு பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவிய திவாரி தன் மகன்களை அக்கட்சியின் முக்கிய புள்ளிகளாக உருமாற்றி இருக்கிறார். ரவுடி – அரசியல்வாதி என ப்ரொபஷனை மாற்றும் ரூட்டை ஆரம்பித்து வைத்த திவாரியின் வழியிலே இன்றளவும் உபியின் அரசியல் இயங்குகிறது. ஒரு கட்டத்தில் அரசியல்வாதிக்கு தேவையான பணத்தையும், ஆட்களையும் கொடுத்து விட்டு, அவர்களை எதிர்பார்த்து இருப்பதற்கு பதில் நாமே அரசியல்வாதி ஆகி விடலாம் என்று தாதாக்கள் எண்ண ஆரம்பித்தனர். அதன் விளைவாக 90களில் பிரபல தாதாக்களான அபய் சமாஜ்வாதி கட்சியிலும் அதீக் அப்னா தளத்திலும் பிரிஜேஷும் தன்ஞ்செய்யும் பகுஜன் சமாஜ் கட்சியிலும் இணைந்தனர். இன்றளவும் அந்த நிலை தொடர்கிறது என்பது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல.

தாதாக்களுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உறவின் வலிமையை உணர்ந்து கொள்ள 1996ல் தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய பிஜேபி முதல்வர் வேட்பாளர் கல்யாண் சிங் “குண்டர்கள் இல்லா உபியை உருவாக்குவேன்” என்று பிரச்சாரம் செய்தார். மாபியா டானாக கொண்டாடப்பட்ட ராஜா பையா என்றழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப் சிங்குக்கு எதிரான அறைகூவலாகவே கல்யாண் சிங்கின் வாக்குறுதி பார்க்கப்பட்டது. ஒரு வருடமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சட்டப்பேரவை உயிர்க்கப்பட்டு மீண்டும் பாஜக அரசாக செயல்பட ராஜா பையாவின் உதவி தேவைப்பட்டதால் ராஜா பையா கல்யாண் சிங் அரசின் முக்கிய அமைச்சராக பதவியேற்று கொண்டார். சம்பல் பள்ளத்தாக்கு புகழ் பூலான் தேவியை சமாஜ்வாதி தங்கள் கட்சியில் இணைத்து கொண்டதற்கும் காரணம் ஓட்டரசியலே என்பதோடு பிஜேபி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கிரிமினலகளை அரவணைத்தது போல் காங்கிரஸ் அரவணைக்க இயலாததும் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு காரணம் என்பது கசப்பான உண்மை.

சாதி – கிரிமினல் கூட்டணி

வட இந்தியாவில் குறிப்பாக உத்திரபிரதேச அரசியலில் ஜாதி முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை விட ஜாதி தான் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாகவே உள்ளது.

அரசியல் என்றாலே தாதாக்கள், குண்டாக்கள், ரவுடித்தனம் இல்லாமலா இருக்கும். சுட்டு கொல்லப்பட்ட பிரமாணரான விகாஸ் துபே பிராமணர்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் தான் உள்ளார். அது மாத்திரமல்ல அவரின் ஊர் காவல் நிலையத்தில் பணி புரிபவர்களில் பெரும்பான்மையினர் பிராமணர்களே. எனவே தான் விகாஸ் துபே இறந்த பின்பு முக நூல் முழுமையும் பிராமணர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “நீங்கள் தனிப்பட்ட விகாஸ் துபேவை கொல்லவில்லை, பிரமாணர்களின் நம்பிக்கையை கொலை செய்து விட்டீர்கள். அனைத்து மிஷ்ராக்கள், பாண்டேக்கள், செளபேக்கள், திவாரிகள், பூமிஹார்கள், (இவை அனைத்தும் பிராமணியத்தின் உட் பிரிவுகள் ஆகும்) நினைவில் வைத்து கொள்ளுங்கள், பரசுராமர் யாரை எதிர்த்து போரிட்டார் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என்று பிராமணர்களை தூண்டி விடும் பதிவுகள் வைரலாகின.

நம்ம தமிழ் நாட்டில் எஸ்.வி. சேகர் வகையறாக்கள் கூட சாத்தான் குளம் முதல் இட ஒதுக்கீடு வரை குரல் கொடுக்காமல், பிராமணர்களுக்கு மட்டும் குரல் கொடுப்பது நாம் அறிந்ததே. நொய்டா, காஜிபாத், மீராட் போன்ற நகரங்களில் ஜாட்களும் குஜ்ஜார்களும் கிரிமினல் நெட்வொர்கை பலமாக அமைத்துள்ளனர். அங்குள்ள காவலர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் தான் இவை நடக்கின்றன என்பது உலகறிந்த உண்மை. எட்டு காவலர்களை கொன்ற விபாஸ் துபேவுக்கு காவலர்கள் வருகையை குறித்து அவனுடன் இணக்கமாக இருந்த காவலர்களே போட்டு கொடுத்தனர் என்பது நாம் சொல்வதை உறுதிப்படுத்தும்.

கிழக்கு உபியிலோ தாகூர்களும் பிராமணர்களும் தங்களுக்கு உகந்த காவலர்களுடன் கூட்டணி வைத்து கொண்டு எதிருக்கு எதிராக களமாடுகின்றனர். ஹரி சிங்கர் திவாரிக்கு பிராமண அதிகார வர்க்கத்தின் பரிபூரண ஒத்துழைப்பும் அவரின் எதிரியான ஷாஹிக்கு தாக்கூர் சமூக அதிகாரிகளின் ஒத்துழைப்பும் இருந்தது. சிறுபான்மையினர் அதிகமாக உள்ள இடங்களில் முக்தார் அன்சாரி போன்ற தாதாக்களும் ஆதிக்கம் செலுத்தினர்.

ரவுடி ராஜா பையா சொல்லும் வேட்பாளர்கள் தான் சுமார் ஒரு டஜன் சட்டமன்ற தொகுதிகளில் வெல்வார்கள் என்று சொல்லும் அளவுக்கு செல்வாக்கு உணடு. அவரும் பிரிஜேஷ், தனஞ்செய் போன்றோரின் குண்டர் படைகளும் தாக்கூர் ராணுவம் என்றே அழைக்கப்பட்டனர். வட உபியிலோ சுந்தர் பட்டி, சுனில் ரதி போன்ற குஜ்ஜார் தாதாக்களும் சுஷில் மூச், பதன் சிங் பதூ போன்ற ஜாட்களும் தாதாக்களாக வலம் வருகின்றனர். அரசியலுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள விகாஸ் துபே இறந்த உடன் பிராமணர்கள் பலிகடாக்கள் ஆக்கப்படுவதாக மாயாவதி குற்றம் சாட்டி வெளியிட்ட அறிக்கை ஒன்றே போதும்.

ஈரல் மட்டுமல்ல, முழுமையாக அழுகிப் போன காவல்துறையில்
சட்டத்தின் ஆட்சி என்பது எப்போது நிலை நாட்டப்படும் என்றால் எந்த பாரபட்சமுமில்லாமல் நீதித்துறை, காவல்துறை, அதிகார வர்க்கம், ஆளும் வர்க்கம், அரசியல்வாதிகள் என சமூகத்தின் எல்லா அலகுகளும் செயல்படும் போது தான் என்பது உண்மையென்றாலும் காவல்துறையின் பங்களிப்பு சற்று பெரியதே.

ஆனால் பல்வேறு குற்றச்செயல்களின் பிண்ணனியில் நடந்த விசாரணை அறிக்கைகள் சொல்லும் செய்தி என்னவெனில் இந்த மாபியா அரசியல் கூட்டணி வளர்வதற்கு மிக முக்கிய காரணம் உள்ளூர் காவல் நிலையம் என்பது மிகையான கருத்தல்ல. சில கணங்களில் மாநிலத்தின் மிகப் பெரும் பொறுப்பில் உள்ளவரை விட உள்ளூர் காவல் நிலையத்தின் சாதாரண காவலர் தான் இந்த நெட்வொர்க்கை உயிர்ப்புடன் வைத்திருப்பவர். விகாஸ் துபே விவாகரத்தில் கூட எட்டு காவலர்களை கொன்ற விவகாரத்தில் அவர்கள் ரெய்டு வருவதை துபேக்கு சொன்னதே அவருக்கு விசுவாசமான உள்ளூர் காவலர்களே.

அதிலும் காவல்துறையில் வேறு ஊர்களில் பணி புரிபவர்கள் தங்கள் சொந்த ஊரில் பணி புரிய ஆசைப்பட்டால் அதற்கும் பல நேரங்களில் இந்த தாதாக்கள் மூலம் தான் காரியம் சாதிக்க வேண்டும். அந்த நன்றி விசுவாசம் ஒரு புறம், மேலும் அதே ஊரில் வசிக்கும் தன் குடும்பத்தினருக்கு எந்த பிரச்னையும் வந்து விட கூடாது எனும் அச்சம் மறு புறம் என நாளடைவில் அரசிடம் சம்பளம் பெற்றாலும் தாதாக்களின் கையாட்களாக மாறி விடுகின்றனர் காவலர்கள். அதையும் மீறி நேர்மையான காவலர்கள் ஒத்துழைக்க மறுத்தாலோ அவர்கள் பணி மாற்றம் செய்யப்படுவார்கள் அல்லது நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசியல்வாதிகளால் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே தான் தாதாக்களை பொறுத்த வரை உள்ளூர் காவல் நிலையங்களில் விசுவாசமாக உள்ள காவலர்கள் அவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஏனெனில் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த காரியத்தையும் சாதிக்க இயலாது. தாதாக்களின் தவறுகள் சில சமயங்களில் வெளியாகும் போது பொது சமூகம் மற்றும் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு பயந்து வழக்கு பதிவு செய்வதோடு அந்த வழக்கை ஆமை வேகத்தில் நகர்த்துவார்கள். இந்த கட்டுரையை எழுதும் போது கொலை வழக்கை சந்தேக வழக்கு என்று சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. சிபிஐயே இப்படி என்றால் சாதாரண உள்ளூர் காவல்துறை என்ன செய்யும். சுருங்க சொன்னால் தங்களுக்கு சார்பான ஆட்சி இருக்கும் போது தாதாக்களின் ஆட்சி தான் உண்மையில் நடக்கும்.

சட்டத்தின் ஆட்சி தான் நடக்க வேண்டும் என்று அறிவு சொன்னாலும் அதற்கு எத்தனை காலம் ஆகுமோ என்ற யதார்த்தம் மனதை அரித்து கொண்டு தான் உள்ளது

– பொறியாளர் ஃபெரோஸ்கான்


Share this News:

Leave a Reply