23 வருட சவூதி வாழ்க்கையில் கையில் எதுவும் இல்லாதவரின் சோக கதை!

May 04, 2017

ஷரீப் என்ற காஷிம் ரஹ்மான்.

செல்வந்தராகலாம், அதிக அளவில் பொருளீட்டலாம் என்ற கனவுகளுடன் வளைகுடா நாடுகளுக்கு வரும் ஆயிரக்கணக்காணோர்களின் பிரதிநிதி ஷரீப்.

பல கனவுகளுடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கடந்த 23 வருடங்களுக்கு முன்பு சவூதி வந்தார் ஷரீப். சவூதியில் அவர் வந்தது முதல் எதிர் பார்த்த வேலை கிடைக்கவில்லை. சம்பளமும் இல்லை. பல இடங்களில் பணிபுரிந்து வீட்டுக்கு பணம் அனுப்பினார். இறுதியில் ஹைலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஃபர்ஹானியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு பேரீச்சை தோட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.

கையில் பாஸ்போர்ட் இல்லை. இக்காமா இல்லை எனினும் தன்னுடைய நான்கு பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை எண்ணி சவூதியிலேயே காலத்தை தள்ளினார். ஒருவழியாக தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஷரீபின் மனைவியும் மரணமடைந்தார். ஆனால் கையில் பாஸ்போர்ட் எதுவும் இல்லாததால் மனைவியின் மரணத்திற்கு செல்ல இயலவில்லை.

ஆனால் இப்போது சவூதி வழங்கியிருக்கும் பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி நாட்டுக்கு செல்லவுள்ளார். அவருக்கு இந்தியா செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.

இதுகுறித்து இந்நேரம் செய்தியாளரிடம் ஷரீப் கூறும்போது, ' 23 வருடங்களாக ஒரு முறை கூட தாயகத்திற்கு செல்லாமல் பொருளீட்டியும் கையில் எதுவும் இல்லாமல் வெறுங்கையோடு தாயகம் செல்கிறேன். ஒருபுறம் தாயகம் செல்லும் மகிழ்ச்சி பிள்ளைகளை காணும் மகிழ்ச்சி உள்ளது என்றாலும். இனி அங்கு நான் என்ன செய்வேன்? இந்த வயதில் நான் எப்படி சம்பாதிப்பேன்,. சேமிப்பு இருந்தாலும் அதை வைத்து ஏதாவது செய்யலாம் அதற்கும் வழியில்லையே" என்று மிகவும் கவலையுடன் பேசினார்.

இதற்கிடையே ஷரீபுக்கு கேரளாவின் சில அமைப்புகள் உதவ முன் வந்தபோதும், தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் உள்ள சேமிப்புபோல் வருமா? என்பதே அவரது ஏக்கம்.

ஷரீப் சவூதி வந்தபோது அவருக்கு வயது 40 தாயகம் திரும்பி செல்லும்போது வயது 63. 

இது ஒரு ஷரீபின் வாழ்க்கை மட்டுமல்ல. ஆயிரம் ஷரீப்கள் வளைகுடாவில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!