கோடை விடுமுறையை எவ்வாறு பயன்படுத்தலாம்?

Monday, 08 May 2017 16:59 Published in சிறப்பு

கோடை விடுமுறைக் காலத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைப் பார்ப்போம்...

பிள்ளைகளுக்கு :

விடுமுறை நாட்களில் படுக்கையில் இருந்து தாமதமாக எழுவது பிள்ளைகளின் வழக்கம். அதுவும் கோடை விடுமுறைக் காலம் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் இது சரியல்ல. பள்ளி நாட்களில் எழும் வழக்கமான நேரத்துக்கே எழ வேண்டும். அப்படி எழுந்து, ஒரு சுறுசுறுப்பான நடை போகலாம். விளையாட்டுகளில் ஈடுபடலாம். அவ்வாறின்றி, தூங்கியே அதிக நேரத்தைக் கழிப்பது ஆரோக்கியமானது அல்ல.

செய்தித்தாளை வாசித்துப் பாருங்கள். நாட்டுநடப்பு, உலக அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். தினமும் சில புதிய வார்த்தைகளை அறிந்துகொள்ளுங்கள். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள். உபயோகமான ஒரு புதிய பொழுதுபோக்கைக் கற்றுக் கொள்ளுங்கள். தினமும் அதில் சிறிது நேரத்தைக் கழியுங்கள்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பலவீனமாக இருந்தால், சீனியர்கள், தெரிந்த ஆசிரியர்களிடம் கேட்டு அந்த பலவீனத்தைப் போக்கிக்கொள்ள முயலுங்கள். அடுத்த வகுப்புக்கு நீங்கள் அதிக தன்னம்பிக்கையோடு போகலாம்.

உங்களுக்கான பொருட்கள், இடங்களை ஒழுங்குபடுத்துங்கள். தேவையற்ற, பழைய பொருட்களை ஒழித்துக்கட்டுங்கள். பழைய புத்தகங்களை தகுதியானோருக்குக் கொடுங்கள். ஏதாவது சிறிய சமூக சேவை செய்யுங்கள். முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பெற்றோரை அழைத்துச் செல்லக் கூறி, பார்த்து, பழகி வாருங்கள்.

புது வகுப்புக்கான புத்தகங்கள், நோட்டுகளுக்கு அழகாக அட்டை போட்டு, லேபிள் ஒட்டி தயார்செய்து வையுங்கள். வீடியோ கேம்கள், ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தைச் செல விடாதீர்கள். அவை உங்கள் புலன்களை மரத்துப் போகச் செய்து, எந்திரத்தன்மைக்கு உங்களை உட்படுத்தி விடும்.

பெற்றோர்களுக்கு :

நேரமும் வசதியும் இருந்தால் உங்கள் குழந்தைகளை ஒரு குறுகிய கால சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். சுற்றுலா என்கிறபோது, ஆடம்பரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அருகில் உள்ள அதிகம் அறியப்படாத இடமும் கூட புதிய அறிவையும், ஆனந்தத்தையும் தரும்.

எளிமை, இயற்கையில் உள்ள சந்தோஷத்தை உங்கள் குழந்தை உணரட்டும். குழந்தைகளை உங்கள் பெற்றோரின் (அதாவது அவர்களது தாத்தா, பாட்டியின்) சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் அல்லது அனுப்பி வையுங்கள். கணினி, ஸ்மார்ட்போன் தாண்டிய நிஜ உலகத்தை அவர்கள் அறிந்துகொள்ளட்டும்.

வீட்டின் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யப் பழக்குங்கள். அது, அறை, படுக்கையை சரிசெய்வதாக இருக்கலாம், அலமாரியை ஒழுங்குபடுத்துவதாக இருக்கலாம், சிறிய பழுதுகளைச் சரிசெய்வதாக இருக்கலாம். சமையலின் அடிப்படையை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால் கூட அது பின்னாளில் அவர்களுக்குக் கைகொடுக்கும்.

தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். உங்களின் குழந்தைப்பருவ நினைவுகளைப் பகிருங்கள். அவர்கள் கூறும் விஷயங்களைக் காது கொடுத்துக் கேளுங்கள். கூடுமானவரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்.

முடிந்தால், நீங்கள் பணிபுரியும் இடத்துக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். குடும்பத்துக்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள் என்று அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

Last modified on Monday, 08 May 2017 17:05
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.