அனிதாவின் மரணம் தரும் பாடம்; சிபாரிசில் பயின்ற மருத்துவர்களுக்கும் சாவுமணி!

ருத்துவ படிப்பின் கனவுகளோடு வாழ்ந்த அனிதா என்ற மாணவியின் மரணம் பல அதிர்வுகளையும் பல விசயங்களை தட்டி எழுப்பியுள்ளது.

அனிதாவின் மரணம் நீட் தேர்வுக்கு எதிரான யுத்தத்தை மட்டும் உசுப்பிவிடவில்லை. சிபாரிசில் மருத்துவம் பயின்று எனோதானோ என சிகிச்சை அளிக்கும் பல மருத்துவர்களுக்கு சாவுமணி அடிக்கவும் வழிவகை செய்துள்ளது.

ஒருவித லட்சியத்தோடும், சேவை மனப்பான்மையோடும் மருத்துவம் பயில்வது ஒருவகை. பணபலம் மற்றும் தான் ஒரு மருத்துவர், தன் பிள்ளைகளும் மருத்துவர்களாக வரவேண்டும் என்று கவுரவத்திற்காகவும், காசு சம்பாதிப்பதற்காகவும் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், பெற்றோர்கள் அதிக செலவு செய்து அல்லது சிபாரிசின்பேரில் மருத்துவம் படிக்க வைப்பது ஒருவகை.

இதில் அனிதா போன்றவர்கள் முதல் வகை, அனிதா சிறு வயதில் அன்னை ஆனந்தியை நோய்க்கு பறி கொடுத்த தாக்கம். குழுமூர் கிராமத்திற்கு மருத்துவ சேவையாற்றும் நோக்கம். இன்னொரு குழந்தைக்கு தாயில்லாமல் போய்விடக் கூடாது என்று, தன் தாயை இழந்த நேரத்தில் கொண்ட உறுதி, இதுதான் அனிதாவிற்கு மருத்துவ கனவை தூண்டியுள்ளது. மேலும் தன் சமூகத்தில் முதல் மருத்துவர் என்ற பெருமையையும் தான் பெற வேண்டும் என்ற உத்வேகம்

ஏதோ பன்னிரண்டாம் வகுப்பில் மாத்திரம் 1176 மதிப்பெண் எடுத்து விடவில்லை . பத்தாம் வகுப்பிலும் 478 மதிப்பெண்கள் பெற்று முத்திரை பதித்தவர்தான் அனிதா. இதைவிட மருத்துவ படிப்புக்கு தகுதி வேறு என்ன வேண்டும். நீட்டின் பசிக்கு இரையாகிபோனார் அனிதா.

ஆனால் அனிதாவின் மரணத்தையும், அவரது கல்வியையும் கொச்சைப்படுத்தும் மருத்துவரான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி இன்னொரு கேள்வியை மக்களிடையே தட்டி எழுப்பியுள்ளார். இதுவரை பெரிய அளவில் பேசப்படாத அவரது மகளின் மருத்துவ கல்வியும், மருத்துவ கல்விக்கு தகுதியற்ற அவரது மகளுக்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசை அவர் நாடினார் என்ற உண்மையும் இப்போது வெளியாகியுள்ளது.

தற்காலத்தில் திடீர் மருத்துவமனைகள், மருத்துவர்கள் என உலாவருபவர்களின் பின்னணியை சாமானியர்கள் அவ்வளவாக ஆராய்வதில்லை. சில சாதாரண நோய்கள் சாதாரண மருந்துக்களுக்கே குணமடைந்துவிடும். ஆனால் சீரியசான நோய்களை கண்டறிவதில்தான் (Diagnosis) மருத்துவர்களின் திறன் உள்ளது. அது குறைந்த மதிப்பெண் எடுத்து சிபாரிசில் மருத்துவப் படிப்பை முடித்தவர்களிடம் எதிர் பார்க்க முடியாது.

ஆய்வுகளை எடுத்துப் பார்த்தால் தெரியும், மிகவும் அனுபவம் மிக்க திறமையான மருத்துவர்களின் பின்னணியும், அவர்களின் மருத்துவ கல்வி வாழ்க்கையும் மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். அவர்களே சமூகத்தில் போற்றப்படும் மருத்துவர்களாகவும் உள்ளனர்.

வெளிநாடுகளில் சுகாதார அமைச்சகம் ஒரு விதிமுறையை கையாளும். அதாவது ஒரு மருத்துவர் அவரது கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் குறிப்பிட்ட மருத்துவர் சிகிச்சை அளிக்கும் இடத்தில் காட்சிப் படுத்தி வைக்க வேண்டும். அது அங்கு வரும் நோயாளிகளின் பார்வையில் இருக்க வேண்டும். ஏனென்றால் அதுவே மருத்துவர்களின் திறனையும், தகுதியையும் பிரதிபலிக்கும்.

இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற இந்தியாவில் சுகாதார அமைச்சகம் எந்த உத்தரவையும் பிறப்பித்திருக்கவில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மருத்துவர்களின் தரம் வெளிஉலகுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சிபாரிசின் மூலம் மதிப்பெண் குறைவாக பெற்று ஜஸ்ட் பாஸ் என்ற வகையில் மருத்துப் படிப்பை பயின்றவர்களை அடையாளம் காணுவதோடு, அவர்களை பொதுமக்கள் புறக்கணிக்கவும் உதவும்.

- தல தளபதி

Last modified on Wednesday, 06 September 2017 16:18