ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு!

Thursday, 14 September 2017 20:57 Published in சிறப்பு

க்கைனில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி மியான்மர் பாதுகாப்பு படையினருக்கும் ரோஹிங்கியா போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலை தொடர்ந்து ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது வன்தாக்குதலை தொடங்கியது மியான்மர் அரசு. ரக்கைனில் உள்ள கிராமங்களில் உள்ள முஸ்லிமக்ளின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

இந்த விவகாரத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் மியான்மருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் தலைவர் ஆங் சாங் சூச்சியுடன் ரோஹிங்கியாக்கள் விவகாரத்தை மிகவும் அழுத்தமாக பேசவில்லை என்று கருதப்படுகிறது.

இந்தியாவில் அகதிகளாக குடியேறியுள்ள ரோஹிங்கியாக்கள் மீண்டும் வங்கதேசத்துக்கோ மியான்மருக்கோ திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். இதற்கு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹூசைன் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆனால், ரோஹிஞ்சாக்களை திருப்பி அனுப்புவது தொடர்பான அதிகாரபூர்வ முடிவை இன்னும் இந்திய அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில் சயீத் ரா அத் அல் ஹூசைனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ராஜிவ் கே. சந்தர் பேசுகையில் "சட்டவிரோத குடியேறிகள் பற்றி மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் மிகவும் கவலை கொண்டுள்ளது. அவர்களால் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்" என்றார்.

சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளை, "இரக்கமில்லாத செயல்" என தவறுதலாக பொருள் கொள்ளக் கூடாது" என்றும் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையே வங்கதேச வெளியுறவுத் துறை உயரதிகாரி முகம்மது ஹுமாயுன் கபீர், "ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்தில் தற்காலிகமாக தங்குவதில் பிரச்சனையில்லை ஆனால் மீண்டும் சொந்த நாடான மியான்மருக்கே அவர்கள் திரும்புவதே நல்லது" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அப்ரசர்வர் ரிசர்ஸ் ஃபவுண்டேஷன் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோயீதா பட்டாச்சார்யா, "ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் வங்கதேசத்துக்கு சாதகமான நிலையை எடுக்க இந்தியா தயக்கம் காட்டினால் அந்நாட்டுக்கு உதவ சீனா தயாராக இருக்கிறது" என்கிறார்.

"மியான்மருடனான கடும் போக்கையும் மோதலையும் தீவிரமாக்குவதற்கு அத்தகைய ராஜீய நடவடிக்கை, சீனாவுக்கு பல வழிகளில் உதவும்" என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"குறிப்பாக, எல்லை விவகாரங்களில் வங்க தேசம் மட்டுமின்றி இந்தியாவும் பல வழிகளில் சீனாவின் எல்லை தாண்டிய அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என்கிறார் அவர்.

"அதனால்தான் ரோஹிஞ்சாக்கள் விவகாரத்தில் மியான்மருக்கு அனுசரணையாகவும் வங்கதேசத்துக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் தடுமாற்றத்துக்கும் இதுவே காரணம்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

"ரோஹிங்கியாக்கள் விவகாரத்தை, "ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்னை" என பார்க்காமல் "ஒரு இன அழிப்புக்கான முயற்சி" ஆகக் கருதி சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும். இதற்கு சர்வதேச அழுத்தங்கள் மூலமே தீர்வு காண முடியும்" என்கிறார் ஜோயீதா.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹுனர் குப்தா தொடர்ந்துள்ள வழக்கில், ஜம்மு காஷ்மீரில் சுமார் ஏழாயிரம் ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாகக் குடியேறி தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர்களை நாடு கடத்த உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.
அதே நீதிமன்றத்தில் ரோஹிஞ்சாக்கள் சார்பில் வழக்கறிஞர் கோலின் கான்ஸ்லேவ்ஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

"தாயகத்தில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பொருளாதார காரணங்களால் பிழைப்புக்காக வருவது ஒருவகை, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தாயகத்தில் இருந்து தப்பித்து மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைவது இன்னொரு வகை. அந்த வகையில் மியான்மரில் இருந்து உயிரைக் காக்க வந்த ரோஹிங்கியாக்களை அகதிகள் ஆகக் கருதி ஆதரிக்க வேண்டியது இந்தியாவின் கடமை. இந்திய அரசியலமைப்பின் 21-ஆவது விதியின்படி இந்தியர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்று கோன்ஸ்லேவ்ஸ் கூறுகிறார்.

"அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முந்தைய காலங்களில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து ரோஹிங்கியா விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்க வேண்டும்" என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

இந்நிலையில் ரோஹிங்கியாக்கள மீதான நடவடிக்கையை முஸ்லிம்கள் மீதான தாக்குதலாகக் கூறி, அதற்கு சக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை வங்கதேசம் கோரி வருகிறது. அதன் விளைவாக, துருக்கி, இரான், இராக் போன்ற நாடுகள் ரோஹிங்கியாக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ன.

வங்கதேச நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களிடம் கடுமை காட்டினால், அது தேர்தலின்போது ஆளும் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிர்வினையாகி விடும் என்ற அச்சம் ஆளும் அரசிடம் உள்ளது.

தற்போதைய நிலையில், மியான்மரின் ரக்கைனில் சண்டை நிறுத்த பகுதியை வரையறுக்க வேண்டும் என்ற ஒரு வரைவு யோசனையை வங்க தேசம் தயாரித்துள்ளது.

அந்த யோசனைக்கு மியான்மரை இணங்கச் செய்யும் முயற்சியை அந்நாட்டுடன் நட்பு பாராட்டி வரும் இந்தியா, ஜெர்மனி போன்றவை முன்னெடுக்க வேண்டும் என வங்க தேசம் விரும்புகிறது.

இம்மாதம் மூன்றாவது வாரத்தில் ஐ.நா. பொதுச் சபையின் கூட்டம் நடைபெறவுள்ளதால் அப்போது இந்தியா தனது நிலையை உலகுக்கு அறிவிக்கும் என வங்கதேசம் உள்ளிட்ட ரோஹிங்கியாவுக்கு ஆதரவளித்து வரும் நாடுகள் எதிர்பார்க்கின்றன.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.