இரான் - துருக்கியிடையே புதிய ஒப்பந்தம்: ஆட்டம் காணுமா டாலர்?

October 22, 2017

இரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தம்மிடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் அனைத்தையும் தம் இரு நாட்டு நாணயங்களிலேயே செய்து கொள்ளப் போவதாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.

இரானின் துணை அதிபர் இஷாக் ஜஹாங்கீரியின் துருக்கி பயணத்தின் போது, இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

டாலர் மற்றும் யூரோ அல்லாமல் நேரடியாக தம் நாட்டு நாணயங்கள் மூலமாகவே செய்துகொள்ளப் போகும் இந்தப் புதிய வர்த்தக ரீதியான மாற்றுத் திட்டத்தின் மூலம் தற்போது நடைபெறும் 10 பில்லியன் டாலர் வர்த்தகம் 30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவ்விரு நாட்டுத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- டாலர் மூலம் உலகில் படம் காட்டும் அமெரிக்காவுக்கு 2017 ல் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய ஆப்புகளில் ஒன்று இது.

- ஒவ்வொரு நாடும் தத்தம் நாட்டு நாணயத்திலேயே வர்த்தகம் செய்து கொள்வோம் என்ற சுயமரியாதை முடிவுக்கு வர துருக்கியும் இரானும் பாதை அமைத்துக் கொடுத்துள்ளன.

- இனிமேல் பெட்ரோலுக்கு விலையாக தங்கம் மட்டுமே பெறுவோம் என்ற முடிவுக்கு வந்த இராக்கின் சதாமையும் லிபியாவின் கடாபியையும் ஒழித்ததுபோல் எல்லா காலத்தும் சட்டாம்பிள்ளைத்தனம் செய்து கொண்டிருக்க முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொள்ளப்போகிறது!

- அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் இரானுக்குள் முதலீடு செய்யத் தயங்கி வரும் உலக வியாபாரிகளின் கவனத்தை இந்த அறிவிப்பு ஈர்ப்பது உறுதி.

- இரானின் இம்முடிவு அமெரிக்காவுக்குக் கொடுத்திருக்கும் சம்மட்டியடி. அதற்கு ஒத்துழைப்பு நல்கும் துருக்கிக்குப் பாராட்டுக்கள்!

- அனைத்தையும்விட மேலாக, சன்னி நாடுகளான துருக்கி & கத்தார் ஷியா நாடான இரானுடன் இணைந்து செயல்படுவது முஸ்லிம் உலகினுள் நிகழும் மாபெரும் மாற்றத்துக்கான தெளிவான அறிகுறி! இனியும் நீண்ட காலத்துக்கு சலஃபு, ஷியா கொள்கை முதலீடுகளைக் கொண்டு முஸ்லிம்களிடையே அரசியல் பிளவு வியாபாரம் நடத்திக் கொண்டு செல்ல இயலாது!

- இந்நிகழ்வு உருவாக்கப்போகும் சலனம் நிச்சயமாக அமெரிக்காவைப் பெரிய அளவில் பாதிக்கும். அதே சமயம், உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப் பெரும் பிரதிபலிப்பை இது உருவாக்கும். தம் அதிகார மேன்மைக்குத் தலைவேதனையாக ஆகப்போகும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமயோஜித காய் நகர்த்தலை அமெரிக்கா என்ன விலை கொடுத்தும் முறியடிக்க முனையும். அதனைத் துருக்கியும் இரானும் எவ்விதம் எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தது.

-அபூசுமையா

தற்போது வாசிக்கப்படுபவை!