பசு பயங்கரவாதிகளின் கோர முகம் - 2017ல் நடத்தப்பட்ட படுகொலைகள் ஒரு பார்வை!

Sunday, 31 December 2017 15:17 Published in சிறப்பு

மாட்டுக்கறி உள்ளிட்ட விவகாரங்களால் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகள் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கொலையாளிகள் ஒருவர்கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதே அதிர்ச்சி தரும் தகவல்.

பெஹ்லுகான்

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி பசு பாதுகாப்பு பயங்கரவாத கும்பலால் சாலையில் வைத்து பால் வியாபாரியான பெஹ்லுகான் பசுக்களை கடத்தியதாகக் கூறி அடித்து கொலை செய்யப்பட்டார். இவரிடம் கால்நடைகளை கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் இருத்தும் இவரை பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை செய்தனர்.

முன்னதாக படுகாயமடைந்த பெஹ்லுகான் மருத்துவமனையில் மரண வாக்குமூலமாக காவல்துறையிடம் தன்னை தாக்கியதாக கூறிய ஓம் யாதவ், ஹுகும் சாந்த் யாதவ். சுதிர் யாதவ், ஜக்மல் யாதவ், நவீன் ஷர்மா மற்றும் ராகுல் சைனி ஆகிய வலது சாரி இந்து அமைப்புகளின் உறுப்பினர்களை உரிய ஆதாரங்கள் இருந்தும் காவல்துறை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது.

சிறுவன் ஹாபிஸ் ஜுனைத்

மூன்று வருடங்களாக குர்ஆனை மனனம் செய்து முழுமையாக இவ்வருடம் முடித்தவர் ஹரியானாவை சேர்ந்த 16 வயது ஹாபிஸ் ஜுனைத். இவருக்கு அவரது தாய் 1500 ரூபாய் பரிசளித்தார். அதனை பெற்றுக் கொண்ட ஜுனைத் டெல்லி ஜும்மா மசூதியில் பெருநாளைக்கு பொருட்கள் வாங்க அவரது சகோதரர்களுடன் சென்றார்.

பொருட்களை வாங்கி மகிழ்ச்சியுடன் டெல்லியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்த பாலகனை இந்து பயங்கரவாத கும்பல் அடித்து சின்னாபின்னமாக்கி ரெயிலிலிருந்து துக்கி வீசியது. அத்துடன் அவரது சகோதரர்களும் தாக்கப்பட்டு வெளியில் வீசப்பட்டனர். படுகாயமடைந்த ஜுனைத் பரிதாபமாக பலியானார்.

மாட்டுக்கறிக்காக இந்த படுகொலையும் நடந்தது. பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளும் இப்போது மகிழ்ச்சியாக உலா வருகின்றனர்.

ஜாஃபர்கான்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரதாப்கர் என்ற பகுதியில் பெண்கள் இயற்கை உபாதைக்காக செல்லும்போது அவர்களை நகராட்சி ஊழியர்கள் தங்களது செல்பேசியில் படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் செய்துள்ளனர்.

இதனை ஜாபர்கான் (55) என்பவர் அதைத் தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜாஃபர்காணை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் அவர் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார்.

உஸ்மான் அன்சாரி

2017 ஜூன் 27 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த செவ்வாய் மதியம் உஸ்மான் அன்சாரி என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது வீட்டின் ஒரு பகுதி தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இவரது வீட்டின் முன் ஒரு பசு இறந்து கிடந்ததே இந்த வன்முறைக்கு காரணமாக கூறப்பட்டது.

படுகாயமடந்த உஸ்மான் அன்சாரி 8 நாட்கள் நினைவின்றி இருந்தார். சுமார் 2 மாத சிகிச்சைக்குப் பிறகே அவர் மீண்டார்.

அஸ்கர் அன்சாரி

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் அலிமுதீன் என்ற அஸ்கர் அன்சாரி. மாட்டுக்கறியை வேனில் எடுத்து சென்றபோது பஜர்தாண்ட் கிராமத்தில் அவரது வாகனத்தை மறித்த பசு பயங்கரவாத கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது.அந்த கும்பல் அவரது வேனையும் தீ வைத்து எரித்தது. இந்த தாக்குதலில் அஸ்கர் அன்சாரி பரிதாபமாக உயிரிழந்தர்.

இந்த கொலை தொடர்பில் கைதான 10 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்வர் ஹுசைன் மற்றும் ஹஃபீசுல் சேக்

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டம் பர்ஹோரியா கிராமத்தில் மாடுகள் விற்பனையாளர்கள் அன்வர் ஹுசைன் மற்றும் ஹஃபீசுல் சேக் ஆகியோர் மாடுகளை ஏற்றி சென்ற வாகனத்தை வழிமறித்த பசு பயங்கரவாதிகள் அவர்கள் இருவரையும் வெளியே இழுத்து கடுமையாக தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி காவலர்கள் இருவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தனர்.

மூன்று முஸ்லிம்கள்:மேற்கு வங்கம்!

2017 ஜூன் 22 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் டினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாடு திருடியதாகக் கூறி சமீருத்தீன் ஹக், நசீருல் ஹக், மற்றும் நசீர் ஹக் ஆகிய முன்றுபேரை பசு பயங்கரவாதிகள் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர்,

மூன்று பேரையும் வன்முறை கும்பல் தக்கும்போது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வரும்போது மூவரும் சுயநினைவின்றி கிடந்தனர். உடன் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முஹம்மது அஃப்ரஜுல்

மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி முஹம்மது அஃப்ரஜுல் என்பவர். இவர் ராஜஸ்தானில் வைத்து சம்புலால் என்பவனால் கடுமையாக தாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த கொடூர கொலையை , கொலையாளி வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, லவ்ஜிஹாதில் ஈடுபடும் அனைவரும் இவ்வாறே தண்டிக்கப்படுவார்கள் என அந்த வீடியோவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தான்.

ஆனால் அவனிடம் போலீஸார் நடத்திய விசாரனையில் அவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருந்த கள்ளத் தொடர்பை மறைக்கவே இந்த படுகொலையை நடத்தியதாக ஒப்புக் கொண்டான்.

- அன்பழகன்

Last modified on Sunday, 31 December 2017 17:05
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.