ஆசிஃபா வன்புணர்வு படுகொலையும் மோடியின் மவுனமும் - நியூயார்க் டைம்ஸ் விளாசல்!

ஏப்ரல் 18, 2018 2246

ந்தியாவில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல், முஸ்லிம்கள், தலித்துகள் பெண்கள் மீதான தொடரும் தாக்குதல் சம்பவங்களை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டுதான் உள்ளன.

அந்த வகையில் காஷ்மீர் 8 வயது சிறுமி ஆசிஃபா கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாகி கொடூரமாக படுகொலை செய்யப் பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சியுறச் செய்தது. இதனை தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் முஸ்லிம்கள், பெண்கள், தலித்துகள் என தொடர்ந்து தாக்கும் பாஜகவின் கொடூர முகத்தையும் அதன் பிரதிநிதியாக அடையாளம் காணப்படும் பிரதமர் மோடியையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி ட்வீட்ஸ் செய்பவர். தம்மை ஒரு திறமையான பேச்சாளராகவும் கருதுகிறார். அவரது பாரதீய ஜனதாக் கட்சியின் அடிப்படைப் பிரிவான தேசியவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு அடிக்கடி இலக்காகும் பெண்களும் சிறுபான்மையினரும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் பற்றி பேசவேண்டியிருக்கும்போது மட்டும் அவர் தனது குரலை இழக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் 8 வயது சிறுமி ஆசிஃபாவைக் கொடூரமாகக் கற்பழித்து கொலை புரிந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அவரது அரசியல் கட்சியின் ஆதரவாளர்களைக் காக்கும் வகையில் இரக்கமற்று நடந்துகொள்ளும் அரசை எதிர்த்து இந்தியர்கள் சென்ற வார இறுதியில் தெருக்களுக்கு வந்து போராடினர். ஆனால் திருவாளர் மோடி, இந்த குற்றத்தைப் பற்றியோ அவரது ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட இதர வழக்குகளைப் பற்றியோ பேசவே இல்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் ஹிந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு பகுதியிலிருந்து நாடோடி முஸ்லீம் பேக்கர்வால் சமூகத்தை அச்சமூட்டி வெளியேற்றவதற்காக அச் சிறுமி மீது நடந்த வன்கொடுமைத் தாக்குதலைப் பற்றி பேசவே மறுத்துவிட்டார். கடத்தப்பட்டு, இந்துக்களின் கோவில் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு பலநாள்கள் பலாத்காரம் செய்யப்பட்ட அச் சிறுமியைப் பற்றிய செய்திகளை படிப்பதென்பது மனிதத்தன்மையே அற்ற அந்தக் கொடூரத்தை அறிந்துகொள்வதற்குப் போதுமானதாகும்.

பொதுமக்கள் சீற்றத்திற்கு பதில் அளிக்காமல் திருவாளர் மோடியோ அமைதியாக இருக்க, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவரை மாநில அதிகாரிகளின் விசாரனையிலிருந்து விடுவித்து மத்திய அரசின் விசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் நடத்திய பேரணியில், குஜராத் மற்றும் காஷ்மீரை ஆளும் அரசின் கூட்டணியான அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய விடாமல் இந்துத்துவாதிகளின் வக்கீல்கள் கும்பல் ஒன்று தடுத்தது. அந்தத் தற்காலிகத் தடங்கலுக்குப் பிறகு போலீசார் மற்றும் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர் உட்பட எட்டு நபர்கள்மீது அதிகாரிகள் முறையாகக் குற்றங்களைப் பதிவு செய்தனர்.

இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆளும் தனது பி.ஜே.பீ கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக எழுப்பப்பட்ட கற்பழிப்பு குற்றச்சாட்டைப் பற்றியும் திருவாளர் மோடி வாய்திறக்க விரும்பவில்லை. கடந்த கோடைப் பருவத்தில் தம்மை சட்டமன்ற உறுப்பினர் கற்பழித்ததாக குற்றம் சுமத்தினார் அந்த இளம் பெண். ஆனால் அண்மைக் காலம் வரை அந்த உறுப்பினருக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்வதில் காவல்துறை இழுத்தடித்தது. பிறகு இப்பொழுது அந்த இளம் பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் இருக்கும்போது மரணமடைந்து, அவரைக் கொலை புரிய அந்த சட்டமன்ற உறுப்பினரும் அவருடைய சகோதரரும் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், "எங்கள் மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்" என்றும் வெள்ளிக்கிழமையன்று, திருவாளர் மோடி கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சு வெற்றுத்தனமானது. ஏனென்றால் அவர் வழக்குகளைப் பற்றி பேசுவதற்கு நீண்ட காலம் காத்திருந்தார். அதையும் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் என்று பொதுமைப்படுத்தியே பேசியுள்ளார். கடந்த காலத்திலும், அவரது அரசியல் இயக்கத்துடன் இணைந்திருக்கும் குழுக்கள் இந்தியாவின் சிறுபான்மையினரான முஸ்லீம்களையும் தலித் மக்களையும், அவர்கள் ஹிந்துக்களுக்கு புனிதமான பசுக்களை கொலை செய்வதாக மோசடிக் குற்றஞ்சாட்டி தாக்கிக் கொலை புரிந்தபோதும் இதேபோன்ற அணுகுமுறையை அவர் எடுத்துள்ளார்.

திருவாளர் மோடியின் மௌனம் எந்தளவு வேதனையானதோ அதே அளவு புதிரானது. புது தில்லியில் ஒரு பேருந்தில் ஓர் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டபின், 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2013 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவருக்கு முந்தைய அரசு திட்டவட்டமான நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டது. அதிலிருந்து மோடி பாடம் கற்றுக்கொள்ளத் தவறிவிட்டார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான அந்த அரசாங்கம், தமது இரக்கமற்றத் தன்மைக்கு 2014 பாராளுமன்றத் தேர்தலில் பெரும் அரசியல் விலையை வழங்கியது; பி.ஜே.பீ. அந்தத் தேர்தலில் வென்றது. ஏனென்றால் ஊழல் மோசடிகளால் புறக்கணிக்கப்பட்ட, திசைகாட்டியற்ற இந்தியர்களின் தேவைகளுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பாக்குவேன் என்று திருவாளர் மோடி வாக்குறுதி அளித்ததால்

ஆனால் அதற்குப் பதிலாக உலகின் ஆக உயர்ந்த ஜனநாயக நாட்டின் நலனைப் பற்றி அக்கறைகொண்ட அனைவருக்கும் ஆழ்ந்த கவலையைத் தருகின்ற மௌனத்தைத்தான் அவர் கடைப்பிடித்து வருகிறார்.

- இந்நேரம் செய்திக் குழு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...