மனிதமே புனிதம்!

ஏப்ரல் 28, 2018 1241

தங்களின் தேவை என்ன? என்ற கேள்வி எழுப்பினால் மானுடம் உய்வதற்கு என்று விடை சொல்வர் ஆன்மிகவாதிகள். மானுட உய்வென்பது பூவுலகில் மக்கள் திரளின் பக்தியும் மேலுலகில் தனிப்பட்டோர் தம் முக்தியும் ஆகும்.

பூவுலகில் பக்தியைக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட வேண்டிய பண்புகளாக, இணக்கம், ஒழுக்கம், அன்பு, நேர்மை, நீதி தவறாமை, போன்றவை உள்ளன. இவ்வாறு நன்னெறிகள் மீட்டப்படுவதும் மீட்கப்படுவதும் உலகில் இணக்கத்தை, இனிமையை, அமைதியைத் தரும்.

மதங்கள் மனிதர்களைத் திருத்தத்தான் வந்தன. ஆனால் இன்றைக்கு உலகத்தில் மதங்களை வைத்தே எல்லா சண்டைகளும் ஏற்படுகின்றன. இதன் கருத்து, தன்னுடைய அதிகாரப் போட்டியில் மதத்தையும் மனிதன் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே.

உண்மையில் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக்கொள்வதொன்றே இவ்வுலகம் தன் சிக்கல்களிலிருந்து விடுபட வழியாகும். தம்மைத் தவிர, ஒவ்வொருவரும் பிறரை மட்டும் திருத்த நினைப்பதுவே இவ்வுலகின் நோயாக இருக்கிறது எனலாம்.

பொதுவாக, உலகின் ஒட்டுமொத்த அறிவில் 1 விழுக்காடு (1%) மட்டுமே ஒரு தனிமனிதன் பெற்றிருக்கிறான். அதை அறிந்தும் இருக்கிறான். அதுபோன்றே, சில வகை அறிவு பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவன் அறிந்திருக்கிறான். இது 3 விழுக்காடு (3%) இருக்கலாம். மீதமுள்ள 96% அறிவு பற்றி எந்த மனிதனும் அறிந்திருக்கவில்லை என்பதை விட, தான் அறிந்திருக்கவில்லை என்பதைக் கூட அவன் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையிலும் உண்மை.

அறிந்திருப்பதும் அதை அறிந்திருப்பதும் 1% (அறிவு பற்றிய அறிவு).
அறிந்திருக்கவில்லை என்று அறிந்திருப்பது 3% (அறியாமை பற்றிய அறிவு).
அறியாமலிருப்பதையும் அறியாமலிருப்பதே மீதமுள்ள 96% எனலாம். (அறியாமை பற்றிய அறியாமை).
இது அனைத்து மனிதருக்கும் பொருந்துவதே.
இந்த அறியாமையின் அறியாமையே இருட்டான அறியாமை (Blind Spot) எனலாம்.

இந்த, நம் அறியாமையின் இருட்டுப்பக்கங்களை நாமறிய முடியாவிட்டாலும் மனைவி உள்ளிட்ட நம் மேலதிகாரிகள் அதை எளிதில் கண்டுகொள்வர். "நீ(ங்க) ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லே". இப்படித்தான் உண்மை இருக்கிறது என்பதால் தான் தமிழன் அன்றே சொன்னான்: "...மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே".

மன்னர் மகனாக இருந்தாலும், மண்குடிசை மைந்தனானாலும், மனித சாதனைகளின் மூலங்களான, எண்ணம் (Thought), சொல்(Word), செயல்(Action) ஆகியவற்றை இறைவன் பாரபட்சமின்றி (அனைத்து மனிதருக்கும்)ஒன்றுபோலவே வழங்கியிருக்கிறான். அதை வளர்த்தெடுக்கும் விதத்தில் தான் மனிதர்கள் வேறுபட்டுப்போய் விடுகிறார்கள்.

ஜாதி, இனம், மதம், மொழி போன்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்து, சகமனிதனை, மனிதத்திற்காகவே நேசிக்க வேண்டும். அப்படி மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத் தொடங்கிவிட்டால்........ வெறுப்பு காணாமல் போய்விடும். எங்கே வெறுப்பு இல்லையோ... அதனால் ஏற்படும் பிரசினைகளும் இல்லாமலாகி விடும். சகமனிதருக்கு பாராமுகம் காட்டுபவர் செய்கின்ற இறைவணக்கத்தை இறைவன் விரும்புவதில்லை. "பக்கத்துவீட்டான் வறுமையில் வாடிக்கொண்டிருக்கையில் நீ பத்து ஹஜ்ஜு செஞ்சு என்ன பிரயோசனம்?"

"அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் உண்ணுபவர் இறைநம்பிக்கையாளராக இருக்க முடியாது" என்ற நபிமொழியும் நினைவுக்கு வருகிறது. கணக்கு வழக்குகள் துல்லியமாகத் தீர்க்கப்படும் அந்த நாளில், மனிதனிடம் இறைவனே இப்படி கேட்பானாம்: " நான் பசியோடு இருந்தேனே, உனக்கு வசதியினை நான் அளித்திருந்தும் நீ எனக்கு உணவளிக்கவில்லையே?"

இறையடியானாகிய அந்த மனிதன் பதற்றத்தோடு, "இறைவா, நீயே சர்வ வல்லமை படைத்தவன், உனக்கு எப்படி பசி ஏற்பட முடியும்?" என்று வினவ,
அதற்கு இறைவன், "இன்ன மனிதனை இன்ன இடத்தில் நீ பசியோடு இருக்கக் கண்டிருந்தும் உணவளிக்காமல் போனாயே.... அவனுக்கு உணவிட்டிருந்தால்.. அங்கு என்னை நீ கண்டிருப்பாய்" என்ற பதிலளிப்பானாம். நபிவழிக் கிரந்தங்களிலிருந்து மேற்கோள் காட்டுவதெனில் " வேசியொருத்தி வாயில்லாப் பிராணியான ஒரு நாய்க்குத் தாகம் தணித்த இரக்கச்செயலால் இறைவனின் கருணைப்பார்வைக்கு ஆளானாள்" என்பதை அறிஞர்கள் சுட்டுவர்.

மிருகங்களைக் கூட உணவுக்காக அன்றி கொல்லக்கூடாது என்பர். அதுவும் இறைவனின் படைப்பு என்ற உணர்வை நாம் மறந்து விடக்கூடாது. ஒரு உண்மையான இறையடியானால் சக மனிதர்களை எப்படி வெறுக்க முடியும்?. அப்படி வெறுத்தால் அது இறைவனின் படைப்பொன்றை அவமதித்த குற்றமாகும் அல்லவா

உண்மையில் வெறுப்பு, ஆணவம், கோபம், சுயநலம் போன்றவை சாத்தானிய இயல்புகள். இறைவனின் பிரதிநிதியாகத் தனனைக் கருதும் மனிதன், இவற்றைக் கைவிட்டுவிட்டு இறைமை வலியுறுத்தும் அன்பு, நேசம், உண்மை, பணிவு, பொதுநலநோக்கு, நல்லெண்ணம் போன்றவற்றையே மேற்கொள்ளவேண்டும். மனிதன் மேம்படுவதும், சீரழிவதும் தன் எண்ணங்களாலேயே.

" இறைவன் உங்கள் புறத்தோற்றங்களைப் பார்ப்பதில்லை; உங்கள் உள்ளத்தையே பார்க்கிறான்"

எடுத்தவுடனேயே, "என்னால ஆகாது", "இது சரிப்பட்டு வராது" "இதெல்லாம் சாத்தியமேயில்லை" என்று எதிர்மறை எண்ணங்களை மொழிவீர்களேயானால், உங்களுக்கு நீங்களே சிறைப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். உண்மையில் சொந்தச்சிறைகளில் தானே பெரும்பாலான மக்கள் 'அக'ப்பட்டுக் கிடக்கிறார்கள். தேர்ந்தெடுக்கும் உரிமை (Choice) இறைவன் மனிதனுக்கு அளித்த மற்றொரு வரம். நாம் நன்மையை விட்டுவிட்டு தீமையை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும், மொழிவது கூட உள்ளத்தில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பாதிப்பை ஏற்படுத்த வல்லது.

எனவே, பேசினால், நல்லதையே பேசுங்கள். ஆம், மொழியும் விதத்தில் தான் எத்தனை விளைவுகள்."அன்பினால் சிங்கத்தின் மீசையைக் கூட பிடுங்கலாம்" என்கிறது ஒரு முதுமொழி. தமிழில் கூட அழகாகச் சொல்வார்கள்: "எண்ணம் போல் வாழ்வு" என்று. அலுவலகமானாலும், இல்லறமானாலும், முதல் சில மாதங்களில் காணப்படுகிற மகிழ்ச்சியும் நிம்மதியும் போகப்போக குறைந்துவருவதன் காரணத்தைச் சிந்திக்க வேண்டும். நோக்கத்திலிருந்து நழுவி சுயநலத்தில் வீழ்தலே அதற்குக் காரணம் என்பதை உணர வேண்டும்

அலுவலகம்/நிறுவனம் என்றால்... முதலில் நிறுவன நலன்களை முதன்மைப்படுத்தி உழைக்கிற நாம், படிப்படியாக... தாழ்ந்து... தன்னலமே பிரதானம் என்று ஆவதே.. அந்த மகிழ்ச்சிக்குப் பதிலாக மன அழுத்தத்தினை உண்டாக்குகிறது. "பிறருக்கு நீங்கள் அளிக்கும் எதிர்மறை பதில்கள், உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்வதாகவே பொருள்" . விதைப்பதுவே அறுக்கப்படும். அதே போல, இல்லறம் என்று வருகையில்... கல்யாணத் தொடக்கத்தில் காணப்படும் அன்பு மெல்ல, மெல்ல மங்கி ஒளியிழந்து.. ஒருவருக்கொருவர் குறைகள் காணத் தொடங்கிவிட்டால்... அங்கே, தான்மை மேலோங்கிவிடுகிறது. விளைவு, நிம்மதியிழப்பும் கவலையும் தான்.

தயக்கத்தை உடைப்போம்; மனித மனம் இயல்பாகவே எதிர்ப்பு (Resist) காட்டக்கூடியதாகவே இருக்கிறது. எந்த நல்ல காரியத்திற்கும் "அதெல்லாம் வேணாம்ப்பா" என்பவர்களே அதிகம். தயங்காமல், களம் காணுவோம். நமது தனித்திறனைக் கண்டறிவோம். இந்த உலகம் நமக்கானது. இறைவனால் தன்னாட்சி உரிமையும், தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட்டு இந்த உலகத்திற்கு நாம் வந்தது வெறும் பார்வையாளராக இருந்துவிட்டுச் சென்றுவிடுவதற்கா? நானும், நீங்களும் இந்த உலகத்தின் பங்களிப்பாளர்களுள் ஒருவர். நாம் பங்களிக்கும் இந்த உலகம், இனிய உலகமாகத் திகழ வேண்டாமா?

மனிதம் மதிப்போம் அதுவே புனிதம் ஆகும்.

எண்ணத்தில் நல்லதைப் பேணுவோம் - அதுவே மொழியாகிறது.
மொழியில் நல்லதைப் பேணுவோம் - அதுவே செயலாகிறது.
செயலில் நல்லதைப் பேணுவோம் - அதுவே வாழ்க்கையாகிறது.

ஆம். நமது வாழ்க்கை நமது கையில்.

-இப்னு ஹம்துன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...