தீக்குளிக்கும் வாரியரும் கண்சிமிட்டும் வாரியரும்

மே 05, 2018 1381

த்மாவத்(தி) திரைப்படம் கொஞ்சம் தாமதமாக ஆனால் மிகுந்த ஆவலுடன் பார்த்த எனக்கு சில எதிர்பாராத அதிர்ச்சிகள் காத்திருந்தது. படம் எடுக்கப்பட்ட விதம், கலை நயம், தொழில் நுட்பம் மற்றும் அழகுணர்ச்சி ததும்பும் திரைக்காட்சிகள் இவற்றில் குறை ஒன்றும் இல்லை. ஆனால் திரைக்கதையில் முக்கியமான மூன்று கதாபாத்திரங்களையும் சித்தரித்த விதம் கொஞ்சம் சொதப்பலே .

தீக்குளிக்கும் வாரியர்  (WARRIOR ) 

பத்மாவதியைப் பற்றி ஏற்கனவே ஒரு போர்க்குணம் கொண்ட வீரமங்கையாக, வாரியராக(warrior) மனதில் உருவகப்படுத்தி ஒரு பிம்பம் கொண்டிருந்தேன். படம் தொடங்கும் முதல் காட்சி அதை உறுதிப்படுத்தியது என்றே சொல்லலாம். மானை வேட்டையாட வில்லும் அம்புமாக ஓடும் அழகான தீபிகாவைப் (பத்மாவதி) பார்த்ததும் ஆஹா! நாம் நினைத்தது சரியென்று தோன்றியது. அதே சமயம் கூடவே ஏனோ எனக்கு மான் வேட்டை புகழ் சல்மான்கான் நினைப்பும் வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அந்த ஒரு சீனோடு சரி. அடுத்த சீனில் பத்மாவதி மன்னன் ரத்தன் சிங்கின் (ஷாஹித் கபூர்) காதல் வலையில் வீழ்கிறார். அதற்குப்பிறகு வில், அம்பு, கத்தியென்ன, ஒரு அரை பிளேடு கூடக் கடைசி வரை கையில் எடுக்கவில்லை.

பத்மாவதி ரத்தன் சிங்கை காதலிக்கிறார். திருமணம் புரிந்து இரண்டாவது மனைவியாகிறார். பிறகு நன்றாக நடனமாடுகிறார். இனிமையாகப் பாடுகிறார். கணவனை சத்தியவான் மனைவி சாவித்திரி போல வில்லனிடமிருந்து தந்திரம் செய்து மீட்டு வருகிறார். சாம்பிளுக்கு ஒரு கத்திச்சண்டை கூட . இல்லை.. அட்லீஸ்ட் ஒரு வில் அம்பு எய்யும் போட்டி.. இல்லவே இல்லை.. பெண் வீராங்கனைகள் திரைப்படங்களில் சுழன்று சுழன்று போரிட்டுப்பார்த்து பழகிய நமக்கு இது ஒரு மிகவும் அசுவாரசியமான சினிமாக் கதாபாத்திரம் என்றே சொல்லலாம். படம் மேலும் தொடரத்தொடர பத்மாவதியைப் பற்றிய எனக்கிருந்த வீரமங்கை பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தெறியப்படுகிறது.

பத்மாவதியின் கணவன் மன்னன் ரத்தன் சிங் ஒரு மாவீரனாகக் காட்டப்படுகிறார். ஆனால் படத்தில் கொஞ்சமும் விவேகம் இல்லாதவராக சித்தரிக்கப்படுகிறார். எப்போது பார்த்தாலும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போர்க்களத்தில் ஒரு வீரனாகவே இறந்து விடுவேன் என்று அடிக்கடிச்‌ சொல்லி அடம் பிடிக்கிறார். அதேபோல் மிக எளிதில் வில்லனால் வஞ்சித்துக் கொல்லப்பட்டு இறந்தும் போகிறார்.

படம் முழுக்க வில்லனாக வலம் வரும் அலாவுதீன் கில்ஜியை (ரன்வீர் சிங்) கமலின் குணா மற்றும் ஆளவந்தான் இரண்டும் கலந்த ஒரு சைக்கோவாகவும் காமக்கொடூரனாகவும் காட்டியுள்ளார்கள். இதை எதிர்த்து , ரன்வீர் சிங்கின் ரசிகர்களே கூட ஒரு கடுமையான போராட்டம் நடத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு சில இடங்களில் அவர் பேசும் வசனங்கள் மட்டும் என்னவோ கிருஷ்ணரின் கீதாபதேசம் போலத் தத்துவ நெடியடிக்கிறது. உதாரணமாக... "போர்க்களத்தில் எனக்குத் தெரிந்த ஒரே தர்மம் வெற்றி பெறுவது மட்டும் தான்."

கடைசியில் பத்மாவதியை அடைய அவர் முயற்சிக்கும் காட்சியில் கொத்துக் கொத்தாக ராஜபுத்திரப் பெண்கள் நெருப்பில் விழ, இப்போதாவது பத்மாவதி கையில் கத்தியை எடுத்துப் பகைவர்கள் இரண்டு மூன்று பேரையாவது வெட்டிச் சாய்ப்பாரோ என்ற என் ஆதங்கம் கடைசி வரை நிறைவேறாத கற்பனையாகவே போய்விட்டது. படம் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்க அவரும் நெருப்பில் வீழ்கிறார். தீக்குளிக்கும் பத்மாவதி ஒரு வரலாற்று உண்மையென்பதால் இயக்குனருக்கு அதை இறுதியில் காட்டவேண்டிய நிர்பந்தமுண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால் மற்றபடி பத்மாவதியைத் திரைப்பட சுவாரசியத்திற்காகவது இன்னும் கொஞ்சம் போராடும் குணத்துடன் வீரம் செறிந்தவராகக் காட்டியிருக்கலாம் என்பது என் கருத்து.

கண் சிமிட்டும் வாரியர் (VARRIER)

குடித்து விட்டு தன் பெண்டாட்டியை நடுத்தெருவில் போட்டு அடிப்பதைச் சுற்றி நின்று மக்கள் மிகச்சாதரணமாக வேடிக்கை பார்த்த ஒரு காலகட்டம். .
"அது அவன் குடும்ப பிரச்னை. இதில் நாம எப்படித் தலையிட.". "அவன் பொண்டாட்டி.. அவன் அடிக்கிறான்.. இன்னைக்கு அடிச்சுக்குவாங்க.. நாளைக்கு அவங்க மறுபடி சேந்துக்குவாங்க!"..போன்ற டயலாக்குகள் பேசி ஷோ பார்ப்பார்கள் மக்கள். அத்தகைய காலகட்டங்களிலும் இரண்டு விஷயங்கள் பெண்களுக்கெதிரான மிகப்பெரிய வன்கொடுமைகளாகப் பார்க்கப்பட்டது. ஒன்று காதல் கடிதம் கொடுப்பது. மற்றொன்று பெண்களைப் பார்த்து கண் சிமிட்டுவது அல்லது பேச்சு வழக்கில் சொல்லும் 'கண்ணடிப்பது'.

இதில் காதல் கடிதம் கொடுப்பவருக்கு பொதுவாக மிரட்டல்கள், திட்டுகள், லேசான தர்ம அடி மற்றும் பஞ்சாயத்து போன்றவை நடக்கும். சிலசமயம் வெளியே விஷயம் தெரிந்தால் கடிதம் பெறப்பட்ட பெண்ணுக்கு அசிங்கம் என்று சிலர் முடிவெடுத்து அந்த விஷயத்தை மறைத்து வெறும் மிரட்டல் லெவலில் முடித்து விடுவார்கள். ஆனால் ஒரு பையன் ஒரு பெண்ணை பார்த்துக் கண்ணடித்து விட்டால் அவன் அத்தோடு தொலைந்தான்.

முதல் காட்சியில் அந்தப் பெண் அழுது கொண்டே வீட்டிற்குச் சென்று "அந்தப் பையன் என்னைப் பார்த்து கண்ணடித்து விட்டான்" என்று சொல்வாள். அடுத்த நிமிடம் வன்முறை காட்சிகள் மளமளவென்று உருவெடுக்கும். அந்தப் பெண்ணின் தந்தை, மாமன், சகோதரர்கள் என்று ஒரு படையே திரண்டு வந்து கண்ணடித்த பையனை துவம்சம் செய்து விடும். கண்ணடித்த பையனின் அந்த ஒரு கண்ணை மட்டுமாவது நோண்டி எடுக்குமாறு சொந்தக்காரப் பெண்கள் கூட்டம் சிபாரிசு செய்யும்.
எனக்குத் தெரிந்த ஒரு பையன் இப்படிக் கண்ணடித்து மாட்டிக்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் வீட்டாரின் எதிரிப்படை திரண்டு வருவதற்குள் பையனின் சொந்தக்காரப் பட்டாளம் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியது. இதற்கு தலைமையேற்றது இப்படிப்பட்ட விஷயங்களில் அனுபவம் வாய்ந்த பழம் தின்னுக் கொட்டைப் போட்ட ஒரு பிதாமகர்.. அவரது ஆலோசனைப்படி பையன் அவர்கள் வரும்போது தொடர்ந்து ஆனால் விட்டு விட்டு ஒரு கண்ணை மட்டும் சிமிட்டிக் கொண்டே இருக்க வேண்டும். காரணம் கேட்டால் அவனுக்கு கணணில் ஏதோ ஒரு கோளாறு; அதற்குச் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் அந்தமாதிரி தப்பு தாண்டா எல்லாம் செய்யக் கூடிய பையன் இல்லை என்று விளக்கம் கூற ஏற்பாடானது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாகி ஏறக்குறைய எதிரிப் படையினர் நம்பி விட்டாலும் எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் கண்ணடிக்கும் பையனை ஒரு நாளைக்கு 'கண்'காணிக்க என்று ஒரு நபரை விட்டுச் சென்றார்கள். இதனால் அன்று முழுவதும் நம் ஹீரோ கண்ணடித்துக் கொண்டே இருக்க வேண்டியதாகி விட்டது. அதன் பின்னர் சில நாட்களுக்கு அவன் அறியாமலேயே கண் துடித்துக்கொண்டே இருந்ததாக என்னிடம் புலம்பினான். அவனுக்கு இதை விட கொடுமையான தண்டனை இருந்திருக்க முடியுமா என்ன? அந்த பையன் மேலும் சொன்னது "இதற்கு பதில் உதையோ அல்லது கொஞ்சம் தர்ம அடியோ கிடைத்திருந்தால் கூட சந்தோசமாக நான் வாங்கியிருப்பேன்."

இப்போது இந்தக் கதை அப்படியே உல்ட்டா. பிரியா வாரியர் (இவருக்கும் கிருபானந்த வாரியாருக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை) ஒரு கேரளத்து புதுமுக இளம்நடிகை. யூ-டியூப்-பதிவில் ‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தின் பாடல் காட்சிக்காக இவர் ஒரு பையனைப்பார்த்து கடந்த இரண்டு மாதங்களாகக் கண்ணடித்து கொண்டிருக்கிறார். இந்தக் கட்டுரை எழுதும் போது இதுவரை குறைந்தபட்சம் ஆறரைக் கோடி தடவைகளுக்கும் மேலாக கண்சிமிட்டி விட்டார். இந்தக் கட்டுரை பதிவாகும்போது கண்ணடிப்புகள் இன்னும் சில பல லட்சம் தடவைகள் கூடியிருக்கலாம். அவரைச் சமூகமும் வலைத்தளங்களும் 'ஸோ கியூட்' என்று தாங்கிக் கொண்டாடி வருகிறது. அவருக்குப் பாராட்டுகள் பெருகுகிறது. வாய்ப்புக்கள் குவிகின்றன. ‘லைக்’குகள் அள்ளுகிறது. விதவிதமாக கண்ணடிக்க சொல்லிக்கொடுத்து அவர் நடிக்கும் பல்வேறு விளம்பரப்படங்கள் தயாராகி வருகின்றன. ஒரு காலத்தில் கண்ணடித்து அடிவாங்கிய அனைத்து இளைஞர்களும் (இப்போதைய குடும்பஸ்தர்கள்) இதைப்பார்த்து ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள் என்பதில் ஏதாவது சந்தேகம் உண்டா என்ன?.

-சசி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...