ஏஸி ஓர் உயிர்கொல்லியா?

அக்டோபர் 04, 2018 1186

சமீபத்தில், சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மூன்று பேர் , தூங்கும்போது மரணித்த செய்தி தமிழகத்தில் ஏஸி பயன்படுத்துவோரிடையே பரவலாக திடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஸியில் இருந்து வெளியாகும் வாயு உயிர்கொல்லியா? இதை தவிர்ப்பது எப்படி போன்ற கேள்விகள் பலர் மனதில் எழுந்துள்ளன.

இத்தகைய விபத்துகளைத் தவிர்க்கும் சில எளிய டிப்ஸ்களை, இந்நேரம்.காம் வாசகர்களுக்காக இங்கே வழங்குகிறார், கத்தாரில் பணிபுரியும் முஹம்மத் சர்தார். இவர் Air conditioning துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற பொறியியல் வல்லுனராவார்.

1 - ஏஸியில் பயன்படுத்தப்படும் (Gas என்று பொதுவாக அழைக்கப்படும்) Freon வாயு ஓர் உயிர்கொல்லியா? ஆமாம்! நிறமற்ற, மணமற்ற வாயுவாகும். இது எரிபொருள் அல்ல. ஆனால், இதன் இரசாயனம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

2 - ஏஸி வாயுவில் கசிவு இருப்பதை நாமே எப்படி தெரிந்து கொள்வது?

ஏஸி இயங்கினாலும், காற்றில் தேவையான அளவுக்கு குளிர்ச்சி இருக்காது.

3- சரி... வாயுக் கசிவு வீட்டிற்குள் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது?

சமையல் எரிவாயுவிற்கு மணம் சேர்க்கப் படுவது போன்றே, சமீபத்தில் தயாரிக்கப்படும் ஏஸி வாயுவிலும் மணம் சேர்க்கப்படுகிறது. கசிவு வீட்டிற்குள் இருந்தால் வீட்டில் இருப்போரால் உணர முடியும். இவ்வாறு உணர்ந்தால் உடனடியாக ஏஸியை நிறுத்திவிட்டு, டெக்னீஷியனை அழைப்பது அவசியம். வாயுவின் வாசம் உணர முடியாவிட்டாலும், உடல் உபாதைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

4 - ஏஸி மூலம் வாயுக் கசிவு இருந்தால் எத்தகைய பிரச்னை ஏற்படும்?

தலைவலி, கண் எரிச்சல், இருமல், வாந்தி மற்றும் மயக்கம் ஆகியவை ஏற்படும்.

5- வாயுக் கசிவு மூலம் பிரச்னை உள்ளவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

அறையில் ஏஸி இயக்கத்தில் இருந்தால் முதலில் நிறுத்தி விட்டு காற்றோட்டமான வெளிப்புறத்திற்கு செல்ல வேண்டும். சிரமம் அதிகம் எனில், உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.

6 - ஏஸியில் Freon வாயுவை ஒவ்வொரு வெயில் காலத்திற்கு முன்பும் கட்டாயம் நிரப்ப வேண்டும் என்கிறார்களே அது உண்மையா?

இல்லை. வாயுக் கசிவது இருந்தால் ஒழிய அவ்வப்போது நிரப்பத் தேவையில்லை.

ஏஸியை பராமரிக்க ஒவ்வொரு முறையும் டெக்னிஷியன் மட்டும் தான் வந்து பரிசோதிக்க வேண்டும் என்பது இல்லை. கீழ்க்கண்டவை போன்ற சில எளிய குறிப்புகளை அறிந்து வைத்திருந்தால், நாமே பராமரிக்கலாம். ஏஸியும் நீண்ட காலத்திற்கு பிரச்னை இன்றி இயங்கும். செலவும் குறையும். 

அ) ஏஸியை வாங்கி (installation) நிறுவும்போது, அனுபவசாலி டெக்னிஷியன்களை மட்டுமே வைத்து நிறுவ வேண்டும். மலிவான கட்டணம் என்பதால், எலக்ட்ரிஷியன், பிளம்பர் போன்ற பிற துறைகளில் அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு ஏஸியை நிறுவுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

ஆ) குளிர்ச்சி அவ்வளவாக இல்லை என்று உணர்ந்தவுடன், சர்வீஸ் செய்ய செலவாகுமே என்று தள்ளிப் போடாமல், உடனடியாக அனுபவமுள்ள ஏஸி டெக்னிஷியனை வரவழைத்து கம்ப்ரஸர் மற்றும் காப்பர் பைப்களை பரிசோதிக்க வேண்டும். அனுபவமற்ற டெக்னிஷியன் என்றால், கண்ணை மூடிக் கொண்டு லீக்கை சரி செய்யாமல், Freon எனப்படும் கேஸை நிரப்பி விட்டுச் சென்று விடுவார். இது மேலும் நிலமையை சிக்கலாக்கும். எனவே, லீக் எங்கே ஆகிறது என்பதைக் கண்டுபிடித்து அதை முழுமையாகச் சரி செய்த பின்பே ரீ-சார்ஜ் செய்ய வேண்டும்.

இ) ஸ்ப்ளிட் ஏஸி எனில், வீட்டுக்கு வெளியே இயங்கும் கம்ப்ரஸர் / கன்டன்ஸரை பகுதியை நாமே பரிசோதிக்கலாம். அளவுக்கு அதிகமாக தூசு சேர்ந்து இருந்தால் சுத்தப்படுத்த வேண்டும். இயங்கும்போது அதிர்வு இருந்தால் கவனித்து சீர் செய்ய வேண்டும். அதே போல், கண்டன்ஸர் பகுதி துருப்பிடிக்கிறதா, லீக் ஆகிறதா என்பதை கவனிக்கலாம். வாயு செல்லும் குழாய் (Copper pipe) இல் ஏதேனும் டேமேஜ் ஏற்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஈ) ஏஸியில் உள்ள ஃபில்டரை நாமே கழற்றி சுத்தம் செய்யலாம். படியும் தூசைப் பொறுத்து 15 நாட்களுக்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை நன்கு கழுவி சுத்தம் செய்து காய்ந்த பின் பொருத்திக் கொள்வது சிறந்தது.

ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்ட ஏஸி, இப்போது அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இணைந்து விட்டது. எவ்வளவுதான் வசதி இருந்தாலும், ஏஸி என்பது கடுமையான வெப்பத்தைக் குறைக்கவே என்பதை புரிந்து இயக்க வேண்டும். குளிர்ச்சியை நாடி தொடர்ச்சியாக ஏஸியை இயக்குவது உடல் நிலைக்கு பல விதமான கேடுகளையே விளைவிக்கும். இயன்றவரை மின் விசிறியை மட்டுமே பயன்படுத்தி, கடுமையான வெப்பம் ஏற்பட்டால் மட்டும் ஏஸியை இயக்கும்படி பழக்கிக் கொள்ள வேண்டும்.

- முஹம்மத் சர்தார்,
தோஹா-கத்தார்

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...