சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் - மோடி அரசின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

அக்டோபர் 26, 2018 615

பிரதமர் மோடி அரசின் ரஃபேல் ஊழல் உள்ளிட்ட ஏழு ஊழல்களை விசாரித்து வந்த நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எழுந்த நிலையில் அவர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்த சிபிஐ, சி.பி.ஐ. அலுவலகத்திலேயே ரெய்டு நடத்திய ‘வரலாறு’ம் நடந்தது. ஆனால் மோடி அரசு தந்திரமாக ராகேஷ் அஸ்தானாவை விடுப்பில் அனுப்பி விட்டு வழக்கை விசாரித்த அல்லோக் வர்மாவை நீக்கம் செய்திருக்கிறது.

சி.பி.ஐ. இயக்குநரின் நியமனம் அல்லது நீக்கத்தை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யமுடியாது என்கிற நிலையில், வர்மாவை தன்னிச்சையாக நீக்க முடிவு செய்திருக்கிறது அரசு. இயக்குனரின் மீது குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என முன்னதாக அரசு தெரிவித்திருந்தது. வர்மா மீது அப்படி எந்தவொரு விசாரணைக்குழுவும் அமைக்கப்படவில்லை. அடிப்படையாக எந்தவித குற்றச்சாட்டும் இல்லாதபோது எப்படி விசாரணைக்குழு அமைக்கமுடியும்?

இதனை ஊடகங்கள் தந்திரமாக இரு சிபிஐ அதிகாரிகளுக்கிடையே நடந்த அதிகாரப் போர் என சித்தரிக்கின்றன. ஆனால் ரஃபேல் ஊழலை மறைக்க ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருந்க்கிறது. ஊழல் விசாரணையை நடத்திக் கொண்டிருந்தவரை நீக்கம் செய்து, மோடி அரசால் நியமிக்கப் பட்ட அதிகாரியை காப்பாற்றி அவரை விடுப்பில் அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மோடி அரசின் ரஃபேல் ஊழல் வழக்கை விசாரிக்க இருந்தநிலையில் அலோக் வர்மா நீக்கப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோல தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினும் மோடி அரசின் நடவடிக்கை கண்டித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறப்பு இயக்குநர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான டி.எஸ்.பி.யை நீதிமன்றம் “7 நாட்கள் சி.பி.ஐ கஸ்டடிக்கு” அனுப்பி – அந்த கஸ்டடி விசாரணை துவங்கும் நேரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டிருப்பதில் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றுள்ள காலோஜியத்தால் தேர்வு செய்யப்பட்ட இயக்குநருக்கு பணிக்கால பாதுகாப்பு” இருக்கும் நிலையில், அவரை மாற்றியிருப்பது எதேச்சதிகாரச் செயல் மட்டுமின்றி பா.ஜ.க. அரசின் “நிர்வாக அராஜகமாகவே” பார்க்க முடிகிறது.” என குற்றம்சாட்டியிருந்தார்.

சி.பி.ஐ. இயக்குனரின் நீக்கம் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். “சந்தேகித்ததைப் போல, பயந்ததைப் போல சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நீக்கப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியிருக்கும் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவின் வழக்கை அவர் விசாரிக்கிறார். இந்தநிலையில் அவர் நீக்கப்பட்டிருப்பது முழுமையாக சட்டவிரோதமானது. வழக்கு தொடரத்தக்கது” என தன்னுடைய ட்விட்டர் பதிவில் பூஷண் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த பூஷன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோரும் மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் மோடி அரசின் முடிவை எதிர்த்து தொடர்ந்திருக்கிறார். அவர் ஏழு முக்கிய ஊழல்களை விசாரித்து வந்த நிலையில் நீக்கம் செய்யப் பட்டிருப்பதாக அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்,. இந்த விசாராணை நேர்மையான முறையில் நடக்கும் பட்சத்தில் மோடி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி காத்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...