ஸ்விஸ் வங்கியும் சில்லறைப் பொய்களும்!

டிசம்பர் 21, 2018 694

கடல் போன்று, கற்பனையெல்லாம் தாண்டிநிற்கும் மாபெரும் திடல்போன்று, பரந்து விரிந்திருக்கிறது இணையத்தின் மடல்வெளி. இவ்வெளியில் நல்ல பல மீன்களையொத்த செய்திகள், தகவல்கள் இவற்றுடனே தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் ஊறு விளைவிக்கும் விஷ ஜந்துக்களும் உலா வருகின்றன.

உண்மையைப் போன்றே இருக்கிறது பொய். இன்னும் சொல்லப்போனால் உண்மையைக் காட்டிலும் ஒப்பனை அதற்கு அதிகமாகவே இருக்கிறது. பொய்க்கு ஒப்பனை அதிகம் தேவைப்படுவதால் அவ்வாறிருக்கலாம். இந்த ஒப்பனை அழகை உண்மை என்றே நம்பி விழுந்து விடுபவர்களும் உண்டு.

அவர்கள் மட்டும் விழுந்தாலும் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் மற்றவர்களையும் அந்த வீழ்ச்சிக்கு இழுத்துவிடும் வகையில் உடனடியாக 'தானறிந்தவற்றை மற்றவர்களும் உடனடியாக அறிந்தே ஆக வேண்டும்' என்ற அளப்பரியார்வத்தில் கிடைத்த தகவலை; செய்தியை அப்படியப்படியே ஆராயாமல் அடுத்தவருக்கோ, குழுமங்களுக்கோ அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை என்பதாக பலரும், மிகப்பலரும் இருக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை.

இன்றைக்கு என் மடல்வெளியில் அப்படி ஒரு தகவல் பூத்திருந்தது. அதுவும் உலகப் பிரசித்திப் பெற்ற ஸ்விஸ் வங்கியின் கடிதம் ஒன்று, அச்சு அசல் என்பார்களே அப்படி ஒரு ஸ்விஸ் வங்கியின் கடிதத்தைத் தன்னுள் கொண்டு, அதுவும் இந்தியாவின் இரகசியங்கள் பலவற்றை உள்ளடக்கிய தகவல் சுரங்கமாக அந்தமடல் காட்சியளித்தது. ஸ்விஸ் வங்கியின் இயல்பான கடிதத் தாள், அந்த முத்திரை என்று அத்தனையும் துல்லியமோ துல்லியம். ஆனாலும் ஒருதரப்பாக இடம் பெற்றிருந்த அத்தகவல்களில் 'பொய்யே' இருக்கக் கூடும் என்று உள்ளிருந்து ஒரு பட்சி கூவியது. கண்ணால் காண்பதும் பொய்யல்லவா!

நீங்களே அந்த ஸ்விஸ் வங்கிக் கடிதத்தைப் பாருங்கள். பட்சியின் கட்சியா, பார்வைக் கட்சியா எது சரி என்பதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு அந்த மடலை நெருங்கிய நண்பர்களுக்கு, என் ஐயத்தினையும் தெரிவித்து அனுப்பியிருந்தேன். அதற்கொரு நண்பர் ஆங்கிலத்தில் அனுப்பியிருந்த மறுமொழியை கீழே தமிழில் தருகிறேன். இப்போது எது சரி என்பதை நீங்களே உணரலாம்.

மடலில் வந்த ஸ்விஸ் வங்கியின் கடிதம்

அதை அம்பலப்படுத்தும் நண்பரின் மறுமொழி:(தமிழில்)

அன்பு நண்பரே,

புரட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களால் உண்மை(யான செய்தி) திரிக்கப்பட்டு அதன் மூலம் ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டு செய்யப்படும் பிரசாரத்திற்கு நாமெல்லாம் இரையாகிக் கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு மடல் தான் ஸ்விஸ் வங்கியிலிருந்து வந்த மடல் என்று நம் மின்னஞ்சல் பெட்டியை நிறைத்துவரும் இந்த மடல். இப்படி ஒரு மடலைப் பரப்புபவர்கள் குறித்து உரிய இடங்களில் தகவல்/முறையீடு தரப்பட்டிருக்கிறது. விரைவில் அவர்கள் சிக்கக் கூடும்.

அதற்குமுன் நம் சிந்தை இத்தகைய போலி மடல்களில் சிக்காமலிருக்க, இங்கே, இந்த ஸ்விஸ் வங்கியின் கடிதம் மீதான சில தர்க்கரீதியான கருத்துகளை உங்கள் சிந்தனைக்குத் தருகிறேன்.

1). இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பெயர் Government of India ஆகும். மடலில் குறிப்பிட்டுள்ளது போல Indian Govt.அல்ல.

2) வங்கியின் முகவரி பட்டியில் எந்த குறியீட்டு எண்ணும் (PIN No) இல்லாமல் உள்ளது. எந்த ஐரோப்பிய நாட்டு வங்கியும் குறியீட்டு எண் (PIN No) இல்லாமல் செயல்படுவதில்லை. எந்த ஸ்விஸ் வங்கியின் கடிதம் என்று காட்டப்படுகிறதோ அந்த வங்கி தொடங்கிய ஆண்டு 1854 ஆகும். மடலில் குறிப்பிட்டுள்ளது போல 1872 அன்று. (இதுவே, இது போலிகடிதத்தாள் என்று நிரூபிக்கப் போதுமானது)

3) தனது வாடிக்கையாளர்களின் வருமான வரிக் கணக்கை சோதிக்குமாறு இந்திய அரசுக்கு வங்கிக்கடிதம் கோரிக்கை விடுக்கிறது. இந்திய அரசுக்கு ஒரு வெளிநாட்டு வங்கி கோரிக்கை விடுக்க முடியாது.

4) ஸ்விஸ் வங்கியின் அலுவல் கணக்காண்டு 31 டிசம்பரில் தான் முடியும். வங்கியின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல 31 மார்ச்சில் முடிவடைவதில்லை.

5) ஸ்விஸ் வங்கியின் செயற்பாடுகளும், கணக்குத் தொகைகளும் அமெரிக்க டாலர்களிலும், யூரோக்களிலும், பிரிட்டிஷ் பவுண்ட்களிலும் மட்டுமே குறிப்பிடப்படும். மடலில் அது இந்திய ரூபாயாக உள்ளது.

6) ஆரோக்கியமான கணக்கு வழக்குகள் என்று தொடக்கத்தில் குறிப்பிடப்படும் இந்த கணக்குகளைப் பற்றி இறுதியில் 'கறுப்புப் பட்டியலில்' உள்ளவை என்று அதே மடல் குறிப்பிடுவது மற்றுமோர் அபத்தம்.

7) பட்டியலில் முதலாவதாக உள்ள ராஜீவின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

8) சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிறநாடுகளின் கணக்கு வைப்பு விபரங்களை மற்றொரு நாடான இந்தியாவுக்கு அனுப்பும் மடலில் குறிப்பிட முடியுமா? மேலும் இந்தியர்களின் வைப்புத் தொகையே 56% என்றிருக்கும் போது, அந்த இந்தியர்களின் கணக்குகளை முடக்க எந்த வங்கி முன்வரும்?

9) ஸ்விட்சர்லாந்து நாட்டின் தொலைபேசிக் குறியீட்டு எண் என்று 0044 குறிப்பிடப்பட்டுள்ளது மற்றுமொரு பிழை. உண்மையில் ஸ்விட்சர்லாந்து தொ.கு எண் 0041 தான். 0044 என்பது பிரிட்டனைக் குறிப்பது.

10) 3634 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள வங்கியிலிருந்து ஒரு சாதாரண மேலாளர் இந்திய அரசுடன் தொடர்பு கொள்ள மடல் எழுதியுள்ளார். நம்ப முடிகிறதா?

11) கடித அமைப்பு, முத்திரை ஆகியன ஐரோப்பிய தரத்திற்கும் வழக்கத்திற்கும் உரியதாக இல்லை. (காட்டாக, ஐரோப்பாவில் வலதுபக்க மூலையில் கையொப்பமிடமாட்டார்கள், ரப்பர்ஸ்டாம்ப் எனப்படும் முத்திரை வழக்கமும் அங்கே இல்லை.)

12) எண்களை எழுதியுள்ள முறை, குறிப்பாக இடைநிறுத்தக் குறிகளை (,) பயன்படுத்தியுள்ள விதம் இந்திய முறைமையினையொட்டியுள்ளது. ஐரோப்பிய முறைமைக்குரியதாக இல்லை. உதாரணம்: ஒரு லட்சம் என்பதை இந்திய முறையில் 1,00,000 என்று எழுதுவார்கள். ஐரோப்பிய முறையில், 100,000(நூறாயிரம்) என்று எழுதுவார்கள்.

13) எந்த வங்கியும் அரைகுறையாக முத்திரை வைக்காது. (ஸ்விஸ் பேங்க் கார்ப்பரேஷன் என்கிற வங்கி ஸ்விஸ் பேங்க்' என்று மட்டுமே முத்திரை தயாரிக்குமா? - அதுவும், ரப்பர்ஸ்டாம்ப் எனப்படுவது ஐரோப்பிய முறைமையே இல்லை).

கடைசியாக இங்கு கொடுத்திருக்கும் புகைப்படத்திற்கும் முதலில் இருக்கும் புகைப்படத்திற்கும் குறைந்தது ஒரு ஆறு வித்தியாசம் சொல்ல முடியுமா... ?

இப்படி நிறைய கேள்விகளை நண்பரின் மடல் எழுப்பியது. விரிவஞ்சி அவற்றுள் சிலவற்றைத் தவிர்த்துள்ளேன்.

ஆக, அரசியல் காரணங்களுக்காக, மக்களை முட்டாளாக்கி ஆதாயம் தேடும் யாரோ சிலரின் கைங்கர்யம்தான் இந்த ஸ்விஸ் வங்கி மடல் என்பது நமக்கு இதிலிருந்து நன்கு புலனாக வேண்டும். அரசியலுக்காக யாரும் எதுவும் செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் அறியாமலே நம்மை மற்றவர் முட்டாளாக்க நாம் அனுமதிக்கமுடியாது.

நண்பரின் மறுமொழி நல்ல விழிப்புணர்வு ஊட்டுவது. இன்னொரு நண்பரின் கருத்தைக் கூறி இதனை முடிக்கிறேன்

ஃபார்வார்டு மெயில்களை கண்ணை மூடிக் கொண்டு அனுப்பி விடாமல், இது போல் ஒருமுறை அதன் நம்பகத் தன்மையை பரிசோதித்த பின்பு சகோதரர்கள் குழுமங்களுக்கு அனுப்பினால், எத்தனை எத்தனை வீண் கஷ்டங்கள், சிரமங்கள் குழப்பங்கள், பிரச்சினைகள் சமூகத்திற்குள் குறையும்? யோசிப்போமே!

செய்திக்கட்டுரை: இப்னு ஹம்துன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...