பணம் வந்த கதை பகுதி - 3 தோன்றியது பணம்!

ஜனவரி 18, 2019 562

குறிப்பிட்ட அந்த நாளில் ஊர் பொது மைதானத்தில் ஏராளமான மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து குழுமியிருந்தார்கள். அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சேதி கேள்விப்பட்டு பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் தலைவர்களும் மக்களும் வந்திருந்தனர். அய்யாவு அவர்களுக்கு ‘பணம்’ என்ற புதுமையான ஒரு முறையை விளக்கினான்.

“இங்கப் பாருங்க மக்களே, மேட்டர் ரொம்ப சிம்பிள். நம்ம எல்லோரிடமும் இருக்கும் எல்லா பொருள்களுக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பொருளை நீங்க விற்கனும்னு நினைச்சா நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்; அந்தப் பொருளுக்கு நீங்க ஒரு ‘பண’ மதிப்பு போட்டு வைக்கனும். அதை வாங்க வர்றவங்களுக்கு அந்த மதிப்பு ஓக்கே என்றால் அதற்கான பணத்தை கொடுத்துட்டு பொருளை வாங்கிட்டு போயிட்டே இருப்பாங்க. நீங்க பொருளை தூக்கிட்டு சந்தை முழுக்க சுத்தி சுத்தி கூவ வேண்டிய தேவை இல்லை. அதப்போல நீங்க வாங்க நினைக்கிற பொருள் யாரிடம் இருக்கிறதோ அவரிடம் அதற்கான பணத்தை கொடுத்து நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்”.

அய்யாவு சொல்லி முடித்ததும், “நீ சொல்றதெல்லாம் நல்லாதானப்பா இருக்கு. ஆனா அந்தப் பணத்துக்கு எங்கே போறது?” என்றார் தலைவர்.

‘இத..இத..இதத்தானே நான் எதிர்பார்த்தேன்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட அய்யாவு, “நான் ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தும் தங்கம் ஒரு அருமையான உலோகம். அது வீணாவதில்லை, துருப் பிடிப்பதில்லை. வெகு காலத்திற்கு அப்படியே இருக்கும். நான் தங்கத்தை உருக்கி கொஞ்சம் ‘நாணயங்கள்’ செய்கிறேன். ஒவ்வொரு நாணயத்தையும் நாம் ஒரு ‘ரூபாய்’ என்று அழைப்போம்.” என்றான். இந்தப் பணத்தைக் கொண்டு பொருள்களை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதையும் பண்டமாற்று முறைக்கு இது எப்படி மாற்று வழியாக இருக்கும் என்பதையும் அவன் விளக்கினான். அவனுடைய விளக்கத்தைக் கேட்டவர்களுக்கு இனி ‘பணம்’ இல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கவோ விற்கவோ முடியாது என்பது போல தோன்றியது.

பக்கத்து ஊர்த் தலைவர் ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “சிலருக்கு தங்கச் சுரங்கங்களிலிருந்து தங்கம் கிடைக்கும். அதை உருக்கி அவர்களே நாணயங்களைச் செய்து கொண்டால்..?” என்று கேட்டார் அவர்.

“நல்ல கேள்வி. நீங்க எந்த ஊருங்க சார்?” என்று கேட்ட அய்யாவு, “நீங்க சொல்ற மாதிரி நடந்தால் அது நியாயமில்லை அல்லவா? அதனால் நிர்வாக சபையின் ஒப்புதலுடன் ஒரு ஸ்பெஷல் முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்றான். அங்கு கூடியிருந்தவர்களுக்கும் இதுவே நியாயமாகப் பட்டது.

யாருக்கு எத்தனை நாணயங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற பிரச்னை எழுந்தது. “விவசாயம் செய்யும் எனக்குத்தான் அதிகம் வேண்டும். உணவுப் பொருட்கள் இல்லையென்றால் யாரும் வாழவே முடியாதே?” என்று உரிமைக்குரல் எழுப்பினார் விவசாயி. “மவனே.. நான் மட்டும் மெழுகுவர்த்தி தயாரிக்கலேன்னா இந்த ஊரு முழுக்க மறுபடியும் இருண்ட காலத்துக்கு போயிடும். நான் அதை தயாரிச்சு ஒழுங்கா சந்தைக்கு கொண்டு வரணும்னா எனக்குத்தான் அதிக எண்ணிக்கையில் நாணயங்கள் வேணும்” என்று மிரட்டினார் மெழுகு தயாரிப்பாளர். “க்கும்.. இவனோட மெழுகுவர்த்தியை பத்த வைக்க தீப்பெட்டிக்கு என் கிட்டதான் வரணும்” என்றது இன்னொரு குரல். இவ்வாறாக ஒவ்வொரு குரலாக உயர்ந்து குழப்பநிலையை எட்டியது.

கொஞ்ச நேரம் அவர்களை விவாதிக்க விட்ட அய்யாவு பிறகு சொன்னான், “இந்த விஷயத்தில் உங்களால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை என்பதால் நான் ஒரு யோசனை சொல்கிறேன். அவரவர்க்கு எவ்வளவு தேவைப்படுமோ அந்த அளவிற்கு நாணயங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு கண்டிஷன்..! நீங்கள் என்னிடமிருந்து பெற்ற நாணயங்களை ஒரு வருடத்திற்குள் என்னிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்”

ஆதாயம் இல்லாமல் அய்யாவு எதையும் செய்ய மாட்டான் என்பதை விளங்கியிருந்த ஊர்க்காரர் ஒருவர் கேட்டார், “இதிலிருந்து உனக்கு என்னப்பா கிடைக்கும்?”

நன்றிப்பெருக்குடன் அவரை நோக்கிய அய்யாவு, “பண விநியோகம் என்ற சேவையை நான் வழங்குவதால் அதற்கான கட்டணத்தை நான் பெற வேண்டும் அல்லவா? என்னிடமிருந்து கடனாக நீங்கள் வாங்கும் ஒவ்வொரு 100 நாணயங்களுக்கும் ஒரு வருட முடிவில் 105 நாணயமாக நீங்கள் திருப்பிச் செலுத்தினால் போதும். அந்த 5 நாணயங்கள்தான் எனது சேவைக் கட்டணம்.” என்றான்.

-தொடரும்

- சலாஹுத்தீன் பஷீர்

பகுதி 2 ஐ வாசிக்க 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...