விகிதாச்சார தேர்தல் முறை ஒரு பார்வை!

மார்ச் 12, 2019 699

தேர்தல் அறிவிப்பு வந்தாலே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மட்டுமன்றி தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும் என்ற குரலும் ஒலிப்பதுண்டு.

கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் ஜெர்மன் தேர்தல் முறை வேண்டும் என்றும் அந்தக் குரல்கள் ஒலிக்கும்.

ஜெர்மன் தேர்தல் முறை என்றால் என்ன?

ஜெர்மன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 598 ஆகும். இதில் 50% அதாவது 299 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக (நம்முடைய தேர்தலைப் போல)த் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மீதமுள்ள 50% உறுப்பினர்களும் மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் நேரடியாக அல்ல.

அதாவது ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு வாக்குகளை அளிப்பார். முதல் வாக்கு அந்தப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய. மற்றொரு வாக்கு கட்சிகளுக்கு அளிக்க.

கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில் தங்களுடைய உறுப்பினர்களை கட்சி நியமித்துக் கொள்ளலாம். ஆனால் இப்படி நியமிக்க அந்தக் கட்சி குறைந்தது 5% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் தேவை என்ற குரல் இந்தியாவில் 1930 ஆம் ஆண்டு முதலே ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. “பல்வேறு சமூகங்களின் அச்சத்தை நீக்கி அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்யவேண்டுமெனில் அதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே பொருத்தமானது”என ஜவஹர்லால் நேரு கூறினார். அரசியலமைப்புச் சட்ட அவையில் மெஹ்பூப் அலி பேக் சாஹிப் பஹதூர், காஸி ஸையத் கரிமுதீன் ஆகிய இரு உறுப்பினர்கள்‘சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையே சிறந்தது’ என்று வாதிட்டனர். தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்கள் லிங்டோ, குரேஷி உள்ளிட்டோர் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் பற்றிய விவாதங்கள் நடக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். ஆனாலும் இன்றுவரை இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டே வருகிறது.

இந்தியா பரந்து விரிந்த, பல்வேறு கலாசார, மொழி, மத, சாதீய வேறுபாடுகளைக் கொண்ட நாடு. ஜெர்மனியைப் போல இந்தியாவில் குறைந்தது 5% என்ற அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. அதைவிடக் குறைவாகவே நிர்ணயிக்க வேண்டும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவம் வந்தால் தனித்து நின்றால்கூட எப்படியும் சில இடங்களாவது கிடைக்கும் என்று பல சாதிக் கட்சிகள் தோன்றும். அவர்கள் அரசை மிரட்டவே தங்கள் பலத்தைப் பயன்படுத்துவார்கள். அதனால், நிர்வாகம் பாதிக்கும் என்கிறார்கள் இந்த முறையை எதிர்ப்போர்.

- தமிழ்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...