அப்ளிகேஷனில் எதற்கு அந்த ஆப்ஷன்? - நீட் தேர்வால் தொடரும் சோதனைகளும் அவமானங்களும்!

மே 07, 2019 948

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் சோதனைகள் என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் கடந்த 05-05-2019 நடைபெற்ற எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 15,19,000 பேர் எழுதியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 1,40,000 பேர்.

வழக்கம்போலவே, முழுக்கைச் சட்டைகள் அரைக்கை சட்டைகளாக கத்தரிக்கப்பட்டன. கொலுசு, நகை, மூக்குத்தி, துப்பட்டா உள்ளிட்டவைகள் கழற்றப்பட்டன. சடை பிண்ணப்பட்டிருந்த தலைமயிர்கூட அவிழ்க்கப்பட்டு தலைவிரி கோலத்தில் தவிக்கவிடப்பட்டனர் மாணவிகள்.

சோதனை என்ற பெயரில் மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதை கடந்த ஆண்டே பலரும் கண்டித்த போது, ”மாணவ – மாணவிகளை இவ்வாறு சோதனை செய்வதையெல்லாம் கைவிட முடியாது; வேண்டுமானால் தனி அறையில் சோதனையை மேற்கொள்கிறோம்” என்று திமிராக அறிவித்திருந்தது நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி. நிர்வாகம்.

குறிப்பாக தேர்வு எழுதச் சென்ற முஸ்லிம் மாணவிகள் கடும் அவமானத்தை சந்தித்துள்ளனர். தேர்வு மையங்களின் அறைக்குள் மட்டுமே முஸ்லிம் பெண்கள் பர்தாவை கழட்டலாம் என்ற ஆப்ஷனிற்கு அப்ளிகேஷனில் ஒப்புதல் அளித்த சிபிஎஸ்இ, தேர்வு மையங்களின் எல்லைக்குள் சென்றதும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை கழட்டச் சொல்வது ஏற்புடையதா? என்று கேள்வி எழுப்புகின்றனர். மாணவிகளின் பெற்றோர்.

ஒரு நீட் தேர்வு மையத்தில் மிகுந்த அவமானத்தை சந்தித்துள்ளார் ஒரு முஸ்லிம் மாணவி, மேலும் எதற்கு பர்தாவை கழட்ட வேண்டியதில்லை என்ற ஆப்ஷன் வைத்தீர்கள்? என்று மாணவி கேட்டதற்கு திமிராக பதிலளித்துள்ளார் அந்த தேர்வு அதிகாரி.

பின்பு பெரிய போராட்டத்திற்குப் பிறகு வேறொரு உடை அணிந்து தேர்வு மையத்திற்குள் சென்று தேர்வை எழுத வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 8 மணி நேரம் தாமதமாக வந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியவில்லை. வழக்கமாக காலை 7 மணிக்கு பெங்களூரு வரும் ஹம்பி எக்ஸ்பிரஸ், ஞாயிற்றுக்கிழமை மட்டும் பகல் 2.36 மணிக்குத்தான் பெங்களூரு வந்தது. இதனால் 1.30 க்கு தேர்வு அறையில் இருக்க வேண்டிய மாணவர்கள் செல்ல முடியவில்லை.

தேர்வு மையங்களை அந்தந்தப் பகுதிகளிலேயே ஏற்பாடு செய்து, இந்த ‘யோக்கியமான’ தேர்வு முறையை அங்கு நடைமுறைப்படுத்துவதற்கு இவர்களுக்கு என்ன கேடு ? தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இவர்களது பதில் என்ன ?

மாற்றுத்திறனாளியான ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தியாவுக்கு தேர்வு மையம் மதுரையில்தான் ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வு மைய அலைக்கழிப்புகள், சோதனை என்ற பெயரில் நடந்த அட்டூழியங்கள், கேள்வித்தாளின் சி.பி.எஸ்.இ பயங்கரம் ஆகியவற்றின் காரணமாக, தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் பேருந்திலேயே மயங்கி விழுந்து இறந்திருக்கிறார், சந்தியா.

இன்னும் எத்தனை ஆண்டுகள், அனிதாக்களையும், சந்தியாக்களையும் இழந்து கொண்டிருக்கப்போகிறோம் ?

- அன்பழகன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...