இந்தியாவில் கலவரங்கள்: ஒரு பார்வை -5!

December 29, 2015

கொடுங்குஜராத் ..!

ப்பட்டமான இனப்படுகொலையாக அனைவராலும் அடையாளங் காணப்பட்டு அப்போது அதிகாரத்தில் இருந்தவருக்கு அமெரிக்காகூட விசா மறுக்கும் அளவுக்கு ஆறாத வடுவாய் இருக்கின்றது அந்தச் சம்பவம்!

ஆம்! பத்தாண்டுகளுக்கு முன்னர் அனைத்து இந்திய பத்திரிகைகளிலும் வெளியான அந்தப் பரிதாபப் படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்! உயிர்ப்பிச்சைக்காக ஏங்கும் அந்த நடுத்தர வயது மனிதர், ஒரு கெஞ்சல் தொனியில் நிற்கும் அந்த உண்மை சம்பவம் கல் நெஞ்சையும் கரைக்கச் செய்துவிட்டது.

உச்சி சூரிய வெளிச்சத்தையும் இருட்டாக மாற்றிய புழுதி படலத்திற்கும் கொலைவெறி கூச்சல்களுக்கும் இடையே உலக சமூகத்தின் உள்ளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தப் புகைப்படம் பிரபல புகைப்படக் கலைஞர் ஆர்கோ தத்தாவின் கருவிக்கண்களில் பதிவானது. உயிர் பிச்சை கேட்கும் நிர்க்கதியான அந்த மனிதரின் கண்களில் தென்பட்ட அச்சம் ஒரு சமூகத்தின்  பரிதாப நிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

ஆர்கோ தத்தாவின் கருவி பதிவு செய்த குத்புதீன் அன்சாரி என்ற 28 வயதான இளைஞனின் புகைப்படம் 2002 குஜராத் இனப் படுகொலையின் கொடூரத்தை உலகிற்கு எடுத்தியம்பியது. இரத்தக்கறை படிந்த அழுக்கான சட்டையை அணிந்துகொண்டு, உயிர் பிச்சை கேட்டு கை கூப்பி, கண்ணீர் நிரம்பிய கண்களில் தென்பட்ட அதீத அச்சத்துடன் கூடிய  குத்புதீன் அன்சாரியின் புகைப்படம் ஆர்கோ தத்தாவுக்கு உலக ப்ரஸ் ஃபோட்டோ விருதைப் பெற்று தந்தது.

அன்று இராணுவத்தின் வேனில் புழுதிப் படலத்தின் ஊடே கடந்து செல்லும் வேளையில் ஆர்கோவும் அவரது நண்பர்களும் மின்னல் அடித்ததைப் போல அன்ஸாரியைக் கண்டார்கள். நிர்க்கதியாக உயிருக்காக போராடும் ஒரு கூட்டத்திற்கு உதவாமல் செல்லக்கூடாது என்று பத்திரிகையாளர்கள் வற்புறுத்தியதற்கு இணங்க அன்சாரிக்குப் புதிய வாழ்க்கைக்கான வழி கிடைத்தது.

அந்தக் கொடூர நினைவுகளை அன்சாரியின் வார்த்தைகளிலேயே கேளுங்கள்:

“பற்றி எரிகின்ற தீ ஜூவாலைகளில் எல்லாம் முடிந்துவிட்டது என்று கருதிய வேளையில்தான் இராணுவ வீரர்களின் வேன் அவ்வழியே வந்தது. வன்முறையாளர்களின் கும்பல் ஒன்று தீவைத்து கொளுத்திய கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு சிறிய குழுவினர் சிக்கிவிட்டனர். எதையும் கண்டுகொள்ளாமல் அப்பகுதியைக் கடந்து சென்ற வேன் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தது. மாடியில் சிக்கிய குழுவினரும் உயிர் தப்பினர். உயிருக்காக யாசிக்கும் கதியற்ற மனிதரின் புகைப்படம் உலக முழுவதும் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. குஜராத் கூட்டுப் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகமாக குத்புதீன் அன்சாரியின் புகைப்படத்தை ஊடகங்கள் குறிப்பிட்டன. ஆனால், இவையெல்லாம் அன்சாரிக்குத் தெரியாது. இந்தப் புகைப்படம் மூலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டதாக அன்சாரி கூறினார்.

தனது வேலையை இழந்து சொந்த ஊரையும், மாநிலத்தையும் விட்டு வெளியேறி தனது சகோதரிகளுடன் மகராஷ்ட்ராவில் குடியேறியதற்கு இந்தப் புகைப்படம்தான் காரணம் என்று அன்சாரி கூறுகிறார். ஊடகங்களின் வேட்டையாடல் காரணமாக அன்சாரிக்குக் கிடைத்த சிறு வேலைகளையும் இழக்க வேண்டியது ஏற்பட்டது. அரசியல்வாதிகள் முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அன்சாரியின் புகைப்படத்தைப் பயன்படுத்தினர். ஆனால், ஒரு டீ ஷர்ட் விலை குறைவாக கிடைத்ததும் உம்மாவுக்கு ஹஜ்ஜிற்கான ஊசி போடுவது விரைவில் நடந்ததும் இந்தப் புகைப்படம் அளித்த நினைவுகளில் சிலதாகும்.

ஆம்! குஜராத் கலவரம் ஒரு வரலாற்றுப் பதிவின் மறக்க முடியாத அங்கமாகிவிட்டது. பாரதம் மிகச் சமீபத்தில் கண்ட இந்தக் கலவரங்கள்போல் பல்வேறு கலவரங்கள் நம் நாட்டில் நடந்திருக்கின்றன. ஆனால் சில குறிப்பிட்ட கலவரங்கள் என்றும் மாறாத வடுக்களை ஏற்படுத்தி சென்றன.

அந்த நினைவுகள் நிழல்களாக மட்டுமல்ல.. ஒரு கொடிய நிஜமாக மாறிவிட்டிருக்கின்றது சிறுபான்மை முஸ்லிம்களிடத்தில்..! கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் அரசு எந்திரமே சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆடிய தாண்டவம், இன்றும் பெரும் கோர சம்பவமாக நிற்கின்றது.

அன்றைய மோடி அரசு நடத்திய இநக்ச் சிறுபான்மை எதிர்ப்பு வெறி, பலி கொண்ட உயிர்கள் ஏராளம். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்களின் கற்புகள் சூறையாடப் பட்டன. கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் தப்பவில்லை. 2 மாதங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டது. இதற்கு மேலாக குஜராத் இனப்படுகொலை தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்துவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறினார் குஜராத் இனப்படுகொலை விசாரணை கமிஷன் தலைவரான நீதிபதி நானாவதி. அவரது மகன்கள் இருவருக்கும் அரசு வழக்குரைஞர் பதவியை வழங்கி கைம்மாறு செய்தார் அன்றைய முதல்வராக இருந்த இன்றைய பிரதமர். அன்று அவரின் அமைச்சரவையிலிருந்த ஒரு அமைச்சரை நீதிமன்றம் குற்றவாளி என்றே அறிவித்து சிறைபடுத்தியது. ஆனால், இன்று வரை குற்றவாளிகளுக்குத் தண்டனை இல்லை. தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சரும் பெயிலில் இறங்கி உல்லாசமாக சுற்றி வருகிறார்.

தொடரும்...

- மு.அ. அப்துல் முஸவ்விர்

<இந்தியாவில் கலவரங்கள்: ஒரு பார்வை-4! | இந்தியாவில் கலவரங்கள்: ஒரு பார்வை-6!>

தற்போது வாசிக்கப்படுபவை!