உணர்ச்சியற்று​ போகிறதா இந்தியச் சமூகம்?!​​

January 20, 2016

நாட்டின்​ ஏழை, எளிய மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையான தேவைகளில் ஒன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவு.

காங்கிரஸோ, பாரதீய ஜனதா கட்சியோ இவற்றில் எவை ஆட்சிக்கு வந்தாலும் அடிமட்ட மக்களின் அடிவயிற்றில் அடிப்பதில் மட்டும் இரண்டும் ஒரே வர்க்கமாக செயல்படுகின்றன.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் என்பதே சாதாரண பாமரன் எளிதாக அறிந்து வைத்திருக்கும் சூத்திரம். எண்ணெயின் விலை ஏற்ற, இறக்கத்துக்குத் தகுந்து பொருட்களின் விலை இந்தியாவில் ஏறி இறங்குவதே இப்புரிதலுக்கான காரணம். நிஜமும் அதுதான்!

ஏழைகளின் பாதுகாவலர்கள் எனக் கூறிக்கொள்ளும் அரசுகள், இந்தியாவில் எண்ணெய் விலையினைக் கட்டுக்குள் வைத்துகொள்வதை வைத்தே அவற்றின் நிஜ முகங்கள் மக்களுக்குத் தெரியவரும்.

இவ்வகையில் கடந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்களின் அரசு என்ற அளவுக்கு மக்களிடையே ஊடகங்களால் பெயர் பெற்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துக்குத் தகுந்தாற் போன்று, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே விலையினை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்குக் கொடுத்ததன் மூலம் எண்ணெய் விலை தாறுமாறாக ஏறியதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக ஏறி நடுத்தர, அடித்தட்டு மக்களின் தினசரி வாழ்வு கேள்விக்குரியதாக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவே மோடி தலைமையிலான ஆட்சி மாற்றம் என்பது அனைவரும் அறிந்த விசயம். இதற்கு, மன்மோகன் சிங் அரசின் எண்ணெய் அரசியலைத் தினசரி கிழி கிழி என கிழித்து எறிந்த வகையில் ஊடகங்கள் மிகப் பெரும் பங்காற்றியதும் அறிந்த விசயம்.

இப்போது நிலை என்ன?

ஒரு சிறிய கணக்கு பார்ப்போம்:

சர்வதேச சந்தையில் இதுவரையிலான கச்சா எண்ணெய் வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டது 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 145 டாலர்கள். அதே நேரம் இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 50.62 ரூபாய்

தற்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் வீழ்ச்சி என்பது ஒரு பேரல் உற்பத்திக்குச் செலவாகும் மதிப்பைவிட மிகத் தாழ்ந்த நிலைக்குச் சென்று விட்டது. பேரலுக்கு 26 டாலர்கள் வரை இறங்கிவிட்ட இன்றைய நிலையில் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு 59.99 ரூபாய்.

இதென்ன அக்கிரமம் என்ற கேள்வி யாருக்காவது எழுந்துள்ளதா? எத்தனை ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளன?

முந்தைய காங்கிரஸ் அரசு கார்ப்பரேட்டுகளுக்கு இலாபம் உண்டாக்கிக் கொடுத்திருந்தால், இப்போதைய மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசு அரசுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் கொள்ளை இலாபம் உண்டாக்கிக் கொடுப்பதை ஜென்ம லட்சியமாக கொண்டு இயங்குகிறது. இதற்காக பாரதீய ஜனதா கட்சி கூறும் காரணம் வளர்ச்சி!

வெறும் 21 ரூபாய் மட்டுமே உற்பத்திக்கு ஆகும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையினை, எக்ஸைஸ் வரி, வாட் என கண்மூடித்தனமாக வரிகளைப் போட்டுச் சுமார் 60 ரூபாய்க்கு விற்பதன் மூலம் அரசுக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருமானத்தைக் கொண்டு நாட்டில் கொண்டு வந்துள்ள வளர்ச்சிப்பணிகள் எவையெல்லாம் என்பது யாருக்காவது தெரியுமா?

சாதாரண மக்களுக்குத் தெரிந்தவை, 3000 கோடி ரூபாய் மதிப்பில் படேலுக்குச் சிலையும் அதானி போன்ற நிறுவனங்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்களுக்கான கான்ட்ராக்ட்களைப் பெற்றுத் தர மக்களின் பல நூறு கோடி வரிப்பணத்தைச் செலவு செய்து ஆட்சிப் பொறுப்பேற்ற இரு ஆண்டுகளுக்குள்ளேயே உலகின் பெரும்பாலான நாடுகளை மோடி சுற்றிப்பார்த்ததும்தான்! ​

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக, மக்களின் குரலாக அரசின் இக்கொடூர மனப்பான்மைக்கு எதிராக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள் உணர்ச்சியற்ற ஜடங்களாக மாறிவிட்ட நிலையில், மக்களின் உணர்வுகள்கூடவா அடங்கி ஒடுங்கி விட்டன?

- அபூ சுமையா

தற்போது வாசிக்கப்படுபவை!