இந்தியப் பொருளாதாரம் வளர்கிறதா, தேய்கிறதா?

January 27, 2016

ந்திய திருநாட்டில் நாம் ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போது கோடான கோடி செய்திகளோடு கண் விழிக்கின்றோம்.

ஆனால் அதில் சில செய்திகள் மட்டும் தினசரி ஊடகங்களில் வருகின்றன. அப்படி வரும் செய்திகளில் சில செய்திகள் வைரங்களாய் மின்னுகின்றன; சில செய்திகள் மகிழ்ச்சியைத் தருகின்றன; சில செய்திகள் உள்ளூர் கலவரத்துக்குக் காரணமாகின்றன; சில செய்திகள் சர்வதேச கலவரத்துக்குக் கூட காரணமாகின்றன. ஆனால் நாம் இப்போது பார்க்கபோவது அமைதியாக வந்து நாட்டின் பொருளாதாரத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு செய்திகள். 

கடந்த ஜனவரி 4ம் தேதி ஒரு செய்தி மிக சாதாரணமாக வந்தது. அது தகவல் பெரும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டது. செய்தி என்ன வென்றால், கடந்த 2013-2014 நிதியாண்டு முழுவதும் 2015-2016 ல் பாதியிலும் அரசு ஒரு ரூபாய் நோட்டு 16 கோடிக்கு அச்சிட்டுள்ளது. ஆனால் அது சுமார் 10 மாதங்களாகியும் இன்றுவரை யார் கையிலும் கிடைக்க வில்லை. இந்நிலையில், ஆன்லைனில் ஒரு ரூபாய் நோட்டு ஒன்று 50 ரூபாய் என்று விற்கபடும் தகவலையும் அந்தச் செய்தி தந்தது. மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், "இவ்வாறு ஆன்லைனில் விற்கபடுகிறதே" என்று இந்திய ரிசர்வ் பேங்க் செய்தி தொடர்பாளர் அல்பனா கிலாவாலா விடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் தான்! "ஒரு ருபாய் நோட்டுகளைச் சேகரித்து வைத்து தனிப்பட்ட முறையில் அதை விற்பனை செய்வது கிரிமினல் குற்றம் இல்லை" என்பதுதான் அவர் கூறிய பதில்!

இதன் அர்த்தம் என்ன? 16 கோடி ஒரு ரூபாய் நோட்டை 50 வீதம் 800 கோடிக்கு விற்றேன் என்று சொன்னால் அரசு அதை ஏற்றுக்கொள்ளும்; அந்த விற்பனைக்காக வரிகூட வாங்கிகொள்ளும். இவ்வாறு ஆன்லைனில் வியாபாரம் செய்ததாக பொய்யான தகவல் அரசுக்குத் தெரிவித்துவிட்டு 800 கோடி கறுப்புபணத்தை வெள்ளைபணமாக சட்டரீதியாக மாற்றிகொள்ளலாம். 10 மாதங்களுக்கு முன்வரை அச்சிடப்பட்ட 16 கோடிக்கான ஒரு ரூபாய் நோட்டில் ஒன்றுகூட மக்களிடையே புழக்கத்துக்குக் கொண்டு வரவில்லை எனில் அந்த நோட்டுகள் எங்கே சென்றன? இம்முறையில் அவை கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றுதானே அர்த்தம்? எனில் இந்தத் தேசம் எங்கே போகிறது? அதுவும் நாட்டின் பொருளாதாரத்துக்குத் தூணாக விளங்கும் ரிசர்வ் வங்கி அதிகாரியே தெரிவித்துவிட்டார். மோடி அரசாங்கம் ஆட்சியைப் பிடித்த நாள் முதல் இன்றுவரை கறுப்புபணத்தை ஒழிப்போம் என்று சபதம் போட்டுவிட்டு, கறுப்புபணத்துக்குப் பின்வாசலை திறந்திவிடுவதாகதானே அர்த்தமாகிறது? "வேலியே பயிரை மேய்கிறது" என்றில்லாமல் வேறு என்ன?

அடுத்து ஜனவரி 21ம் தேதி ஒரு செய்தி: சரியான பாதுகாப்பு அம்சம் இல்லாமல் ரூபாய் 30,000 கோடிக்கு 1000 ரூபாய் நோட்டுகளை அரசு மக்கள் பயன்பாட்டில் விட்டதாகவும், அதை ரிசர்வ் வங்கி அவசரமாக வாபஸ் அறிவிப்பு செய்துள்ளது என்பதுதான். அந்த நோட்டுக்கள் 5ஏஜி , 3 எபி வரிசையைக் கொண்டவை.

ஏன் இந்தக் குளறுபடி? ரூபாய் நோட்டுக்கள் நாட்டின் பொருளாதாரத்தின் தலை! அதில் இப்படி பொறுப்பில்லாமல் அரசு செயல் பட்டால் என்னாவது? அதன் விளைவு என்ன? கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நம்முடைய வல்லரசு கனவு சுக்குநூறாக நொறுங்கிப் போகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆக, இவ்வருடத்தின் துவக்கத்தில் இப்படியான செய்திகள் வந்து நம்மையும் நாட்டையும் ஆட்டிவைக்கின்றன. விபரீதங்களைத் தடுக்கும் சக்தியான மக்கள் சக்தி இவற்றைத் தடுக்கவேண்டும்; இல்லையென்றால் விபரீதங்களைத் தொடுக்கும் சக்திகள் முன்னேறிவிடும். அப்படி எதுவும் நடக்கக்கூடாது; நடக்கவும் விடக்கூடாது.

- கலீல், வீரசோழன்

தற்போது வாசிக்கப்படுபவை!