கச்சா எண்ணெய் விலை அரசியல்!

February 08, 2016

லக அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கச்சா எண்ணெயின் விலை நிர்ணயிப்பிலும் பல்வேறு அரசியல் இருப்பதை அறிந்திருப்போம். கச்சா எண்ணெய் பெருமளவில் உற்பத்தியாகும் அரபு வளைகுடா நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும்போது கச்சா எண்ணெயின் விலையிலும் உயர்வு ஏற்படும்.

முதல் மற்றும் இரண்டாம் வளைகுடாப் போர்கள் நடந்தபோது இவ்வாறு உயர்ந்துள்ளது. ஆனால் அதற்கு மாறாக, இப்போது வளைகுடா நாடுகளில் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கச்சா எண்ணெயின் விலை 30 டாலருக்கும் குறைவாக ஆகக் காரணம் என்ன? இதன் பின்னணி என்ன? சற்றே விரிவாகப் பார்ப்போம்.

2011ஆம் ஆண்டு அரபு நாடுகளில் நடந்த புரட்சிகளைத் தொடர்ந்து எண்ணெயின் விலை அதிகரித்தது. 2011 ஜனவரியில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 90 டாலருக்கும் குறைவாக இருந்து படிப்படியாக 128 டாலர்கள் என்ற அளவினை எட்டியது. பின்னர் சற்றே குறைந்து 2014 ஜூன் மாதத்தில் 110 டாலராக இருந்தது.

எரிபொருளுக்கு அரபு நாடுகளை நம்பிக் கொண்டிராமல் மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய்க் கிணறுகளில் இருந்து வழக்கமாக எடுக்கப்படும் முறை அல்லாமல், சில வேதிவினைகளுக்குப் பின் பெறப்படும் ஷேல் எண்ணெயை அமெரிக்கா 2013ஆம் ஆண்டு முதல் பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) ஒவ்வொரு கால இடைவெளியிலும் கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவை கூட்டவோ அல்லது குறைக்கவோ தன் உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தி, விலையைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தது.

இந்நிலையில், ஒபெக் கூட்டமைப்பில் இல்லாத அமெரிக்கா தன்னுடைய ஷேல் எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தொடங்கியதால் கச்சா எண்ணெயின் விலை குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 2014 ஜூன் மாதம் 110 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை நவம்பர் மாதம் 10ஆம் தேதி 80 டாலராகக் குறைந்தது.

அவசரமாக ஒபெக் நாடுகளின் கூட்டம் நடந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்தால், உற்பத்தியைக் குறைக்க அறிவுறுத்துவதுதான் வழக்கம். ஆனால், தற்போதைய விலை வீழ்ச்சிக்குக் காரணம் தேவை குறைவு ஏற்பட்டதால் அல்ல; மாறாக, சந்தையில் கச்சா எண்ணெய்க்கு மாற்றாக கிடைக்கும் அமெரிக்க ஷேல் எண்ணெயே என்பதை உணர்ந்த ஒபெக், தன்னுடைய உறுப்பு நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தியது.

சந்தையின் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் விலை வீழ்ச்சி அடைந்து தற்போது 30 டாலருக்கும் குறைவாக ஆகியுள்ளது.

சரி, இது கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கு நட்டம்தானே என்றால், ஆம் நட்டம்தான். குவைத் போன்ற நாடுகளில் பட்ஜெட் தயாரிக்கும்போது கச்சா எண்ணெயின் உத்தேச விலை 60 டாலர் என்ற அளவில் தயாரிக்கப்பட்டிருந்தது. இப்போது அதனைவிட பாதிக்கும் குறைவு எனும்போது பெருத்த நட்டமே. சிறிய நாடான குவைத்துக்கே பெரும் நட்டம் எனும்போது, 90% பட்ஜெட் வருமானமும் கச்சா எண்ணெய் விற்பனையினையே நம்பியுள்ள சவூதிக்கு மாபெரும் நட்டமே.

என்றாலும் ஒபெக் நாடுகள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொண்டுள்ளன என்றுதான் கூறவேண்டும். இந்த விலைக்குறைப்பால் தாக்குப்பிடிக்க முடியாமல் ஷேல் எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. காரணம் ஷேல் எண்ணெயின் உற்பத்தி செலவுதான்.

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஆகும் அடக்க விலையினை இந்தப் படத்தில் காணலாம். சவூதி உள்ளிட்ட அரபு வளைகுடா நாடுகளில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் உற்பத்திக்குப் பத்து டாலருக்கும் குறைவாகவே செலவாகின்றதாக எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்திக்கோ 70 டாலர் வரை செலவாகிறது.

ஷேல் எண்ணெயுடனான போட்டியை ஒபெக் இப்படித் தீர்த்துக் கொள்ள, ஷேல் எண்ணெயின் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு. ஷேல் எண்ணெய் உற்பத்திக்காக வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன்களைத் திரும்பச் செலுத்த வேண்டும் என்பன போன்ற நெருக்கடிகளும் ஷேல் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளன. இதனால், அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடிகள் பிரகாசமாகவே உள்ளன.

இது இப்படி இருக்க, சிரியாவிலும் இராக்கிலும் மூக்கை நுழைக்கும் ரஷ்யாவுக்கும் பாடம் கற்பிக்க சவூதி திட்டமிட்டுள்ளதன் எதிரொலியே எண்ணெயின் விலை 30 டாலருக்கும் குறைவாக ஆகக் காரணம் என்கின்றன சில தகவல்கள்.

ரஷ்யாவின் ஏற்றுமதி வருவாயில் 50% கச்சா எண்ணெய் ஏற்றுமதியிலிருந்துதான் கிடைக்கிறது. உற்பத்தி செலவு 50 டாலராக இருக்கும்போது, இப்போது சர்வதேச சந்தையில் 30 டாலருக்கும் குறைவாக விற்க வேண்டிய கட்டாயம். இதனால் இலாபமும் இன்றி பட்ஜட் வருவாயும் இன்றி ரஷ்யாவின் பொருளாதாரம் ஆட்டம் காணும் என்கின்றன அந்தத் தகவல்கள்.

அமெரிக்கப் பொருளாதாரம், ரஷ்யப் பொருளாதாரம் தள்ளாடும்போது சவூதி பொருளாதாரம் மட்டும் தள்ளாடாதா என்ற கேள்வி எழும். 10 டாலர் உற்பத்தி செலவில் வரும் கச்சா எண்ணெயை 30 டாலருக்கு விற்பதால், வருவாய் குறைவு மட்டும்தான். ஆனால் மற்ற நாடுகளைப் போன்று நட்டமில்லைதானே என்கின்றனர். தவிர, கச்சா எண்ணெயின் விலை உச்சத்துக்குச் சென்றபோது கிடைத்த உபரி வருவாய் சுமார் 600 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சவூதியிடம் பத்திரமாக இருக்கிறது என்கிறார்கள் புள்ளியலாளர்கள்.

அரபு வளைகுடா நாடுகள் நடத்தும் இந்த எண்ணெய் விலை அரசியலை, ரஷ்யப் பொருளாதாரம் ஆட்டம் காணும்வரை அமெரிக்காவும் விட்டு வைக்கும் என்றே தோன்றுகிறது.

- அழகப்பன்

தற்போது வாசிக்கப்படுபவை!