வரலாறு முக்கியம் ஐயன்மீர்...!

ண்டனின்  மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த  பாகிஸ்தான் வம்சாவளி பஸ் டிரைவரின் மகன் சாதிக் கானை உலகப் பத்திரிகைகள் அவரவர் வசதிக்கேற்பக் கொண்டாடியும்,  திட்டியும் தீர்த்துவிட்டன.

சில இன்னும் விசேஷமாக "முக்கியமான ஐரோப்பிய நகரின் முதல் முஸ்லிம் மேயர்" என்றன. சமூக வலைத்தளங்களிலும் அவ்வாறே நடந்தது. பெரும்பாலான முஸ்லிம்களும் சிறுபான்மையினரும் புளங்காகிதம் அடைந்தும், பலர் வயிற்றெரிச்சலோடும்  விருப்பு வெறுப்புக்களை பதித்துவிட்டு அடுத்த தகவல் போட புதிய போஸில் புகைப்படம் எடுக்கக் கிளம்பியாயிற்று.

சாதிக் கான் என்ற முஸ்லிம் முக்கியமான ஒரு ஐரோப்பிய நகரில் பதவியில் அமர்த்தப்பட்ட "முதல் முஸ்லிம் ஆளுநர்"  என்பது வரலாற்றில் பரிச்சயம் உள்ளவர்களுக்குக் கேலிப் புன்னகையையே வரவழைக்கும். ஐரோப்பாவின் பல நகரங்கள் கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகள் இஸ்லாமிய கவர்னர்களாலும் ஆட்சியாளர்களாலும் ஆளப்பட்டிருக்கின்றன என்பதை அறியாதவர்களுக்கு வேண்டுமானால் விசேஷச் செய்தியாக இருக்கக் கூடும்.

சாதிக்கானின் வெற்றி, எப்படி கிறிஸ்தவ ஐரோப்பாவில் ஒரு முஸ்லிம் மேயராகக் கடவது என்ற தொனியில்தான் பலராலும் பார்க்கப்படுகின்றது. கிறிஸ்தவம் ஐரோப்பாவின் மதம் என்பதே ஒரு கற்பிதம். கிறிஸ்தவமும், இஸ்லாமைப் போலவே மத்திய கிழக்கில் தோன்றி பின்பு ஐரோப்பாவிற்குப் பரவிச் சென்ற மதமே.

சுமார் நான்காவது நூற்றாண்டில்தான் கிறிஸ்தவம் ஐரோப்பாவில் வேகமாக பரவத்தொடங்கியது. எட்டாவது நூற்றாண்டில், அதாவது ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குப் பின் இஸ்லாமும் ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைந்து கிறிஸ்தவத்திற்குச் சவாலாகப் பரவத்தொடங்கி சாம்ராஜ்ஜியங்களை நிறுவி விஞ்ஞானத்தின் தலைநகராக அறியப்பட்டது வரலாறு!!.

இஸ்லாமும் சுமார் ஓராயிரம் வருடங்களாக ஐரோப்பாவின் ஒரு மதமாக இருந்திருக்கிறது. ஸ்பெயினின் பெரும்பகுதி (711-1492) வரை இஸ்லாமிய ஆட்சி. அப்துல் ரஹ்மான் என்ற இஸ்லாமியர் தான் கொர்தோபாவின் அமீராக நியமிக்கப் பட்டிருந்தார். கவனிக்க, கொர்தோபா அன்றைய உலகின் அதிக மக்கள் வாழ்ந்த செழிப்பான ஐரோப்பிய நகரம். இன்னொரு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் இன்றைய இத்தாலியின் ஒரு பாகமான சிசிலி (831 - 1072). ஜாபர்-அல்-கல்பி தலைநகர் பலேர்மோ (Palermo) வின் மேயர்.

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளாக இன்றைய கிரீஸ் முழுவதையும் ஆண்டது (1458-1832) உதுமானியப் பேரரசு. ஏதென்ஸின் இஸ்லாமியக் கவர்னர்களின் பட்டியல் நீளம்.  அதே உதுமானியப் பேரரசின் ஒருபகுதிதான் ஹங்கேரி (1541 - 1699). புகழ்பெற்ற புடாபெஸ்டின் (Budapest) ஒருபகுதி புடா (Buda)  ஹங்கேரியின் தலைநகரம், ஐரோப்பாவின் முக்கியமான நகரங்களுள் ஒன்று. அதன் முக்கியமான கவர்னர்களுள் ஒருவர் அப்துர்ரஹ்மான் அப்து பாஷா.  செர்பியா (1402 - 1878) வும் அதே உதுமானியப் பேரரசின் அங்கம்தான். 1793ல் பெல்கிரேடின் கவர்னரின் பெயெர் முஸ்தபா அகா. இஸ்தான்புல் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஐரோப்பாவின் மிகப்பெரும் நகரங்களுள் ஒன்று.

மேற்சொன்னவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. முஸ்லிம் ஆட்சியாளர்களும், கவர்னர்களும், நகரங்களை நிர்மாணித்தவர்களும் ஐரோப்பாவிற்கு அன்னியமல்லர்.

ஏனென்றால்,  முஸ்லிம் வெறுப்பை ஆயுதமாக்கிப் பிரச்சாரம் செய்யப்பட்ட அவரின் எதிரிகளுக்கு லண்டன் வாசிகள் கொடுத்த பலமான அடியின் பின்னணியில் சாதிக்கானின் வெற்றி கொண்டாடப்பட வேண்டியது. ஆனால்,  சுமார் ஓராயிரம் ஆண்டுகள், எட்டாம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பாவின் வரலாற்றின் அங்கமான இஸ்லாமையும் அதன் ஆட்சியாளர்களையும் மறந்துவிடலாகாது. வரலாறு முக்கியமல்லவா..?

- அபூ பிலால்

மேலும் வாசிக்க...

ரிலேட்டிவிட்டி

புவியியல் தகவல் தொழில் நுட்பம் (GIS) - 1

புவியியல் தகவல் தொழில் நுட்பம் (GIS) - 2

புவியியல் தகவல் தொழில் நுட்பம் (GIS) - 3

புவியியல் தகவல் தொழில் நுட்பம் (GIS) - 4

Last modified on Tuesday, 17 May 2016 18:12