NEET - மருத்துவ நுழைவு தேர்வு முறை சரியா?

Sunday, 22 May 2016 09:50 Published in சிறப்பு

NEET ( National Eligibility cum Entrance Test ) – மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) நடத்தும் அறிவிக்கையை முதலில் வெளியிட்டது 2010-ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு கூட்டணி அரசு.

அதன் தொடர்ச்சியாக சில மானிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வழக்கு தொடுத்தன.  இப்போதைய பாஜக அரசும் காங்கிரசின் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு உச்ச நீதிமன்றத்தின் ஆதரவுடன் இந்த நுழைவுத் தேர்வை திணிப்பதன் மூலம் இந்திய அரசியல் சாசனம் வழங்கும் உரிமைகளை வஞ்சகமாக மறுத்து வருகிறது என்பதே உண்மை.

இதனைச் சொல்வதால், நாம் பொது நுழைவுத் தேர்வு முறைக்கு எதிரானவர்கள் இல்லை.  அது நல்லதே!.  அதன் அடிப்படை, கல்வியை வியாபாரமாக்கிய சில தனியார் கல்வி நிலையங்களை ஒரு முடிவுக்கு கொண்டுவரும் நோக்கமுடையது என்பதும் உண்மையே.  ஆனால் மொழிவாரி மானிலமாக இருக்கும் நமது அமைப்பில் மொழியின் காரணமாக மானிலங்களிடம் அப்பொறுப்பை அளிப்பதுதான் முறை.  அல்லது மத்திய அரசு, கலந்துகொள்ளும் எல்லா மாணவருக்கும் கட்டாயமாக ஆங்கிலம், ஹிந்தியுடன் அவரவர் தாய்மொழிக்கும் வாய்ப்பளிக்கும் முறையில் தேர்வுகள் நடப்பதனை உறுதிசெய்யவேண்டும்.  இது பற்றி மேலும் சில கருத்துக்கள்:

1.   ‘கல்வி’யில் ஏதேனும் சீர்செய்வதில் அல்லது திட்டம் வகுத்து செயல்படுத்துவதில்  மத்திய அரசுக்கும் மானில அரசுக்கும் சமவுரிமையுள்ளது.  இதற்கு பிரதான காரணம் இந்தியா மொழிவழியில் கொண்டிருக்கும் பன்முகத் தன்மைதான்.

2.   இந்தி புரியாத, பேசாத மானிலங்களின் தாய்மொழிக் கல்விக்கும், ஹிந்தி பேசும் மானில மக்களின் கல்வி உரிமைக்கும், ஆங்கில மொழியிலிருந்து விலகி நிற்க சம உரிமையுள்ளது. அதாவது, எந்தப் படிப்பிலும் அல்லது தேர்விலும் ஹிந்தி பேசும் மாணவர்களுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி என்று தம் விருப்பத்துடன் கலந்துகொள்ளும் உரிமை கொடுக்கப்படுகிறதோ அவ்வாறே ஆங்கிலம் அல்லது அந்த மானிலத்தின் தாய்மொழி என்ற விருப்பத்திற்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
 
3.   இந்த தாய்மொழிக் கல்வி உரிமையை இப்போது கொல்லைப்புற வழியாகத் திணிக்கப்படும் உத்தரவுகளால் மறுக்கப் பார்க்கிறது மத்திய அரசு.

4.   கல்வியின் அளவீடு அறிவின்பாற்பட்டதாக இருந்திட வேண்டும்.  அதனை குறிப்பிட்ட ஒரு மொழியின் புலமையும், ஒரு மொழி சார்ந்த சார்புத்தன்மையும் வஞ்சிக்க அனுமதிக்க முடியாது.  மேலும் இது அரசியல் சாசனம்  வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

5.   குறிப்பாகத் தமிழகம் போன்ற மானிலத்தின் மாணவர்களுக்கு இந்த தேசியப் போட்டி, ஆங்கிலம் தவிர வேறு மாற்று கொடுக்காமல் – தம் தாய்மொழியில் தகுதித் தேர்வில் கலந்துகொள்ளும் உரிமையை மறுத்து – ‘ஒன்று ஹிந்தியனாக இரு, இன்றேல் ஆங்கிலேயனாக இரு, பன்முகத்தன்மை கொண்ட பாரதத்தின் மைந்தனாக இருந்தால் உனது கல்விக் கனவுகள் இனி உனக்கு எட்டாத கனவே’ என்று கதவைச் சாத்துகிறது!.  இது இன்னொரு மொழிப்போராட்டத்திற்கு வித்திடுமளவு ஆபத்தானது!.
 
6.   அடுத்து மிக முக்கியமான ஒன்று, இந்தியாவின் சமூகப் பொருளாதார கட்டமைப்பின் சீர்கேட்டின் காரணமாக, காலம் காலமாகப் பின்தங்கி, புழுவினும் கீழாகக் கிடந்தவர்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக எழுந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரே சம்மட்டியடியாக அடித்து மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளும் நிலையைத்தான் இந்த புதிய தேர்வுமுறை கொண்டு வரும்.  நகர்ப்புறங்களில் உள்ள பயிற்சி மையங்களில் கற்கும் மாணவர்களோடு, கிராமப்புறம் சார்ந்த அரசு பள்ளிகளில் பயில்பவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் நிலை உண்மையில் சமமான போட்டியல்ல!.  இப்படிப்பட்ட நிலை வேண்டுமானால், அனைவருக்கும் கல்வி இலவசமாக்கப்படவேண்டும்.  பயிற்சி மையங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கிட்டும் வகையில் திறக்கப்படவேண்டும்.

7.     முன்பு மேற்கண்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்; இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இத்தேர்வை நடத்துவதற்கான அதிகாரம் கிடையாது” எனப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்து, மைய அரசின் அறிவிக்கைக்குத் தடைவிதித்தது.  நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும், விக்கிரமஜித் சென்னும் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும்; நீதிபதி அனில் ஆர்.தவே இத்தேர்வை ஆதரித்தும் தீர்ப்புக் கூறியிருந்தனர்.

8.     தேர்வைத் தடை செய்த பெரும்பான்மை தீர்ப்புக்கு எதிராக காங்கிரசு கூட்டணி அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகள் விடுத்த கோரிக்கைக்கு காங்கிரசு கூட்டணி அரசு செவிமடுக்கவில்லை. அதற்குப் பின் வந்த பா.ஜ.க. கூட்டணி அரசும் அம்மனுவைத் திரும்பப் பெறவில்லை. தகுதித் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த  நீதிபதி அனில் ஆர்.தவே தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விடம் இச்சீராய்வு மனு பரிசீலனைக்கு வைக்கப்பட, அவ்வமர்வு இம்மனுவை விசாரணைக்கு அனுமதித்த கையோடு, தகுதித் தேர்வுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து, தகுதித் தேர்வை நடத்தும் அனுமதியையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு வழங்கி உத்தரவிட்டது.

9.     தற்போது சங்கல்பம் என்ற தன்னார்வ அமைப்பு, “நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் மைய அரசு அத்தேர்வை நடத்தாமல் மெத்தனம் காட்டுவதாக”க் கூறி ஒரு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவையும், நுழைவுத் தேர்வு உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு, உ.பி., தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரி சங்கமும் தாக்கல் செய்த மனுக்களையும் விசாரித்த உச்சநீதி மன்றம், நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே இரண்டு கட்டங்களாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.  விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே தகுதித் தேர்வை நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் இன்னும் கூறவில்லை என்பதும் வியப்பளிக்கும் விசயம்.

11.  இந்த பொது நுழைவுத் தேர்வை நடத்தப் போகும் தேசிய மருத்துவக் கவுன்ஸிலின் லட்சணத்தைக் கொஞ்சம் பார்வையிட்டால், இந்த திட்டத்தில் இருக்கும் ஏமாற்று வேலையையும் சிலாகிக்க முடியும்.

சில ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் தேசாய் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது ஊழல் பேர்வழிகளின் கூடாரம் என்பதை அம்பலப்படுத்திக் காட்டியது.  இந்த கேத்தான் தேசாய் என்பவர்தான் வி.பி. சிங் அமல்படுத்த விரும்பிய மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியான சமூக நீதிக்கு எதிராக களமிறங்கிய ஹீரோ!.  இதனால்தான் இவரை பாஜக பதவியில் அமர்த்தியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தேசிய தகுதி-பொது நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் உச்சநீதி மன்றம் ஒப்படைத்திருப்பதும் சரியல்ல என்பது புரியும்.  அங்கே இருக்கும் வியாபம் போன்ற ஊழல் கறைகளைப் போக்கிய பின்னர்தான் ஒரு தேசியப் பொறுப்பைக் கொடுக்க முடியும்.

12.  இப்பொழுது உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்களையும் மத்திய அரசு அபகரித்துக் கொள்வது சரியல்ல.  இதனாலும், பொது நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்படுவதாலும் தமிழக மாணவர்களுக்குத் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது இனி குதிரைக் கொம்புதான்.  எதிகாலத்தில் அவசரத் தேவைக்குகூட மருத்துவர்களிடம் சென்றால் 30  நாட்களில் ஹிந்தி பயிற்றுவிக்கும் புத்தகம் ஒன்று கையில் எடுத்துக்கொண்டு போவது சாலச்சிறந்தது!. ‘கியா ஹுவா?, தர்த், பிமார் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உடனடிப் பலனளிக்கலாம்!.  இந்தி தெரியாத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் திண்டாடும் நிலைமை உருவாகும்.

இந்த நிலை மாறாவிட்டால், சமச்சீர் கல்வி என்பதே எதிர்காலத்திற்கு கொஞ்சமும் பயனற்ற ஏமாற்று வேலை, மோசடியானது என்பது உறுதியாகிவிடும்.  தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு மாறுவதன் மூலம் அல்லது மருத்துவக் கல்வி தகுதித் தேர்வுக்கு ஏற்ப நாங்கள் அதிக பயிற்சி தருகிறோம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளையை அதிகப்படுத்தத் துணிவார்கள்.

மீண்டும் ஒரு புதிய தீண்டாமைக் கொள்கை பிறப்பெடுக்கும்.  அது இப்போது இன்னும் அழியாமல் இருக்கும் தீமையைவிடவும் மிக மிக பயங்கரமானதாக இருக்கும்.  நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் தூரம் அதிகரித்துவிடும்.

உயர் கல்வித் திட்டத்திலும், மாணவர் சேர்க்கையிலும் மத்திய மானில அரசுகள் இரண்டுக்குமே பொறுப்புள்ளது என்பதனை உணர்ந்து, தேசத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சம அளவில் பயனளிக்கும் திட்டங்களை மட்டுமே நிறைவேற்ற முனைப்பு காட்டவேண்டும்.  மற்றவற்றில் நிதானம் காட்டி, புதிய மாற்றங்களுக்கான உத்திகளில் அனைத்து தரப்புக்கும் உரிய வாய்ப்புகளை அளித்து தக்க வசதிகளைச் செய்து பின்னர் செயல்படுத்துவதே வலிமையான, ஒற்றுமையான இந்தியாவிற்கு உத்தரவாதமளிக்கும்.  அவசர அறிவிப்புகளாலும், துப்பாக்கி முனையில் கட்டளையிடுவது போன்ற செயல்களாலும் கல்வி என்னும் மேன்மையான விசயங்களில் தலையிடுவது ஒரு தலைமுறையையே அவமானப் படுத்துவதற்கும் அநியாயமாக தண்டிப்பதற்கும் சமமான செயல்.

சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமையளித்து செய்யப்படாத எச்செயலும், தேசத்திற்கு எதிரானதே! நமது மானிலத்தைப் பொருத்தவரை மானில நலனுக்கு எதிரான மத்திய அரசின் இந்த திட்டத்தை தீரமுடன் எதிக்கும் வல்லமையை இறைவன் தமிழக அரசுக்கு வழங்கட்டும்.

மக்களும், குறிப்பாக மாணவர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அநியாயங்களை தடுத்திடமுடியும்.

மாணவர் நினைத்தால்! - நடத்திக் காட்டலாம்!

-    என்.எஸ்.எம். சாகுல் ஹமீது, மதுக்கூர்

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.