பணம் வந்த கதை பகுதி – 9: திட்டத்தின் அடுத்த கட்டம்!

ய்யாவு கையெழுத்திட்ட துண்டுச் சீட்டுகளையே தங்களின் வியாபாரப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி வந்த மக்கள், அதற்குண்டான தங்க நாணயங்கள் அய்யாவுவிடம் இருக்கின்றன என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள்.  ஆனால் அய்யாவு மறக்கவில்லை.

 ‘எனது இரும்புப் பெட்டகத்தில் ஆயிரக்கணக்கான தங்க நாணயங்கள் வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கின்றன.  இவ்வளவு செல்வத்தையும் முறையாக பயன்படுத்தாவிட்டால் என்னை விட அடி முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.  இந்த நாணயங்களெல்லாம் என்னுடையவை அல்ல என்பதென்னவோ உண்மைதான்.  ஆனால் அவை என்னுடைய கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன?  என்னிடம் கடன் கேட்டு வருபவர்களுக்காக புதிதாக நாணயங்களைத் தயாரிப்பதற்குப் பதிலாக இரும்புப் பெட்டகத்தினுள் தூங்கிக் கொண்டிருக்கும் நாணயங்கள் சிலவற்றைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன குறைந்து விடப் போகிறது?  நமக்கு வரும் வட்டி வருமானமும் அதிகரிக்கும்.   எப்போதாவது யாராவது வந்து அவர்களுக்குரிய நாணயங்களைக் கேட்டால் கடன் கொடுக்கப்படாமல் மீதம் இருக்கும் நாணயங்களிலிருந்து கொடுத்து விடலாம்.  அத்தனை பேரும் ஒரே நேரத்தில் வந்து நாணயங்களைக் கேட்டால்தான் ஆபத்து.  ஆனால் அது நடக்கப் போவதில்லை’  என அய்யாவுவின் சிந்தனை ஒடியது.

 ஒரு முடிவுக்கு வந்தவனாக இரும்புப் பெட்டகத்திலிருந்து நாணயங்களை எடுத்து தன்னை நாடி வருபவர்களுக்குக் கடன் கொடுக்க ஆரம்பித்தான் அய்யாவு.  தொடக்கத்தில் மிகுந்த கவனத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்க ஆரம்பித்த அவன் பிறகு தைரியம் வரப் பெற்றவனாக அதிக எண்ணிக்கையில் நாணயங்களை எடுத்து கடன் கொடுக்கலானான்.

 ஒரு நாள் ஒரு வியாபாரி மிக அதிகமான தொகையை கடனாகக் கேட்டு அய்யாவுவிடம் வந்தார்.  அவர் கேட்ட தொகை அய்யாவுவிடமும் இல்லை, அவனது இரும்புப் பெட்டகத்திலும் இல்லை.  இருந்தாலும் தேடி வந்த ‘டீலை’ முடியாது என்று திருப்பி அனுப்ப அவன் மனது இடம் தரவில்லை.  “உங்களுக்கு நான் உதவ வேண்டும் என்றால் ஒரு முக்கியமான நிபந்தனை.. நீங்கள் கேட்கும் தொகைக்கான தங்க நாணயங்களை உங்கள் பெயரில் நானே என்னுடைய இரும்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைத்துக் கொண்டு அதற்குப் பதிலாக என் கையெழுத்துடன் துண்டுச் சீட்டுகளைத் தருவேன்.  அவற்றைக் கொண்டு நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.  சம்மதமா?” என்றான் அய்யாவு.

 அந்த வியாபாரிக்கும் இந்த யோசனை சரியெனப் பட்டது.  அவர் கேட்ட தொகைக்கு அய்யாவு தங்க நாணயங்களையே கொடுத்திருந்தாலும் அவற்றை அவனிடமே திருப்பி ஒப்படைத்து விட்டு துண்டுச் சீட்டுகளைத்தான் அவர் கேட்டிருப்பார்.

 அய்யாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.  ஒரு பொட்டுத் தங்கம் கூட அவனிடமிருந்து வெளியேறாமல் மிகப் பெரும் தொகை ஒன்றை அவன் கடனாகக் கொடுத்திருக்கிறான்.   மீசைக்குப் பங்கம் வராமல் கூழையும் குடிக்க முடியும் என்றால் கசக்கவா போகிறது?

 அந்த வியாபாரியைப் போலவே அய்யாவுவின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்… ஏன், அவனுடைய போட்டியாளர்கள், பகைவர்களுக்கும் கூட அவனுடைய தயவு தேவைப் பட்டது.  பிணையாக எதையாவது கொடுக்க முடிந்த அனைவருக்கும் பிணைப்பொருளின் மதிப்பிற்கேற்ப பாரபட்சமின்றி கடன் வழங்கினான் அய்யாவு.  இரும்புப் பெட்டகத்தைத் திறக்காமலேயே பணத்தை ‘உருவாக்கும்’ வித்தை அவனுக்குத் தெரிந்திருந்ததால் கடன் கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வாரி கொடுத்துக் கொண்டிருந்தான் அவன்.  அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்த தங்க நாணயங்களின் மதிப்பை விட பல மடங்கு அதிகமான தொகையைஅவனை கடனாகக் கொடுத்திருந்தான்.  மக்கள் அவன் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான் அவனது மூலதனம்.  அவர்கள் அவனை தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கும் வரை ஒரு பிரச்னையும் வரப் போவதில்லை.

 அய்யாவுவின் ‘கடன் தொழில்’ வெகு வேகமாக வளர்ந்து வந்தது.  அவனுடைய பேரேட்டுப் புத்தகத்தின் பக்கங்கள் நிரம்பி வழிந்தன. ஒரு தேர்ந்த கணக்காளரைப் போல வரவு செலவுகளை அவன் மிகுந்த கவனத்துடன் குறித்து வைத்தான். அதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால் அவன் மீதான நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.  அவனுடைய செல்வத்தைப் போலவே அவனுடைய செல்வாக்கும் வளர்ந்து வந்தது.  சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நபராக மக்கள் அவனை மதித்தார்கள்.   பணம் தொடர்பான விவகாரங்களில் அய்யாவு வைத்ததே சட்டம் என ஆகிப் போனது.

 பெரும்புள்ளி ஆகிவிட்ட அய்யாவுவை நாம் இன்னும் ‘அவன்’ இவன்’ குறிப்பிடுவது நன்றாக இருக்காது.  எனவே இனி ‘அவர்’ ‘இவர்’.  ஓக்கேவா?

 அய்யாவுவின் அமோக வளர்ச்சி சிலருக்கு கண்ணை உறுத்த ஆரம்பித்தது.  அவர்கள் பிற ஊர்களில் இருந்த பொற்கொல்லர்கள்.  அவரைப் போலவே தொழில் செய்து வந்தவர்கள்.  ‘நமக்குத் தெரியாத ஏதோ ஒரு ரகசிய வித்தையை இவர் தெரிந்து வைத்திருக்கிறாரே!’ என்று புலம்பினார்கள், குழம்பினார்கள்.  மண்டை வெடிக்குமுன் அந்த ரகசியத்தை அவரிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து ஒரு குழுவாக ஒரு நாள் அவரைத் தேடி வந்தார்கள்.

தொடரும்

– சலாஹுத்தீன் பஷீர்

ஹாட் நியூஸ்:

தலித் மாணவர்களை வைத்து கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு!

ஈரோடு (03 டிச 2022): ஈரோட்டில் தலித் மாணவர்களை வைத்து பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படிக்கும்...

போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் – பாஜக எம்பி குற்றச்சாட்டு!

லக்னோ (01 டிச 2022): போலி நெய்களை விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது பாஜக எம்.பி. குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் உத்தரபிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் பகுதியை சேர்ந்த பிரிஜ் பூஷன்...

தவறான முடிமாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லியில் உள்ள கிளினிக் ஒன்றில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது அதர் ரஷீத் என்பவர் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷீதுக்கு...