கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) இனி தமிழில்...

பிப்ரவரி 22, 2018 2803

கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது.  சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இணைய தளங்களில் கூகுள் விளம்பரங்கள் காட்டுவதற்கு இதுநாள் வரை கூகுள் தடை விதித்திருந்தது.  தமிழ் வலைப்பதிவர்கள், இணையதள நிர்வாகிகளின் கடந்த பத்து வருடங்களுக்கு மேலான கடும் கோரிக்கைக்கு தற்போது செவி சாய்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது கூகுள்.

We’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages. - Google

கூகுள் விளம்பரங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன?

விளம்பரதாரரிடம் இருந்து பெறும் தொகையை 51% - 49% என்று பிரிக்கிறது கூகுள்.  ஒருவரின் வலைப்பூ அல்லது இணைய  தளத்தில் காண்பிக்கும் விளம்பரங்களுக்கு 51% தள உரிமையாளருக்கும்  49% கூகுளுக்கும் எனப் பிரித்து, நேர்மையான கூட்டு வருவாய்த் திட்டத்தைத் தருவதால் இணையச் சந்தையில் கூகுள் விளம்பரங்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. 

மேலும், எத்தகைய விளம்பரங்களை நம் தளத்தில் அல்லது வலைப்பூவில் காண்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டு அறையின் சாவியையும் நம்மிடமே தருகிறது கூகுள். முகம் சுளிக்க வைக்கும் ஆபாசம், மது, சூது, ஏமாற்றுத் தொழில் தொடர்புடைய விளம்பரங்களை நாமே தடுத்து நல்ல விளம்பரங்களைக் காட்டச் செய்யலாம்.

வீட்டில் இருந்தவாறு மாத வருவாய்த் திட்டம் ஏற்படுத்தி, பணம் சம்பாதிக்க விருப்பமுடையோர், கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவோர், சுதந்திரமாகச் செயலாற்றும் செய்தியாளர்கள், இணைய தளங்கள் அமைத்து சம்பாதிக்க ஆர்வமுடைய தமிழர்கள் பலருக்கு இதன் மூலம் புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது கூகுள். 

- முஹம்மத் சர்தார்

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...