குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் புதிய ஆப்!

August 30, 2015

புதுடெல்லி: குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைபாடுகளை ஸ்மார்ட் போன் மூலம் கண்டுபிடிக்கும் புதிய 'ஆப்'பை ஹர்ஷ் சோங்க்ரா என்ற 19 வயது இந்திய இளைஞர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். கற்றல் திறன் குறைவாக இருக்கும் இந்த பிள்ளைகளை, சிறு வயதிலேயே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளிப்பது அத்தியாவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் இதனை கவனிக்காமல் விட்டு விடுவார்கள்.

அப்படி மூளை வளர்ச்சி குறைபாடான டிஸ்பராக்சியா நோயால் பாதிக்கப்பட்டவர்தான் இந்த ஆப்பை உருவாக்கிய ஹர்ஷ் சோங்க்ரா. தான் வளர்ந்த ஊரில் சரியான சிகிச்சையோ, விழிப்புணர்வோ இல்லாததால் தனது 9-வது வயது வரை இப்படி ஒரு குறைபாடு இருப்பதையே கண்டுபிடிக்கவில்லை. தனக்கு ஏற்பட்டது மற்ற குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணமே ஹர்ஷை இப்படி ஒரு ஆப்பை உருவாக்க தூண்டியது.

"மை சைல்ட்" எனப்படும் இந்த ஆப்பை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டு உங்கள் குழந்தையை பற்றி, சில அடிப்படை தகவல்களை மட்டும் செலுத்தினால், உங்கள் குழந்தையிடம் ஏதேனும் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கணித்து சொல்லும்.

உதாரணமாக, உங்கள் குழந்தை ஓரெழுத்து வார்த்தைகளை 6 முதல் 9 மாதத்திற்குள் பேசியதா? போன்ற பல்வேறு கேள்விகள் இதில் அமைந்துள்ளன. இதற்கு ஆம், இல்லை என நாம் பதிலளிக்க வேண்டும். இறுதியாக குழந்தையின் எடை, உயரத்தையும் குறிப்பிட வேண்டும்.

இதையடுத்து, உங்கள் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை அந்த ஆப் தெரிவிக்கும். அவ்வாறு குறைபாடுகள் இருந்தால் அதற்கு உகந்த சிகிச்சை அல்லது தெரப்பி முறையையும், மருத்துவ நிபுணர்களையும் அந்த ஆப் பரிந்துரைக்கும்.

ஹர்ஷின் இந்த கண்டுபிடிப்பை ஃபேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க் தனது பக்கத்தில் இந்த ஆப் ( App) பை பாராட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!