கொரோனாவும், பிரதமர் நிதியும், கார்ப்பரேட் மோசடிகளும் !

Share this News:

கொரோனா தொற்றுக்கு நிதி சேமிப்பதற்காக ‘PM Cares’ என்ற புதிய அமைப்பை மார்ச் 28ம் தேதி தொடங்கினார் மோடி.

ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. இது 1948ல் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த பேரிடர் வந்தாலும், அமைப்பாக, தனி நபராக யார் ஒருவரும் இதற்கு நிதி அளிக்கலாம். 2011 முதல் வெளிநாட்டவரும் நிதி வழங்கலாம்.

ஆண்டுதோறும் சில நூறுகோடிகள் இதில் பணம் சேர்கிறது. 2018-19ல் வந்த நிதி 783 கோடி. செலவு செய்யப்பட்டது 212 கோடி.

2019, மார்ச் 31 தணிக்கை கணக்கின்படி, இந்த அமைப்பில் சுமார் 3800 கோடி கையிருப்பு இருக்கிறது. கொரோனாவுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய மொத்தத்தொகையைவிட சில கோடிகள் அதிகம்.

இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் நிதிக்கு, வருமான வரி விதி 80G ன் கீழ் 100% வரி விலக்கு அளிக்கப்படும்.

கையிருப்பில் சில ஆயிரம் கோடி நிதியோடு, 73 ஆண்டுகால பாரம்பரியத்துடன் இப்படி ஒரு அமைப்பு இருக்கும்போது, அவசர அவசரமாக திடீரென PM Cares என்ற திட்டத்தை அறிவித்தார் மோடி. ஏன்?

புதிதாக அறிவிக்கப்பட்ட PM cares Fund-க்கு வழங்கப்படும் நிதிக்கும் 100% வருமான வரி விலக்கு உண்டு. மேலும், CSR எனப்படும் corporate social responsiblity நிதியாகவும் இது ஏற்றுக்கொள்ளப்படும்.

அது என்ன CSR?

கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் கடந்த 3 ஆண்டு நிகர லாபத்தின் கூட்டுசராசரியாக, குறைந்தபட்சம் 2% தொகையை சமூக நலப்பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் செலவிட வேண்டும்.

2014 ஏப்ரல் 1ம் தேதி முதல் இது கட்டாயமானது. இந்த நிதியை நேரடியாகவோ, அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தியோ, அல்லது ஏற்கனவே உள்ள அறக்கட்டளைகள், முகவர் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மூலமாகவோ செலவிடலாம். இந்த CSR திட்டத்தின் கீழ் 16,000 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்ப்பரேட்டுகள்’ செலவிட்டதாக சொல்லப்படும் இந்த 69,800 கோடியில் பெரும்பங்கு பொதுத்துறை நிறுவனங்களுடையது. ஆம். பாரத் பெட்ரோலியம், AIR India, ONGC, BSNL, IRCTC, NLC உட்பட, இந்தியாவின் ‘மகாராத்னா’ நிறுவனங்கள் அடங்கலாக, சுமார் 152 பொதுத்துறை நிறுவனங்கள் CSRன் கீழ் வருகின்றன.

இந்த 152 நிறுவனங்கள் மட்டும் சுமார் 12,842.77 கோடி நிதியை கடந்த 5 ஆண்டுகளில் CSR நிதியாக செலவு செய்துள்ளன. அதாவது மொத்த செலவில் 18.6%. இச்செலவு என்பது அந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஒதுக்கிய மொத்த தொகையில் 50% மட்டுமே. பல பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கள் CSR-ன் கீழ் ஒதுக்கிய முழு நிதியையும் செலவிடுவதில்லை. ONGC நிறுவனம் 2017-18 ஆண்டுக்கு 2017 கோடி நிதி ஒதுக்கியது. 503 கோடி மட்டுமே செலவு செய்தது. அதாவது 25%.

எனவே, ஒட்டுமொத்தமாக பொதுத்துறை நிறுவனங்கள் செய்த CSR ஒதுக்கீடு என மதிப்பிட்டால், கடந்த 5 ஆண்டுகளுக்கு சுமார் 30,000 கோடி. அதாவது, இந்தியா முழுவதும், கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த கார்ப்பரேட் சமூக பங்களிப்பு நிதியில் சுமார் 30%.

CSR-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட 16000 நிறுவனங்களில் 71% நிறுவனங்கள் 50 லட்சத்துக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யும் தகுதி உடைய ‘சிறிய நிறுவனங்களே’. 10 கோடி ரூபாய்க்கு CSR நிதியாக ஒதுக்கக்கூடிய திறன் உள்ள ‘பெரிய நிறுவனங்கள்’ வெறும் 1.35% மட்டுமே. அதாவது அதிகபட்சம் 250 கம்பெனிகள்.

ஆனால், இந்த 1.35% கம்பெனிகள் தான் இந்தியாவின் மொத்த CSR செலவினத்தில் 53% வரை பங்களிப்பு செய்துள்ளன. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட 69,800 கோடியில், சுமார் 36,994 கோடி ரூபாய், சராசரியாக 250 நிறுவனங்களால் மட்டும் செலவிடப்பட்டவை.

இந்த 250 கம்பெனிகளுக்குள் குறைந்தது 50 பொதுத்துறை நிறுவனங்கள் வந்துவிடும். அவற்றில் பல, ஆண்டுதோறும் சில 100 கோடியை CSR க்கு ஒதுக்குகின்றன. எனில், 10 கோடிக்கு மேல் CSR நிதி ஒதுக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகபட்சம் 180-200. இவை சுமார் 24000 கோடி ரூபாயை CSR நிதியாக செலவிட்டுள்ளன.

இக்கம்பெனிகள், மோடி உருவாக்கியுள்ள PM Cares-க்கு அளிக்கும் நிதியை, இந்த CSR-ன் கீழ் கணக்கு காட்டிக் கொள்ளலாம்.

சிறப்பு என்ன தெரியுமா?

PM Care-க்கு அளித்தால் ‘மட்டும் தான்’ CSR நிதியாக கணக்கு காட்ட முடியும். மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கினால், அதை கணக்குக்காட்ட முடியாது.

கேட்டால், மாநிலத்துக்கு நிதி வழங்கி CSR ஒதுக்கீட்டில் கணக்கு காட்ட வேண்டுமா?

‘மாநில பேரிடர் மேலாண்மை ஆணையருக்கு நிதி வழங்குங்கள்’ என்கிறது மத்திய அரசு.

தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையத்தின் இணையதளத்துக்கு சென்று பார்த்தால், பேரிடர் நிதி கொடுக்க வேண்டுமானால், ‘முதலமைச்சர் நிவாரண நிதிக்குத்தான் கொடுக்கும் வசதியுள்ளது’. மாநில பேரிடர் ஆணையருக்கு என்று தனியாக இல்லை.

ஏன் இவ்வளவு குழப்பம்? மாநில முதலமைச்சர் நிதி திரட்டலையும் CSRன் கீழ் கொண்டு வந்தால் என்ன?

கேட்டால், காங்கிரஸ் கொண்டு வந்த 2013 கம்பெனிகள் சட்டம் தான் காரணம் என்கிறார்கள் பாஜகவின் ஊடக வாய்மூலங்கள்.

2013 சட்டப்படி, ‘2% குறைந்தபட்ச செலவு’ என்கிற அளவுக்கு உட்பட்டு, மாநில முதலமைச்சர் நிதிக்கு கொடுத்தால், அந்தத்தொகை CSR-ன் கீழ் வராது. மாறாக 2% செலவுக்கு மேல் கூடுதல் நிதியை, CSR நிதியாக ஒதுக்கினால், அதை மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கலாம். அந்த நிதியை CSR கணக்கில் காட்டலாம்.

இவ்வளவு எல்லாம் ஏன், 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு, ஸ்வட்ச் பாரத், கங்கை தூய்மைத்திட்டம் போன்றவற்றுக்கு நிதி வழங்கினாலும், அதை 2% தொகைக்கு உட்பட்டே CSR நிதியாக ஏற்றுக்கொள்ளலாம் என கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் சாதாரண அறிவிப்பாணை மூலம் எளிமையாக அறிவித்தது.

அப்படி ஏன் இப்போது, மாநில முதலமைச்சர் நிதி விவகாரத்திலும் அறிவிக்கக்கூடாது?

மத்திய அரசிடம் பதில் இல்லை.

மாறாக, ஒட்டுமொத்த CSR- சட்டத்தையும் மாற்றப்போவதாக அறிவித்து மக்களிடம் கருத்து கேட்க தொடங்கியுள்ளது மோடி அரசு.

கடந்த 5 ஆண்டுகளில், CSR நிதியிலிருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு வந்த தொகை 757 கோடி. ஆனால், மோடி அறிவித்த PM care-க்கு ஒரே வாரத்தில் 6500 கோடி வசூலானது. இவற்றில் மிகப்பெரும்பான்மையான பணம், தனியார் கார்ப்பரேட்டுகளுடையது.

இந்த பணம் அனைத்துக்கும் 100% வருமான வரி விலக்கும் உண்டு. வருமான வரித்துறையின் 80G பிரிவு இவ்விலக்கை அங்கீகரிக்கிறது. ஆனால், பிரிவு 80G – ன் படி, ‘பணமாக’ கொடுத்தால் மட்டும் தான் வரிவிலக்கு. பொருளாக கொடுத்தால் விலக்கு கிடையாது. அதனால்தான், பல கார்ப்பரேட்கள் பணமாக கொடுக்கின்றன.

காங்கிரஸ் ஆட்சியில், 2014ல் இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டபோதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது கார்ப்பரேட்கள் நிதி மோசடி செய்யவே வழிவகுக்கும் என கண்டனங்கள் எழுந்தன.
இப்போது, PM Cares-க்கு கீழே வழங்கப்படும் நிதிகளின் தன்மை இன்னமும் சந்தேகங்களை எழுப்புகிறது. ஏனெனில், CSR விதி, குறைந்தபட்சம் 2% தொகையை செலவிட வேண்டும் என்று மட்டும் தான் சொல்கிறது. அதிகபட்சம் எவ்வளவு என கணக்கு கிடையாது.

உணவு, உடை, பாதுகாப்பு என பல்வேறு வடிவங்களில் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; எனில், எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கு காட்டலாம். அதற்கு உதாரணம் தான், 2%க்கு மேல் செலவு செய்தால், மாநில முதலமைச்சர் நிதியும் CSR-ல் சேர்க்கப்படும் என்கிற சரத்து.

தனியார் ஏஜென்சி அல்லது அறக்கட்டளை மூலம் உதவுவதை CSR விதிகள் அங்கீகரிக்கிறது. இதைப்பயன்படுத்தி நடக்கும் இடைத்தரகர் வியாபாரம், மோசடிகள் மிக மிக அதிகம் என இந்திய கார்ப்பரேட் விவகார நிறுவனம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.

இப்போது, மோடியின் PM cares பெயரில், ஒரு பேரழிவுக்கு மத்தியில், அரசாங்கத்தின் மூலமாகவே கூச்சமில்லாமல் அப்படியான தவறுகள் நடக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

மோடியின் இந்தத்திட்டம் என்பது முழுக்க முழுக்க கொரோனா எதிர்ப்புக்கானது. தனித்துவமானது. இந்த நிதியை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. ஆனால், நேருவின் நிவாரண நிதி திட்டம் அனைத்து பேரிடர்களுக்குமானது. எனவே, தனித்துவமான இந்த நிதி சரியாக செலவழிக்கப்படும்’ என்கிறார்கள் இந்துத்துவர்கள்.

நேரு கொண்டு வந்த பிரதமர் நிவாரண நிதி அனைத்து பேரிடர்களுக்குமானது என்பது உண்மை. பேரிடர் மட்டுமல்ல, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, ஆசிட் வீச்சு போன்றவற்றுக்காகக் கூட நேருவின் பிரதமர் நிவாரண நிதியை பயன்படுத்தலாம்.

Vivek Gananathan


Share this News:

Leave a Reply