வருமானவரி வழக்கு ஒன்றில், பிரபல வோடஃபோன் நிறுவனத்திற்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல தொலைதொடர்பு நிறுவனமான வோடஃபோன், கடந்த 2007 ஆம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்திடமிருந்து அதன் 67 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 11.5 பில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. இதற்கான வருமான வரியாக ரூ 2,500 கோடியை வருமான வரித்துறை வோடஃபோன் நிறுவனத்திடமிருந்து பிடித்துக் கொண்டது.
இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வோடஃபோன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், வருமான வரித்துறையின் நடவடிக்கை சரியானதுதான் என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து வோடஃபோன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இன்று இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை 2,500 கோடி ரூபாயை 4 விழுக்காடு வட்டியுடன் திருப்பி தர வேண்டும்" என அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. அரசின் முக்கிய திட்டங்களுக்கு வருவாய் தேவைப்படுகிறது. இது குறித்து அனைத்து வழிகளிலும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது" என மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
4 விழுக்காடு வட்டியுடன் வோடஃபோன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய இப்பெரிய தொகை, மத்திய அரசின் பட்ஜெட்டில் துண்டு விழவைக்கும் என்பதால் மத்திய நிதியமைச்சகம் என்ன செய்யலாம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|