கடம்பன் - சினிமா விமர்சனம்!

April 14, 2017

ஆர்யா, கேத்தரின் தெரசா நடிப்பில் யுவன் இசையில் ராகவா இயக்கத்தில் ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் வந்திருக்கும் படம் கடம்பன்.

சமீபகாலமாக தொடர் தோல்வியில் உள்ள ஆர்யாவுக்கு கடம்பன் வெற்றியை கொடுக்குமா பார்க்கலாம்...

ஆர்யா தான் அந்த கடம்ப மலைக்காட்டின் ராஜா என்று சொல்லலாம். காட்டை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் இவர் அதை பாதுகாப்பதைக் குறிக்கோளாக கொண்டுள்ளார்.

மலைவாசி மக்கள் கூட்டத்தில் ஆர்யாவுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இதற்கு காரணம் மூதாதையருக்கு பிறகு அவரின் திறமைகள், நுணுக்கங்கள் எல்லாம் இவரிடம் உள்ளதே. ஆர்யாவின் மீதுள்ள பொறாமையால் எதிரி போல செயல்படுகிறார் ஹீரோயின் கேத்ரின் தெரேசாவின் அண்ணன். கேத்ரின் அவ்வப்போது ஆர்யாவுக்கு காதல் வலை வீசுகிறார்.

செழிப்பாக போகும் கடம்பவனம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் தங்களுக்கு ஏதோ பெரிய துன்பம் வரப்போவதை அவர்களுக்கே உரிய பாணியில் தெரிந்துகொள்கிறார்கள். மும்பையிலிருந்து தமிழுக்கு வில்லனாக வந்துள்ள தீப் ராஜ், பெரிய தொழிலதிபர், அவர் காட்டை அழித்து கோடி கோடியாய் சம்பாதிக்க ஆசைபட்டு கடம்பவனத்தை குறிவைக்கிறார்.

வனத்துறை அதிகாரிகள், ட்ரஸ்ட் நடத்தும் ஒய்.ஜி.மகேந்திரன் அவரது மகள் மதுவந்தி ஆகியோர் பணத்திற்காக வில்லனோடு சேர்ந்து மலைவாழ் மக்களை விரட்ட நல்லது செய்வது போல் ஏமாற்றுகிறார்கள். காட்டை காப்பாற்ற கோர தாக்குதல்களை சந்திக்கும் இந்த மக்களின் சமூகம் என்ன ஆனது? ஆர்யா என்ன செய்தார், கேத்ரின் காதல் கைகூடியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆர்யா ஓப்பனிங்கில் வீர தீர சாகசங்கள் எல்லாம் செய்கிறார். இந்த படத்திற்காக அவர் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது. அவரை இதற்காக பாராட்டலாம்.

கேத்ரின் தெரேசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பது சற்று வித்தியாசமாக உள்ளது. ஆனால் இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒரு சில இடங்களில் தான். தன்னுடைய நடிப்பை புரிந்து நடித்திருக்கிறார்.

அதே போல இவரின் அண்ணனாக வருபவர் தீடீரென ஆர்யாவுடன் சண்டை போடுவதும், பின் அவருடன் ஒன்று சேர்ந்துகொள்வது சற்று யோசிக்க வைக்கிறது. அறக்கட்டளை மூலம் ஒய்.ஜி., மதுவந்தி ஆகியோர் ஆர்யாவுக்கு உதவி செய்வது போல தாங்கள் காய் நகர்த்துவதும், பின் ஆர்யா அவர்களுக்கு எதிராக மாறுவதும் கொஞ்சம் ட்விஸ்ட்.

சோஷியல் மெஸேஜுடன் வந்திருக்கும் கடம்பன் பார்க்கலாம்.

-தல தளபதி

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!