நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம்!

February 26, 2018
பகிருங்கள்:

துபாய்(26 பிப் 2018): மறைந்த நடிகை  ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

துபாயில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி (54) எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் நேற்று மரணமடைந்தார்.

உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஸ்ரீதேவியின் உடல் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலின் முக்கிய உறுப்புகள் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

துபாய் நாட்டில் தடயவில் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர்தான் பிணவறையில் இருந்து உடல்களை உறவினர்கள் பெற்றுச் செல்ல முடியும் என்ற நிலையில் ஸ்ரீதேவியின் தடயவில் பரிசோதனை முடிவுகள் கிடப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இன்று மாலை மும்பைக்கு ஸ்ரீதேவியின் உடலை எடுத்து வருவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை குறித்து முழுமையான அறிக்கை தயாராகாத காரணத்தால், அவரது உடல் நாளை இந்தியாவுக்கு அனுப்பப்படும் எனவும், இறுதிக்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகே அவரது குடும்பத்தாரிடம் ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைக்கப்படும் என்பதால், இன்று இந்தியாவுக்கு அனுப்ப வாய்ப்பில்லை எனவும் துபாய் போலீசார் தெரிவித்துள்ளதாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது உடல் திங்களன்று இந்தியா கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!