யுவன் சங்கர் ராஜாவின் ஆடி காருடன் ஓட்டுநர் மாயம்!

ஏப்ரல் 03, 2018 950

சென்னை (03 ஏப் 2018): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் உயர் ரக ஆடி காருடன் அவரது ஓட்டுநர் நவாஸ் தலைமறைவாகியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா திருமணமாகி மனைவியுடன் சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார்.

இவரது மனைவியின் பயன்பாட்டுக்காக ஆடி ஏ-6 உயர் ரக கார் ஒன்றை வைத்துள்ளனர். கார் ஓட்டுவதற்கு நவாஸ்கான் சாதிக்(34) என்கிற ஓட்டுநரை நியமித்துள்ளனர்.

நேற்று மாலை 5-00 மணி அளவில் வீட்டில் யுவன் சங்கர் ராஜாவின்  மனைவியும் உறவினர்களும் இருந்துள்ளனர். யாருடைய அனுமதியும் இன்றி, ஓட்டுநர் நவாஸ் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் இரவுவரை திரும்ப வரவில்லை.

போன் செய்தபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. காருடன் ஓட்டுநர் நவாஸ் தலைமறைவானது தெரிய வந்தது. சம்பவம் நடந்தபோது யுவன் வீட்டில் இல்லை. மதுரையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. விலை உயர்ந்த ஆடி காரை அபேஸ் செய்த ஓட்டுநர் நவாஸை போலீசார் வலை விரித்து தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...