ஆண்டனி - சினிமா ஒரு புதிய முயற்சி!

ஜூன் 01, 2018 542

சமீப காலமாக இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டிற்கு தந்து வருகின்றனர், அந்த வகையில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் ஆண்டனி.

ஹாலிவுட்டில் இது போல் பல திரைப்படங்கள் வந்துள்ளது, அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக இப்படி ஒரு கதைக்களத்தை கொண்டு வந்ததற்கே இயக்குனர் குட்டி குமாருக்கு பாராட்டுக்கள்.

படத்தின் துவக்கத்திலேயே ஹீரோ ஆண்டனி(நிஷாந்த்) ஒரு காரில் மயக்கத்துடன் இருக்கின்றார். விடிந்தால் ஆண்டனிக்கு திருமணம். ஆனால், இவர் காருடன் மண்ணில் புதைந்து கிடக்கின்றார், யார் தன்னை இப்படி செய்தது, ஏன் இப்படி ஆனது என்று ஆண்டனிக்கே ஆச்சரியம்.

இரவு முழுவதும் தன்னுடன் இருந்த மகன் எங்கே போனான் என்று அவரை தேடி ஆண்டனியின் தந்தை முன்னாள் போலிஸ் அதிகாரி லால் தேடி செல்ல, ஆண்டனி அதிலிருந்து வெளியே வந்தாரா, காதலியை மணந்தாரா? என்பதே மீதிக்கதை.

நாம் முன்பே கூறியது போல் இது போல் பல படங்கள் ஹாலிவுட்டில் வந்துள்ளது, எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமென்றால் ரகுமான் இசையில் டேனி பாயோல் இயக்கத்தில் வெளிவந்த 127 ஹவர்ஸ் படம் கூட இதே கான்செப்ட் தான். அதேபோல் கொரியாவிலும் டனல் என்ற படம் இதே சாயலில் வந்துள்ளது, இந்த மாதிரி படம் என்றாலே பதட்டம் நம்மிடம் தானாகவே தொற்றிக்கொள்ளும், அதிலும் இதே சாயலில் ஹாலிவுட்டில் வெளிவந்த பரிட் என்ற படத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

இப்படி பல படங்களின் சாயல் தெரிந்தாலும், முதல் முயற்சி என்பதால் வரவேற்கலாம், அதே நேரத்தில் ஹீரோ நிஷாந்த் மண்ணுக்குள் புதைந்து அவர் படும் கஷ்டம் நமக்கும் கொஞ்சம் பதட்டம் ஏற்படுகின்றது. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், லாலும் மகனை தேடும் அப்பாவாக ஒரு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

சிவாத்மிகாவின் இசை படத்திற்கு பெரும் பலம், அதை விட பாலாஜியின் ஒளிப்பதிவு மண்ணிற்குள் புதைந்து இருக்கும் ஹீரோவின் பதட்டத்தை நம்மிடம் தொற்ற வைக்கின்றது. இத்தனை சுவாரஸ்ய கதையாக இருந்தாலும், அதை தொடர்ந்து சுவாரஸ்யமாக எடுத்து செல்ல முடியாமல் ஒரு சில இடங்களில் இயக்குனர் தடுமாறுகின்றார்.

திரைக்கதையில் சுவாரஸ்யம் போதாது. எனினும் புதிய முயற்சிக்காக பாராட்டலாம்.

-தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...