காலா விநியோகஸ்தர் அலுவலகம் சூறை!

June 06, 2018

பெங்களூரு (06 ஜூன் 2018): பெங்களூரில் காலா திரைப்பட விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப் பட்டுள்ளன.

'காலா' திரைப்படம் நாளை (ஜூன் 7) வெளியாக உள்ள‌து. காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு ஆதரவாகப் பேசியதால், அவரது திரைப்படமான `காலா’, கர்நாடகாவில் வெளியாகக் கூடாது என கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, 'காலா' திரைப்படத்தை கர்நாடகாவில் தடைசெய்வதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள் மட்டும் கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் நாளை 150 திரையரங்குகளில் காலா படம் வெளியாக உள்ளது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வெளியீட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

இதனிடையே கர்நாடகா ரக்ஷனா வேதிக்கா அமைப்பைச் சேர்ந்தவர்கள், 'காலா' பட வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா அரசைக் கண்டித்தும் 'காலா' படத்திற்கு எதிராகவும் அவர்கள் கண்டன முழக்கம் எழுப்பினர். அப்போது, பெங்களூருவில் 'காலா' விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

Search!