காலா - சினிமா விமர்சனம்!

June 07, 2018

ரஞ்சித் - ரஜினி கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் காலா..

நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு.

அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார்.

அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கு எதிராகவும் பல சதி திட்டங்களை நானா பட்னேக்கர் தீட்ட அதை காலா எப்படி முறியடிக்கின்றார் என்பதே மீதிக்கதை.

சூப்பர்ஸ்டார் இஸ் பேக் என்று தான் சொல்ல வேண்டும், 67 வயதிலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு. மனைவியிடம் குறும்பு, ரொமான்ஸ், முன்னாள் காதலியிடம் ஏக்கம், கியாரே செட்டிங்கா என்று அதிர விட்டு மழையில் அடுத்த காட்சியில் இறங்கி அடிப்பது என என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் என நிரூபித்துவிட்டார்.

ரஜினி படம் என்றால் அவரை சுற்றி மட்டும் கதை இல்லாமல் தாராவி அதை சுற்றி இருக்கும் மக்கள், காலாவின் குடும்பம் என அனைவருக்குமே படத்தில்.முக்கிய பங்கு உள்ளது.

படத்தின் அடிப்படையே நிலம் தான், அதை சுற்றி கதை நகர்கின்றது. அந்த விதத்தில் ரஞ்சித் நிலத்தின் முக்கியதுவத்தை வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்துள்ளார்.

ஒரு சிறு குழந்தை காலில் விழ வர, யார் காலிலும் விழக்கூடாது என ரஜினி அட்வைஸ் சொல்வது. காலில் விழுவது சமத்துவம் இல்லை, கைக்கொடுத்து வரவேற்க வேண்டும், அதுதான் ஈகுவாலிட்டி என பாடமே எடுத்துள்ளார்.

அதிலும் முதன் முறையாக இராவணன் ஜெயிக்கிறான், அதை கதை சொல்லி கிளைமேக்ஸாக கொண்டு போன விதம் சூப்பர்.

அதேநேரத்தில் காலா தாராவியையே ஆள்கின்றார் என்பது கார்ட்டூனாக கதை சொல்கின்றனர், அதில் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். மேலும் ஆளும் கட்சியை ரஜினியை வைத்தே ரஞ்சித் ஆட்டிவைத்தது சாமர்த்தியம் என்றாலும், ரஜினி போராடுவோம் என்று சொல்லும் போது கொஞ்சம் சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.

ரஜினி சொன்னது போல் ரகுவரனுக்கு பிறகு சரியான வில்லனாக டப் கொடுத்துள்ளார் நானா பட்னேக்கர்.

படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவும் இசையும். அதிலும் பின்னணியில் அசத்தியிருக்கிறார் சந்தோஷ்.

ஆனால் ரஜினி ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களுக்கு இது ஒரு ஆவரேஜ் சினிமாதான்.

-தல தளபதி

Search!