கமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு!

ஜூன் 24, 2018 919

சென்னை (24 ஜூன்2018): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பெஃப்சி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஜுன் 17 -ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் 16 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். இதற்காக பூந்தமல்லி சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கவனிக்க இம்முறை 60 கேமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினம்தோறும் 400 பேர் இந்த நிகழ்ச்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வெளிமாநில ஊழியர்களை பயன்படுத்துவதாக பெஃப்சி அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்காக பெஃப்சி சம்மேளனத்தின் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் திரைப்பட துறைக்கும் , தொழிலாளர்களுக்குமான பிரச்சனை சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆனால் பிக் பாஸ் தற்போது பிரச்சனையாகியுள்ளது. கடந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தும் போது கோரிக்கை வைத்தோம். அப்போது 50% தொழிலாளர்களை வேலைக்கு வைத்தனர். அடுத்த முறை திரைப்பட தொழிலாளர்களையோ அல்லது சம்மேள தொழிலாளர்களையோ வேலைக்கு வைக்குமாறு உறுதி அளித்தனர். ஆனால் இந்த முறை அவர்கள் அதை கடைப்பிடிக்கவில்லை . 400 பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேலை பார்க்கின்றனர் அதில் 41 பேர் மட்டுமே பெஃப்சி தொழிலாளர்கள் இடம் பெற்றுள்ளனர் எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர் , பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினருக்கு 2 நாள் அவகாசம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், ஜூன்29 - ல் சின்னத்திரை படப்பிடிப்புகளை ரத்து செய்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கமல்ஹாசனும் பெஃப்சி அமைப்பின் உறுப்பினர் தான் என்று தெரிவித்த ஆர்.கே.செல்வமணி, கடந்த முறை இவ்வாறான பிரச்னை எழுந்த போது அவர் தான் தீர்த்துவைத்தார் என்றும் இந்த முறையும் தீர்த்து வைப்பார் என்றும் நம்புவதாக கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினர் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் மீறும் பட்சத்தில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...