பியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்

ஆகஸ்ட் 10, 2018 1000

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம் பியார் பிரேமா காதல்.

ஹரிஷ் கல்யாண் பல மாதங்களாக பக்கத்து கம்பெனியில் வேலை பார்க்கும் ரைஸாவை ஒரு தலையாக காதலிக்கின்றார். திடீரென்று ஒருநாள் அவருக்கே ஷாக் கொடுக்கின்றார் ரைஸா. ஆம், ஹரிஷ் கல்யாண் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே ரைஸாவும் சேர, அதை விட ஷாக்காக ரைஸாவே முன்வந்து ஹரிஸிடம் பேசுகின்றார்.

அதன் பிறகு இவர்கள் பேச்சு, பழக்கம் எல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, ஹரிஷ் திருமணம் என்று வந்து நிற்கின்றார், ரைஸாவோ நான் நட்பாக தான் பழகினேன், திருமணம் செட் ஆகாது என்கின்றார். மேலும், எனக்கு கனவுகள் நிறையவுள்ளது என்றும் சொல்ல, பிறகு இவர்களுக்குள் வெடிக்கும் செல்லமான ஈகோ, ஒரு ஷாக்கிங்கான பிரிவு என்று கலகலப்பாக சொல்லியிருக்கின்றார் அறிமுக இயக்குனர் இளன்.

ஹரிஷ் கல்யாண், ரைஸா இருவருமே நடித்துள்ளார்கள் என்று சொல்வதை விட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு தியேட்டரில் உள்ளவர்களே வெட்கப்பட்டு தலை குனிந்தாலும் ஆச்சரியமில்லை. ஹரிஷ், ரைஸா பாஸ் மார்க். படம் முழுவதுமே இவர்களை சுற்றியே கதை நகர்ந்தாலும், அவ்வப்போது தீப்ஸ், முனிஷ்காந்த் வரும் காட்சிகள் காமெடிக்கு பஞ்சமில்லை. அதிலும் முனிஷ்காந்திடம் ஹரிஷ் அறிவுரை கேட்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. அதேபோல் அறிமுக நடிகர் தீப்ஸும், ரைஸா, ஹரிஷ் ஆபிஸிலேயே ரொமான்ஸ் செய்வதை பார்த்து, ‘ஹிம்ம் சூப்பர், கொஞ்ச நேரத்திற்கு இங்கு ப்ளம்பிங் வேலை நடக்கின்றது, யாரும் வராதீர்கள்’ என்று தன் பங்கிற்கு கவுண்டர் கொடுத்து மனதில் நிற்கின்றார்.

முதல் படத்திலேயே ஒரு சர்ச்சையான டாபிக், லிவிங்-டு-கெதர், அதை இளன் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. ஏனெனில் இப்படத்தின் முடிவில் பெற்றோர்களே ‘அட இதில் என்ன தப்பு இருக்கின்றது’ என சொல்ல வைத்துவிடுவார் போல, முதல் படத்திலேயே முத்திரை.

படம் முழுவதும் ரைஸா, ஹரிஷ் காதல் காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அதற்கு உயிர் கொடுத்ததே இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் தான். இது தான் யுவனுக்கான களம் என்று நிரூபித்துவிட்டார், இப்படி ஒரு ஆல்பத்தை கேட்டு எத்தனை நாள் ஆகுது என்று நம்மையே கேட்க வைத்துவிட்டார். அதிலும் பின்னணியில் யுவன் என்றுமே முன்னணி தான்.

படத்தில் இவர்களை தாண்டி நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, ஹரிஷின் அப்பாவாக நடித்திருப்பவர் என பலரும் மனதில் நிற்கின்றனர். கலகலப்பாக செல்லும் முதல் பாதி, இரண்டாம் பாதியில் ஒரு சில இடங்கள் மட்டுமே கொஞ்சம் மெதுவாக நகர்கின்றது. அதையும் சேர்த்து கிளைமேக்ஸில் ஸ்கோர் செய்து விடுகின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவும் செம்ம கலர்புல்லாக இருக்கின்றது, வசனங்களும் இன்றைய ட்ரெண்ட் வார்த்தைகளை பயன்படுத்தியது எளிதில் இளைஞர்களை சென்றடையும், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், ட்ரைலரில் வந்த மெடிக்கல் ஷாப் காமெடி முதல், கிளைமேக்ஸில் தங்களுக்கு எது முக்கியம் என்று ஹரிஷ், ரைஸா சீரியஸாக பேசும் இடத்திலும் சரி கச்சிதமான வசனங்கள்.

இந்த கால ட்ரெண்ட் காதலர்களுக்கான கொண்டாட்டம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...