நடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது!

August 21, 2018

சென்னை (21 ஆக 2018): நடிகர் கமல் வீட்டில் நுழைந்த மர்ம நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கமலின் வீட்டில் இன்று காலை ஒரு வாலிபர் அத்து மீறி புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் இன்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டின் முன்பக்க இரும்பு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். பின்னர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து சென்று வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

அவரது பெயர் மலைச்சாமி என்று விசாரணையில் தெரிய வந்தது. புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ள மலைச்சாமி அவரை பார்ப்பதற்காகவே சென்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் கமல் வேகம் காட்டி வரும் நிலையில் அவரது வீட்டில் மர்ம நபர் புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடக்கிறதா? என்கிற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.

இன்று அதிகாலையில் வாலிபர் மலைச்சாமி கமல் வீட்டில் புகுந்தபோது அங்கு காவலாளி மட்டுமே இருந்தார். கமல் வீட்டில் இல்லை. அவர் நியூயார்க் சென்றுள்ளார். இருப்பினும் கமல் வீட்டுக்கு வந்ததற்கான நோக்கம் குறித்து மலைச்சாமியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

2 மாதத்திற்கு முன்பும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் மர்ம வாலிபர் ஒருவர் நுழைந்தார். சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த அவரை காவலாளிகள் மடக்கி பிடித்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் தன்னை கமல் ரசிகர் என்று கூறினார். அவரை பார்ப்பதற்காகவே வந்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!