மேற்கு தொடர்ச்சி மலை - சினிமா விமர்சனம்!

ஆகஸ்ட் 24, 2018 958

தமிழ் சினிமாவை கொண்டாடுவதற்காக அபூர்வமாக சில படங்கள் அவ்வப்போது வரும் அந்த வகையில் வந்திருக்கும் படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை.

தேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

ரங்கசாமி எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம் ரங்கசாமி, வனகாளி என பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து செல்கின்றது.

இவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நம் ஜெனரேஷனுக்கு இது படம் இல்லை பாடம்.

அதிலும் ஒரு ஏழைக்கிழவன் தன் பெருமையை பேசும் இடமெல்லாம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிரட்டல். படத்தின் உயிராக இளையராஜாவின் பின்னணி இசை, நம்மை கதையுடன் கையை பிடித்து பயணிக்க பயன்படுகின்றது.

மேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதை தட்டிச்சென்றது, இந்த படம் தயாரித்ததற்காக நான் பெருமை படுகின்றேன் என்று விஜய் சேதுபதி ஏற்கனவே கூறியிருந்தார்.

அவரின் பெருமை நாம் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கும் போது அனுபவிப்போம், ஏனெனில் உலகப்படங்களுக்கு நிகரான படம் தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

- தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...