நடிகர் விஷாலுக்கு ஒரு குப்பை கதை தயாரிப்பாளர் அஸ்லம் பரபரப்பு கோரிக்கை!

அக்டோபர் 08, 2018 681

சென்னை (08 அக் 2018): நடிகர் விஷாலுக்கு ஒரு குப்பை கதை திரைப்பட தயாரிப்பாளர் அஸ்லம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அவர்களுக்கு "ஒரு குப்பைக் கதை" படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம் எழுதும் மடல்

தங்களை நேரில் சந்திக்க பல முறை நேரம் கேட்டும் சக உறுப்பினரை சந்திக்ககூட நேரமில்லாத சங்கத்தலைவர், படிக்கவாவது நேரமிருக்குமா? என்ற அவநம்பிக்கையில் இந்தப் பதிவு.

(தேர்தல் வெற்றிக்காக மட்டுமில்லாமல் உண்மையான உணர்வுடன் தான்) பைரஸி ஒழிப்புக்காக தாங்கள் பேசியது செயல்பட்டது அனைத்தும் உண்மை என்றால்.. நான் எந்த அரசியல்வாதிக்கும்

எந்த பணக்கார தியேட்டர் முதலாளிகளுக்கும் எந்த கொம்பனுக்கும் பயப்படமாட்டேன் என்று தைரியமாக சொன்னது உண்மை என்றால், யாரும் என்னை விலை பேச முடியாது என்று சொன்னது உண்மை என்றால், துரோகிகளை ஒழித்துக்கட்டி இந்த சிஸ்டத்தை மாற்றியே தீருவேன் அதற்காக நான் நடிப்பதை கூட தியாகம் செய்வேன் என்று, சவால் விட்டது உண்மை என்றால், தயாரிப்பாளர்களின் சந்தோஷங்கள் மட்டுமே எனது சந்தோஷம் என்று சொன்னது உண்மை என்றால், நீங்கள் உண்மையாகவே உண்மையாளராக, நேர்மையாளர் என்றால், எல்லாவற்றுக்கும் மேலாக எங்களை முதலாளி என்று அன்பாக அழைத்தது உண்மை என்றால், இன்னும் பல பல வாக்குறுதிகள் அனைத்தும் அள்ளித் தெளித்தது உண்மை என்றால், எ(உ)ங்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதை பதிவிடுகிறேன்.

சண்டக்கோழி டூ' திரைப்படம் வரும் அக்டோபர் 18 - ஆம் தேதி ரிலீஸாகப் போகிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெற எல்லாம் வல்லஇறைனை பிரார்த்திக்கிறேன். பைரஸி எடுத்து மாட்டிக் கொண்ட திருட்டு தியேட்டர்களுக்கு

1.(மயிலாடுதுறை கோமதி)
2 (கரூர் எல்லோரா)

சம்பந்தப்பட்ட திருட்டு தியேட்டர்களுக்கு படங்கள் தரக்கூடாது என்ற சங்கத்தின் பலகீனமான கட்டுப்பாட்டை மீறி பல தயாரிப்பாளர்கள் மற்றும் (நிர்வாகத்தில் உள்ள தயாரிப்பாளர்கள் உட்பட) தொடர்ந்து படங்கள் தந்து திருட்டு தியேட்டர் முதலாளிகளை வாழ வைத்து அதற்கொரு பொருந்தாத காரணத்தையும் கூறி,

இவர்களும் பாதிக்கப்பட்டு எங்களுக்கும் துரோகம் இழைப்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் பைரஸி ஒழிப்புக்காக கடுமையாக வாக்குறுதி தந்த நீங்கள் தற்சமயம் மௌனம் காப்பது பலர் தங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுக்களின் சந்தேகங்களை உருதிப்படுத்தி விடும் அளவிற்கு உள்ளது. அனுபவம் வாய்ந்த நேர்மையான தியேட்டர் முதலாளிகளும், விநியோகஸ்தர்களும் பத்திரிகையாளர்களும் (ஒரு நீதிபதி) சட்டம் தெரிந்தவர்களும் கூறும் ஒரே பதில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலமாக க்யூப் மற்றும் சம்பந்தப்பட்ட திருட்டு தியேட்டர்களுக்கு படத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்து கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று . அது நிச்சயமாக சாத்தியமே.

இதைத்தான் நானும் பல மாதங்களாக சங்க நிர்வாகிகளிடமும் தங்களிடமும் கூறி வருகிறேன் பலகீனமான பதிலும் அலட்சியமான போக்கும்தான் இதுவரை. சட்டப்படி நடவடிக்கை என்பது
நம் நாட்டில் ???????ஆகவே எக்காரணத்தைக்கொண்டும், சண்டக்கோழி டூ படத்தை கண்டிப்பாக நீங்கள் கீழ்க்கண்ட திருட்டு தியேட்டர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட அனைத்து திருட்டு தியேட்டர்களுக்கும் கண்டிப்பாக படத்தை தரக்கூடாது. (மற்ற தயாரிப்பாளர்களின் படங்களையும் தரவிடக்கூடாது.) ஒருவேளை தலைவராக இருக்கக்கூடிய தங்களால் முடியக்கூடிய இதையே அலட்சியமாக எண்ணி சங்கத்தை மதிக்காமல் எங்கள் இழப்புகளையும் மதிக்காமல் அந்த திருட்டு தியேட்டர்களுக்கு படத்தை கொடுத்தீர்களேயானால், இந்த பைரஸி ஒழிப்புப்பற்றி (மட்டுமல்ல எதைப்பற்றியும்) நீங்கள் பேசுவது ,. சவால் விடுவது , கடைகளில் ரைடு விடுவது , தியேட்டர்களில் செல்போனில் படம் எடுப்பவர்களை மெனக்கெட்டு பிடிப்பது, எல்லாம் வெறும் நாடகமே.

தாங்கள் வகிக்கும் தலைமைப் பதவிக்கும் உறுப்பினர்களுக்கும் துரோகம் செய்தவராக, தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே இந்தப் பதவிக்கு வந்தீர்கள் என்று மற்றவர்கள் கூறியதை மெய்ப்படுத்தி விட்டீர்கள் என்று எண்ணுவதை தவிர வேறு வழியில்லை. நம் சங்கத்தில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் நம்பிக்கை இழந்தவராக ஆகிவிடுவீர்கள்

பாதிக்கப்பட்ட அனைத்து தயாரிப்பாளர்கள் சார்பாக

- அஸ்லம்
"ஒரு குப்பைக்
கதை"

திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்ட தியேட்டர்கள்:

1. கிருஷ்ணகிரி முருகன் .. மனுசனா நீ

2. கிருஷ்ணகிரி நயன்தாரா .. கோலிசோடா டூ

3. மயிலாடுதுறை கோமதி .. ஒரு குப்பைக் கதை

4. கரூர் எல்லோரா .. ஒரு குப்பைக் கதை

5. ஆரணி சேத்பட் பத்மாவதி .. மிஸ்டர் சந்திரமௌலி

6. கரூர் கவிதாலயா .. தொட்ரா

7. கரூர் கவிதாலயா .. ராஜா ரங்குஸ்கி

8. பெங்களூரு சத்யம் .. இமைக்கா நொடிகள்

9. விருத்தாசலம் தியேட்டர் .. சீமராஜா

10. மங்களூர் சினிபொலிஸ் .. சீமராஜா.

தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் நடைமுறைக்கு சாத்தியமான இந்த திருட்டு தியேட்டர்களிலிருந்து, பாதிக்கப்பட்ட எங்களுக்கு நஷ்டஈடு வாங்கித் தர உங்களால் முடியும். அது மட்டுமே பாதிக்கப்பட்ட எங்களுக்கு தீர்வு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...