பிரபல நடிகரின் தாய் மர்ம நபர்களால் படுகொலை!

அக்டோபர் 25, 2018 713

பெங்களூரு (25 அக் 2018): மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸ் அவர்களின் சம்பந்தியும், துணை நடிகர் ஜெரால்ட் மில்டனின் தாயார் பெங்களூரில் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மல்லிகைபுரம் பகுதி சேர்ந்தவர் செல்வராஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, மனைவி வனஜா மற்றும் ஜெரால்ட் மில்டன் என்கிற மகனும் ஜெனிதா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜெரால்டு மில்டன் திருச்சி மாநகராட்சியின் 25-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பதவி வகித்து வந்தார். அது மட்டுமல்லாமல், திருச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராகவும், தமிழ் சினிமாக்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கத்தி சண்டை, றெக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினராகவும், தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் விஷாலுக்கு மிக நெருங்கிய நண்பராகவும் உள்ளார். மேலும் இவர் மறைந்த பிரபல நடிகர் அலெக்ஸின் மருமகன் ஆவார். அதுமட்டுமல்லாமல் கந்து வட்டி மற்றும் கள்ள நோட்டு விவகாரங்களில் சிக்கி உள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு பிறகு அரசியலில் இருந்து அமைதியாக ஒதுங்கியுள்ள ஜெரால்டு மில்டன் அவரது தொழிலையும், நடிப்பையும் கவனித்து வருகிறார்.

மேலும் ஜெரால்ட் மில்டனின் தங்கை ஜெனிதா மார்டின் என்பவரைத் திருமணம் செய்து பெங்களூருவில் உள்ள ராம்நாத் நகரில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். மகளும் மருமகனும் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருவதால் அவர்களின் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக வனஜா மகள் வீட்டில் தங்கியிருந்தார். ஜெனிதாவின் ஐந்து வயது மகன் கெல்வின் வழக்கம்போல காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியம் ஒரு மணிக்குப் பள்ளி முடிந்து, பள்ளி வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வருவது வழக்கம். கெல்வின் வாகனத்தில் இருந்து இறங்கும்போது அவரை, வனஜா அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

நேற்றுமுன்தினம் மதியம் தனது பேரன் கெல்வினை அழைத்துச் செல்வதற்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே இறங்கி வந்தார் வனஜா. அப்போது நான்கு நபர்கள் படிகளில் மேலே ஏறிச் செல்வதை கவனித்தார். அடுத்து அந்த மர்ம நபர்கள் தங்கள் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த வனஜா, படிக்கட்டுகளில் மேலே ஏறிச் சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் 4 பேரும் தனது மகளின் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து பதறிய வனஜா சத்தம் போட்டுக் கத்தினார். அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த ராம்நாத் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடந்த கொலை குறித்து ராம்நாத் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வனஜா உண்மையிலேயே நகைக்காகக் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர்களின் வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வனஜாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருச்சி கொண்டுவரப்பட்டது. அவரின் உடல் என்று திருச்சியில் நல்லடக்கம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...