சிறந்த சினிமாக்கள் தோற்பதில்லை தோற்கடிக்கப் படுகின்றன: இயக்குநர் தாமிரா வேதனை!

அக்டோபர் 26, 2018 464

சிறந்த சினிமாக்கள் வேண்டுமென்றே சிலரின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப் படுகின்றன என்று ஆண் தேவதை பட இயக்குநர் தாமிரா தெரிவித்துள்ளார்.

தாமிரா இயக்கத்தில் சமுத்திர கனி நடித்து சமீபத்தில் வெளியான படம் ஆண் தேவதை. ரெட்டை சுழி படத்திற்கு பிறகு எட்டு வருடங்கள் கழித்து நண்பர்கள் உதவியுடன் சிகரம் சினிமா என்ற நிறுவனத்தை தொடங்கி ஆண் தேவதை திரைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் தாமிரா.

ஆனால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் சிலரின் சூழ்ச்சியால் பல இடங்களில் படத்திற்கு திரையரங்கு கிடைக்காமல் மிகப் பெரிய இழப்பை சந்தித்திருக்கிறது. படம் வெளியாகும் முன்பு மாரிமுத்து என்ற விநியோகஸ்தர் மோசடி செய்து சுமார் ஒரு கோடி வரை தாமிராவுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு, தாமிராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்.

"தயாரிப்பாளராக புதியவனான எனக்கு எங்கு சென்று புகார் அளிப்பது என்று தெரியவில்லை" என்று குமுறுகிறார் தாமிரா. என்னை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு நான் என்ன பதில் கூறுவேன் என்று வேதனையோடு தெரிவித்துள்ளார் தாமிரா.

மேலும் இதுபோன்ற மோசடி காரர்களை ஃபெடரேஷன் விட்டு வைக்கக் கூடாது. சிறந்த சினிமாக்களுக்கு ஊடகங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படங்களுக்கும், பெரிய பேனர்களின் படங்களுக்கும், இடம் அளிக்கும் திரையரங்குகள் எங்களைப் போன்ற சிறிய தயாரிப்பாளர்களின் படத்திற்கும் திரையரங்குகள் அளித்து உதவ வேண்டும்.

எனக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னொரு தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே இதனை வெளியில் கூறுகிறேன் என்கிறார் தாமிரா.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...