ஏன் சார் உங்களுக்கு சொந்த சரக்கே கிடையாதா? - ஏ.ஆர்.முருகதாஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அக்டோபர் 26, 2018 822

சென்னை (26 அக் 2018): சர்க்கார் திரைப்படம் திருட்டுக் கதை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்ட நிலையில் சர்க்காருக்கு தடை விதிக்கக் கூடுமோ என அச்சம் விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

`துப்பாக்கி’, `கத்தி’ எனும் இரு ப்ளாக்பஸ்டர்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாக மீண்டும் `சர்கார்’ படத்தில் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள். ஹை-ஆக்‌ஷன் அரசியல் த்ரில்லராக இப்படம் தயாராகிவருகிறது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா என நட்சத்திர பட்டாளமே நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். டீசர், பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்து வருவதுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இன்று படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, `சர்கார்' படத்தின் கதை தன்னுடையது என ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில், ``செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதிய கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், தன்னுடைய கதையைத் திருடி `சர்கார்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். எனவே, சர்கார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். அந்தப் படத்தின் கதை என்னுடையது என்றும் அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அவசர வழக்காகத் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுந்தர், படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது மறுத்தார். ஆனால் வழக்கு குறித்து இயக்குநர் முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தர்கள் சங்கம் ஆகிய மூன்று தரப்பும் வரும் 30-ம் தேதிக்குள் ஆஜராகிப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து இருதரப்பும் ஊடகத்துக்கு எந்தவொரு செய்தியும் கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தியவர், வழக்கை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, 30-ம் தேதியில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்றால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே `கத்தி’ படத்தின்போதும் கதை பிரச்னையில் சிக்கியிருந்தார் முருகதாஸ். இந்தநிலையில் தற்போது மீண்டும் இதே போன்று சர்ச்சை வெடித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸை நெட்டிசன்கள் கலாய்க தொடங்கி விட்டனர். தொடர்ந்து திருட்டுக் கதையை படம் எடுப்பதாக அவர் மீது வரும் குற்றச் சாட்டுகளுக்கு நெட்டிசன்கள் முருகதாஸை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...