சர்க்கார் கதை திருட்டை தொடர்ந்து முருகதாசுக்கு எதிராக வரிசை கட்டும் எழுத்தாளர்கள்

அக்டோபர் 30, 2018 483

சென்னை (30 அக் 2018): கத்தி’ கதைத் திருட்டு விவகாரத்தில், குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தக் குறும்படத்தின் கதையைத் திருடி கத்தி படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எடுத்துள்ளதாக வழக்கு தொடுத்திருக்கும் இவர், நேற்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு மனு அளித்திருந்தார். அந்த மனுவில், “இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி இயக்குநர் வாய்ப்பு வேண்டுவோர் தங்களின் விவரங்களை அனுப்பலாம் என்று கடந்த 30.06.2013 அன்று குறிப்பிட்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எனது தாகபூமி குறும்பட விவரங்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் நான் பலே, தாழ்ப்பாள் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கினேன் . அதே நேரத்தில் தாகபூமி குறும்படத்தை படமாக இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தேன்.

தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படமாக இயக்குநர் முருகதாஸ் எடுத்துவிட்டார். அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நான் படக்குழுவில் உள்ள தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் நியாயம் கேட்டேன். பதில் எதுவும் வரவில்லை. பிறகு எனது வழக்கறிஞர் மூலம் முருகதாஸ், விஜய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஸ்கரன், கருணாமூர்த்தி, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.

லைக்கா நிறுவனத் தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பதில் வந்தது. ஆனால் முருகதாஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

பின்பு காப்புரிமை சட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதே வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இப்படி நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து 4 ஆண்டுகளை இழந்திருக்கிறேன்.

எனது உழைப்பை திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார். எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு (ரெட் கார்டு) கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்கார் படத்தின் சமரசத்தீர்பை வரவேற்ற அன்பு ராஜசேகர், இதுபோன்ற நடவடிக்கைகளால் வரும் காலங்களில் சிந்தனைத்திருட்டு தடுக்கப்படும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதேபோல் நான்கு ஆண்டுகளாக சட்ட ரீதியாக போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. இதனால் நாளை என்னுடைய குடுமபத்துடன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். என்னுடைய இந்தப் போராட்டத்திலும் நீதி கிடைக்கவில்லை என்றால் எனது உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...